/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாவட்டத்தில் விடிய, விடிய மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
/
மாவட்டத்தில் விடிய, விடிய மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மாவட்டத்தில் விடிய, விடிய மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மாவட்டத்தில் விடிய, விடிய மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ADDED : டிச 14, 2024 01:00 AM
கரூர், டிச. 14-
கரூர் மாவட்டத்தில் நேற்று காலை வரை விடிய, விடிய மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய, ஆழ்ந்த காற்றழுத்த பகுதி, வலு குறைந்து திசை மாறியது. இதனால் தமிழகம் முழுவதும், 13 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.
கரூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் காலை தொடங்கிய மழை, நேற்று காலை, 11:30 மணி வரை விட்டு விட்டு பெய்தது. இதனால், கரூர் அருகே தான்தோன்றிமலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கியது.
மேலும், கரூர் அருகே பெரிய குளத்துப்பாளையம் ரயில்வே குகை வழிப்பாதையில், தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். தொடர்ந்து, மழை பெய்ததால் நேற்று காமராஜர் தினசரி மார்க்கெட், கரூர், வெங்கமேடு, வேலாயுதம்பாளையம் உழவர் சந்தைகளுக்கு, பொதுமக்கள் குறைவாகவே வந்திருந்தனர்.
கரூர் மாவட்டத்தில் நேற்று, இரண்டாவது நாளாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள் வழக்கம் போல் இயங்கின. ஆனால், மாணவ, மாணவியர் குறைந்தளவில் வந்திருந்தனர். பொதுவாக, தொடர் மழை காரணமாக, கரூர் மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை நேற்றும் பாதிக்கப்பட்டது.
கடந்த, 24 மணி நேரத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை, கரூர் மாவட்டத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,) கரூர், 33.80, அரவக்குறிச்சி, 70.50, அணைப்பாளையம், 57.20, க.பரமத்தி, 39, குளித்தலை, 29.20, தோகமலை, 70.60, கிருஷ்ணராயபுரம், 35.40, மாயனுார், 43, பஞ்சப்பட்டி, 80, கடவூர், 32, பாலவிடுதி, 20, மயிலம்பட்டி, 26 மி.மீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 44.73 மி.மீ., மழை பதிவானது.
* கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரராக்கியம், கட்டளை, ரெங்கநாதபுரம், மணவாசி, மாயனுார், கிருஷ்ணராயபுரம், திருக்காம்புலியூர், மகாதானபுரம், லாலாப்பேட்டை, வேங்காம்பட்டி, மேட்டுப்பட்டி, வீரவள்ளி, வரகூர், வயலுார், பஞ்சப்பட்டி, சிவாயம் ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்தது.