சுகாதார விழிப்புணர்வு முகாம் கால்நடைகளுக்கு சிகிச்சை
சுகாதார விழிப்புணர்வு முகாம் கால்நடைகளுக்கு சிகிச்சை
ADDED : நவ 13, 2026 06:39 AM
கரூர்:கரூர்
மாவட்டம், மண்மங்கலம் ராஜிவ் காந்தி நகரில் கால்நடை
பராமரிப்புத்துறை சார்பில், கால்நடை சுகாதார மற்றும்
விழிப்புணர்வு முகாம் நடந்தது. அதை, கலெக்டர் பிரசன்னா ராமசாமி ஆய்வு
மேற்கொண்டார்.
அப்போது, அவர் கூறியதாவது:
இம்முகாம் மூலம்
நோயுற்ற கால்நடைகளுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சைகள் மற்றும் நோய்
மாதிரி பொருட்கள் பரிசோதனை செய்யப்பட்டு, கால்நடைகளுக்கு தேவையான
நோய் எதிர்ப்பு தடுப்பூசிகளுடன், கோழி கழிச்சல் நோய் தடுப்பூசி
மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கால்நடைகளுக்கு
குடற்புழு நீக்கம் மற்றும் ஆண்மை நீக்கம் செய்யப்பட்டு, இனப்பெருக்க
சிகிச்சை முறைகளான சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், மலடு
நீக்க சிறப்பு சிகிச்சை மற்றும் சினை பிடிக்காத மாடுகளுக்கு ஸ்கேன்
செய்து சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதிநவீன தொழில்நுட்பம்
மூலம் பாலினம் பிரிக்கப்பட்ட உறை விந்து பயன்படுத்தப்பட்டு, பசு
மற்றும் எருமை இனங்களுக்கு, 175 ரூபாய்- மதிப்பீட்டில் சினை ஊசிகள்
போடப்பட்டு, விவசாயிகளின் கால்நடைகளுக்கு தேவையான தாது உப்பு
கலவைகள் மற்றும் தீவன பயிர்களின் விதைகள் இலவசமாக
வழங்கப்படுகிறது.
இங்கு, 855 கால்நடைகளுக்கு உரிய மருத்துவ
சிகிச்சைகளும், நோய்த்தடுப்பு நடவடிக்கையாக, 1,057 ஆடுகளுக்கு
குடற்புழு நீக்கம், 27 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி உள்பட, 1,939
கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்
கூறினார்.
