ADDED : ஜூன் 03, 2026 04:14 AM
கரூர்:கரூர் மாநகராட்சி கமிஷனர் சுதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரூர் மாநகராட்சியில் உள்ள, 48 வார்டுகளில், 81,118 குடியிருப்புகள், 12,521 வணிக நிறுவனங்கள், 1,000க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ளனர். மத்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள், வீடுகள், நிறுவனங்கள், கடைகளில் சேகரமாகும் திடக்கழிவுகளுக்கு தாங்களே பொறுப்பாளராகும். எனவே, திடக்கழிவுகளை நான்கு விதமாக பிரித்து வீடுதோறும் வரும் துாய்மை பணியாளர்கள் வசம் ஒப்படை க்க வேண்டும். அதன்படி, திடக்கழிவுகளை சேகரிக்க வரும் மாநகராட்சி துாய்மை பணியாளர்களிடம், பச்சை நிற கூடையில் சமையலறை கழிவுகள், பழம் காய்கறி, உணவுக்கழிவுகள், பூக்கள் என, ஈரக்கழிவுகளை வழங்க வேண்டும்.நீல நிற கூடையில் காகிதம், அட்டை நெகிழி கழிவுகள், செய்தித்தாள்கள், பால் கவர்கள், கிழிந்த ஆடைகள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை வழங்க வேண்டும். சிவப்பு நிற கூடையில், மாதவிடாய் துணி கழிவுகள், டயப்பர்கள், கையுறைகள், நோயாளிகள் பயன்படுத்திய துணி வகைகள், மாஸ்குகள் ஆகியவற்றை வழங்க வேண்டும். கருப்பு நிற கூடையில், மின்னணு சாதனங்கள், பேட்டரிகள், மின்விளக்குகள், உடைந்த கண்ணாடிகள், பெயிண்ட் டப்பாக்கள், மருந்துகள் என, இவற்றை பொதுமக்கள் பிரித்து வழங்க வேண்டும். இந்த கழிவுகளை பெறும் துாய்மை பணியாளர்கள், அதற்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் சேகரித்து சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். கழிவுகளை பிரித்து துாய்மை பணியாளரிடம் வழங்காமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும், திடக்கழிவுகளை தெரு மற்றும் சாலையோரங்களில் துாக்கி எறிவதோ, எரிப்பதோ செய்தால் அதிகபட்ச அபராததொகை விதிக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
