/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வேன் மீது ஆம்னி பஸ் மோதி விபத்து தந்தை, மகன் உட்பட ஐந்து பேர் பலி
/
வேன் மீது ஆம்னி பஸ் மோதி விபத்து தந்தை, மகன் உட்பட ஐந்து பேர் பலி
வேன் மீது ஆம்னி பஸ் மோதி விபத்து தந்தை, மகன் உட்பட ஐந்து பேர் பலி
வேன் மீது ஆம்னி பஸ் மோதி விபத்து தந்தை, மகன் உட்பட ஐந்து பேர் பலி
ADDED : மே 18, 2025 04:39 AM

கரூர்: கரூர் அருகே டூரிஸ்ட் வேன் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில், தந்தை, மகன் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்; 28 பேர் படுகாயமடைந்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்தவர் அருண் திருப்பதி, 40; ஆயில் கம்பெனி நடத்தி வந்தார்.
இவர், அதே பகுதியை சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என, 23 பேருடன் நேற்று முன்தினம் இரவு, டூரிஸ்ட் வேனில் சேலம் மாவட்டம், ஏற்காடுக்கு சுற்றுலா செல்ல புறப்பட்டனர்.
வேனை கோவில்பட்டி சசிக்குமார், 52, ஓட்டினார். கரூர் அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலை, வடுகப்பட்டியில், செம்மடை பிரிவு அருகே நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு வேன் வந்து கொண்டிருந்தது.
அப்போது, கர்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி, 'இன்டர்சிட்டி' என்ற ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது.
கரூர் செம்மடை பிரிவு அருகே, சின்னவடுகப்பட்டியில் இருந்து கரூர் நோக்கி, முருகன் என்பவர் ஓட்டிச்சென்ற டிராக்டர் மீது ஆம்னி பஸ் மோதியது.
அப்போது பஸ்சை நிறுத்த டிரைவர் முயற்சித்தபோது, கட்டுப் பாட்டை இழந்த பஸ், சாலை மைய தடுப்பு சுவரை தாண்டி, எதிரே கோவில்பட்டியில் இருந்த வந்த டூரிஸ்ட் வேன் மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில், வேன் அப்பளமாக நொறுங்கியது. ஆம்னி பஸ்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.
வேன் டிரைவர் சசிகுமார், வேனில் பயணம் செய்த அருண் திருப்பதி, அவரது மகன் அஸ்வின், 10, சரவணன் என்பவரின் மகள் எழில் தக்ஷனா, 13, ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, விருதுநகரை சேர்ந்த பாண்டியன் மகள் அனு ஹேமவர்த்தினி, 15, சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.
டிராக்டர் டிரைவர் முருகன், 55, ஆம்னி பஸ் டிரைவர் பெங்களூரைச் சேர்ந்த சுதன், 40, உட்பட, 28 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் மீட்கப்பட்டு, கரூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
கரூர் எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலர் விஜயபாஸ்கர் ஆகியோர் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதற்கிடையே, விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.