ADDED : பிப் 19, 2026 05:07 AM
கரூர்: க. பரமத்தி ஊராட்சி ஒன்றியம், குப்பம் பஞ்., வேலாயுதம்பாளையத்தில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட, 83 குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்கும் விழா நடந்தது. எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி, பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கி பேசியதாவது:கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களின் குடிசை வீடுகளை, நிரந்தர கான்கிரீட் வீடுகளாக மாற்ற,அரசு திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் வீடு கட்டுவதற்கு பயனாளி ஒருவருக்கு தலா, 3.50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.
ஊரக வளர்ச்சித் துறை சார்பாக வீடற்ற ஏழைகள் மற்றும் குடிசைகளில் வசிக்கும் தகுதியுள்ள நபர்கள் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு, குறைந்தபட்சம், 360 சதுர அடி பரப்பளவில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து, கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட, 83 குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீரபத்திரன், உதவி இயக்குனர் (தணிக்கை) ஞானசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
