தீவிரம் காட்டும் தென்மேற்கு பருவமழை மண் பரிசோதனைக்கு பெரும் எதிர்பார்ப்பு
தீவிரம் காட்டும் தென்மேற்கு பருவமழை மண் பரிசோதனைக்கு பெரும் எதிர்பார்ப்பு
ADDED : மே 06, 2026 04:50 AM
கரூர்:தென்மேற்கு
பருவமழை தீவிரம் காட்ட துவங்கவுள்ள நிலையில், விவசாய நிலங்களில் மண்
பரிசோதனை செய்து, அட்டைகள் வழங்க வேண்டும் என, விவசாயிகள்
எதிர்பார்க்கின்றனர்.
ஆண்டுதோறும், ஜூன் முதல் வாரத்தில் கேரளா
கடற்கரை பகுதியில் தென்மேற்கு பருவமழை துவங்கும். அதை தொடர்ந்து,
கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை தீவிரம்
காட்டும். செப்டம்பர் வரை, 70 சதவீத தென்மேற்கு பருவ மழை பெய்யும் என
வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அமராவதி அணை நீர்ப்பிடிப்பு
பகுதிகளில், மழை பெய்ய வாய்ப்புள்ளதால், அணையின் நீர்மட்டம் உயரும்.
இதனால், அணையில் இருந்து அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும்.
மேலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கூடுதல் மழை பெய்தால்,
கர்நாடகா அணைகளில் இருந்து உபரி
நீர் தமிழகத்துக்கு திறந்து விட
வாய்ப்பு உள்ளது. குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையில் இருந்து வரும்
ஜூன், 12ல் தண்ணீர் திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால்,
சராசரி அளவு மழை பெய்யும் மாவட்டங்களாக கரூர், திருச்சி, தஞ்சாவூர்
என கண்டறியப்பட்டுள்ளது. எனவே, உற்பத்தியை துவக்க வசதியாக மண்
பரிசோதனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள்
எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: டெல்டா
பகுதியில் கடந்தாண்டு ஜூன், 12ல், தண்ணீர் திறக்கப்பட்டது.
நடப்பாண்டு, தென்மேற்கு பருவமழை, ஒரளவுக்கு கை கொடுக்கும் என
தெரிகிறது. எனவே ஜூன், 12ல் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. காவிரி,
அமராவதி ஆறு பாயும் மாவட்டமான கரூர் மற்றும் திருச்சி, தஞ்சாவூர்
உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள, விவசாய நிலங்களில் மண்
பரிசோதனை செய்து, மண்ணின் தன்மை, என்ன பயிரிடலாம் என்பது குறித்து
விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அட்டை வழங்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தனர்.
