கரூர் பஞ்சு குடோனில் தீ விபத்து; சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு
கரூர் பஞ்சு குடோனில் தீ விபத்து; சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு
ADDED : பிப் 13, 2026 07:51 AM

கரூர்: கரூர் வெங்கமேட்டில், பஞ்சு குடோனில் தீ விபத்து ஏற்பட்டு, சமையல் அறையில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு உண்டானது.
கரூரை சேர்ந்த மனோகரன், ஏற்றுமதி ஜவுளி உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். கரூர் வெங்கமேடு அருகே, புது குளத்துப்பாளையத்தில் திருமண மண்டபத்தை வாடகை எடுத்து பஞ்சு மற்றும் நுால்களை இருப்பு வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம், 3:00 மணிக்கு பஞ்சு இருப்பு வைக்கப்பட்ட பகுதியிலிருந்து புகை வந்தது. அங்கிருந்த பணியாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ மளமளவென பற்றி எரிந்ததால், குடோனை விட்டு பணியாளர்கள் வெளியே வந்தனர். இந்நிலையில் பரவிய தீயால். சமையல் அறையில் வைக்கப்பட்டு இருந்த, இரண்டு காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
பின்னர் கரூர், புகழூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து, மூன்று தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் வந்தனர். தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் சந்திரகுமார் தலைமையில், தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். வெடிக்காத மூன்று சிலிண்டர்களை, தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக வெளியே எடுத்து வந்து, அப்புறப்படுத்தினர். தீ விபத்தில் பஞ்சு மூட்டைகள், நுால்கள் எரிந்து நாசமாயின. இதன் மதிப்பு தெரியவில்லை. விபத்தில் மண்டபத்தின் மேற்கூரை முழுவதுமாக எரிந்து சேதமானது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
பஞ்சு இருப்பு குடோனின் பணியாளர்கள், தீ பரவ தொடங்கியவுடன் வெளியேறிதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
