அரசு பள்ளி மாணவி விடுதி மாற்றும் முயற்சிக்கு எதிர்ப்பு
அரசு பள்ளி மாணவி விடுதி மாற்றும் முயற்சிக்கு எதிர்ப்பு
ADDED : செப் 02, 2026 06:59 AM
குளித்தலை:குளித்தலையில் செயல்படும், அரசு பள்ளி மாணவியருக்கான விடுதியை மாற்றம் செய்ய எதிர்ப்பு வலுத்துள்ளது.
குளித்தலை,
காவிரி நகர் பெரியார் தெருவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, 1963ல்
தொடங்கப்பட்டது. 1977-ல், அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆட்சியில்
பள்ளி மாணவியருக்கு என விடுதி கட்டப்பட்டு, மாணவியர் தங்கி பயின்று
வருகின்றனர். விடுதியில் இருந்து பள்ளிக்கு செல்ல மாணவியருக்கு
எளிதாக இருந்தது. மேலும் பாதுகாப்பாகவும் விடுதி இருந்து வருகிறது.
இதில், 33 மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்த விடுதியை, அரசு
ஆண்கள் பள்ளி விடுதிக்கு மாற்றம் செய்வதாகவும், அந்த விடுதியில் அரசு
கலைக்கல்லுாரி மாணவியரும் இணைந்து, தங்குவதற்கு முயற்சி நடந்து
வருவதாக கூறப்படுகிறது. மேலும் பள்ளி மாணவி விடுதியை, அரசு கலைக்
கல்லுாரி மாணவர்களுக்காக மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும்,
மக்கள் மத்தியில் தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், பள்ளி மாணவி
விடுதியை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யும் முயற்சியை கைவிட வேண்டும் என
பள்ளி மாணவியர், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு
தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து குளித்தலை ஆர்.டி.ஓ.,
சிவக்குமாரிடம் கவுன்சிலர் சையது உசேன், அப்பகுதி மக்கள் கொடுத்த
மனுவில், 'பள்ளி மாணவியர் விடுதியை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யக்
கூடாது' என தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கவுன்சிலர் சையது உசேன்
கூறுகையில்,''தொடர்ந்து, 50 ஆண்டுகளாக இயங்கி வரும் பள்ளி மாணவி
விடுதியை, வேறு இடத்திற்கு மாற்றினால் ஏழை எளிய மாணவியருக்கு கல்வி
பாதிப்பு ஏற்படும். மேலும் கல்லுாரி மாணவியருடன் இணைந்து தங்கி
பயின்றால், பழக்க வழக்கம் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இதே
விடுதியில் பள்ளி மாணவியர் தங்கி பயில, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும். அரசு கல்லுாரி மாணவர்களுக்கு, தனி அரசு கட்டடத்திலோ
அல்லது வாடகை கட்டடத்திலோ விடுதி செயல்பட நடவடிக்கை எடுக்க
வேண்டும்,'' என்றார்.
