/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் கதவணையில் மீன் பிடிக்கும் பணி மும்முரம்
/
மாயனுார் கதவணையில் மீன் பிடிக்கும் பணி மும்முரம்
ADDED : ஜூலை 01, 2025 12:58 AM
கரூர், மாயனுார் கதவணையில், தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரில், மீன் பிடிக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மாயனுாரில் காவிரியாற்றின் குறுக்கே, 1.5 டி.எம்.சி., தண்ணீர் தேக்கும் வகையில் கதவணை கட்டப்பட்டுள்ளது. அதில், மேட்டூர் அணை, அமராவதி அணை, பவானிசாகர் அணை மற்றும் நொய்யல் ஆற்றில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, கிளை வாய்க்கால் மற்றும் காவிரியாற்றில் பாசனத்துக்காக திறந்து விடப்படுகிறது.
இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக வினாடிக்கு, 48 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், மாயனுார் கதவணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மீனவர்கள் கதவணையில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர், திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து, மீன்களை வாங்க பொதுமக்கள், மாயனுார் கதவணைக்கு நாள்தோறும் செல்கின்றனர். இதனால், மாயனுார் கதவணையில் பிடிக்கப்படும் மீன்கள் உடனடியாக விற்பனையாகிறது. மீன்களின் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ, 80 ரூபாய் முதல், 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.