/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை பகுதியில் கொட்டிய மழை மூழ்கியது தரைப்பாலம்; விவசாயிகள் மகிழ்ச்சி
/
குளித்தலை பகுதியில் கொட்டிய மழை மூழ்கியது தரைப்பாலம்; விவசாயிகள் மகிழ்ச்சி
குளித்தலை பகுதியில் கொட்டிய மழை மூழ்கியது தரைப்பாலம்; விவசாயிகள் மகிழ்ச்சி
குளித்தலை பகுதியில் கொட்டிய மழை மூழ்கியது தரைப்பாலம்; விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : அக் 05, 2025 01:09 AM
குளித்தலை, குளித்தலை, சிவாயம் மற்றும் வேப்பங்குடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், நெடுஞ்சாலையில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு தண்ணீர் சென்றது.
குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று அதிகாலை வரை தொடர்ந்து மழை பெய்தது. லாலாப்பேட்டை, அய்யர்மலை, பஞ்சப்பட்டி, தோகைமலை, நங்கவரம் உள்ளிட்ட பகுதியில் மழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்தது. மேலும், தாழ்வான பகுதிகளை நோக்கி வெள்ள நீர் பாய்ந்து சென்றது.
இதில் பாசன வாய்க்கால் மற்றும் ஏரி, குளங்களுக்கு மழை தண்ணீர் சென்றது. மேலும், சிவாயம் காட்டுவாரிக்கு செல்லும் மழைநீர் பாதையில், வெள்ள நீர் அதிகளவில் சென்றது. இதனால், குளித்தலை - மணப்பாறை நெடுஞ்சாலையில் உள்ள குப்பாச்சிப்பட்டியில் இருந்து வேப்பங்குடி செல்லும் நெடுஞ்சாலையில், தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு மழைநீர் சென்றது. ஆபத்தை உணராத அப்பகுதி மக்கள் சிலர் பைக்கிலும், நடந்தும் பாலத்தை கடந்து சென்றனர்.
மைலாடி பகுதியில் சாலையோரத்தில் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்தது. அப்போது அந்த வழியாக யாரும் செல்லாததால், அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. மானாவாரி நிலங்களில் பெய்த மழையால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
* கிருஷ்ணராயபுரம் அடுத்த பஞ்சப்பட்டி, போத்துராவூத்தன்பட்டி, பாப்பகாப்பட்டி, சிவாயம், வயலுார், கருப்பத்துார், கள்ளப்பள்ளி, சிந்தலவாடி, வீரீயபாளையம், சேங்கல், மகாதானபுரம், மாயனுார், மணவாசி, பழையஜெயங்கொண்டம், கிருஷ்ணராயபுரம், திருக்காம்புலியூர், கொசூர், தொட்டமங்கிணம், மத்தகிரி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்று அதிகாலை, 5:30 மணி வரை தொடர்ந்து பெய்தது. மழையால் மானாவாரி விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள எள், துவரை, சோளம், உளுந்து, மக்கச்சோளம் பயிர்களுக்கு மழை நீர் கிடைத்துள்ளது. மேலும் கிணற்று நீர் பாசன முறையில், சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நெல் பயிர்களுக்கும் மழை நீர் கிடைத்துள்ளது.
* கரூர் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று காலை, 8:00 மணி வரை பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,) குளித்தலை, 30, தோகைமலை, 13.60, கிருஷ்ணராயபுரம், 10.50, மாயனுார், 6, பஞ்சப்பட்டி, 21, கடவூர், 12, மயிலம்பட்டி, 6, பாலவிடுதி, 6 மி.மீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 8.91 மி.மீ., மழை பதிவானது.