/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போதிய மழை இல்லாததால் க.பரமத்தி விவசாயிகள் கவலை
/
போதிய மழை இல்லாததால் க.பரமத்தி விவசாயிகள் கவலை
ADDED : மே 02, 2025 01:04 AM
கரூர்
க.பரமத்தி பகுதியில், போதிய மழை இல்லாததால் மானாவாரி விளைநிலங்கள் பாலைவனமாகும் நிலைக்கு தள்ளப்படும் என, விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வானம் பார்த்த பூமியாகத்தான் உள்ளன. போதிய மழையின்மையால், விவசாய பணிகள் முடங்கி உள்ளது. க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் அமராவதி ஆறு பாய்கிறது. நல்ல மழை பெய்தால் மட்டுமே, அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.
கடந்த எட்டு ஆண்டுகளாக போதிய பருவமழை பெய்யவில்லை. இந்தாண்டும் இதே நிலை நீடிக்குமோ என விவசாயிகள் வேதனையில் உள்ளனர். இதற்கு மாறாக க,பரமத்தி பகுதியில தொடர்ந்து, 100 முதல், 107 டிகிரி வரை கோடை வெப்பம் தான் அதிகளவில் மக்களை வாட்டுகிறது. கடும் வெப்பத்தால் நிலத்தடி நீர்மட்டமும் சரிந்து வருகிறது. அடியோடு சரியும் நீர்மட்டம் காரணமாக மானாவாரி நிலங்களில் வழக்கமாக பயிரிடக்கூடிய சோளம், கம்பு, தக்காளி, எள் உள்ளிட்ட பயிர்களை இப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்யவில்லை. கிணற்றில் இருக்கும் குறைந்த அளவு நீரை கொண்டு விவசாய பணிகள் மேற்கொள்ள விவசாயிகள் தயங்குகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'மானாவாரி நிலங்களில் மழை கிடைத்தால்தான் நிலங்களை உழுது விதைக்க முடியும். தற்போது வெப்ப காற்று மட்டுமே அவ்வப்போது வீசுகிறது. மழை பெய்யாவிட்டால், நிலங்கள் அனைத்தும் பாலைவனமாக மாறிவிடும்,' என்றனர்.