/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மனோகரா கார்னரை கொடுத்திருந்தால் உயிரிழப்பு இருந்திருக்காது: மாஜி அமைச்சர்
/
கரூர் மனோகரா கார்னரை கொடுத்திருந்தால் உயிரிழப்பு இருந்திருக்காது: மாஜி அமைச்சர்
கரூர் மனோகரா கார்னரை கொடுத்திருந்தால் உயிரிழப்பு இருந்திருக்காது: மாஜி அமைச்சர்
கரூர் மனோகரா கார்னரை கொடுத்திருந்தால் உயிரிழப்பு இருந்திருக்காது: மாஜி அமைச்சர்
ADDED : செப் 30, 2025 01:45 AM
கரூர், '' கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, மனோகரா கார்னர் பகுதியில், த.வெ.க., கூட்டத்துக்கு அனுமதி வழங்கி இருந்தால், 41 பேர் உயிரிழந்து இருக்க மாட்டார்கள்,'' என, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூரில், த.வெ.க., கூட்டத்துக்கு சென்று காயமடைந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை, நேற்று சந்தித்து ஆறுதல் கூறிய, அ.தி.மு.க.,முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது: கரூரில் த.வெ.க., கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதி வழங்கியது, இரவு நேரத்தில் முதல்வர் வந்தது எல்லாம் அரசின் கடமை. அதை நாங்கள் குறை சொல்லவில்லை. ஆனால், இறந்தவர்களின் உடல்களை, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தில், தி.மு.க., பேனர் கட்டப்பட்டது சரியானது அல்ல. அதேபோல் குடிநீர் பாட்டிலில், கரூர் தி.மு.க.,- எம்.எல்.ஏ., அறக்கட்டளை பெயர் இருப்பதும் சரியில்லை.
அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., எழுச்சி பயண கூட்டம் நடத்த, கரூர் பஸ் ஸ்டாண்ட் மனோகரா கார்னர்
பகுதியை கேட்டோம். போலீசார் தரவில்லை. வேலுச்சாமிபுரத்தை தந்தனர். அப்போது, கரூர் தி.மு.க.,- எம்.எல்.ஏ., 'முட்டுசந்தில் கூட்டம் நடத்துகின்றனர்' என, கிண்டல் செய்தார். அதே இடத்தைதான் த.வெ.க., கூட்டத்துக்கும் தந்தனர். முட்டுசந்தில் கூட்டம் நடத்த போலீஸ் ஏன் அனுமதி தந்தது. கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே மனோகரா கார்னர் பகுதியில், த.வெ.க., கூட்டம் நடத்த அனுமதி தந்திருந்தால், 41 பேர் இறந்திருக்க மாட்டார்கள். அ.தி.மு.க.,- த.வெ.க.,வுக்கு மறுக்கப்பட்ட மனோகரா கார்னர் பகுதியில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., மற்றும் தி.மு.க.,- எம்.பி.,
கனிமொழி ஏற்கனவே பேசியுள்ளனர்.
த.வெ.க., கூட்டம் தொடர்பாக, போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. வழக்கின் விசாரணை அதிகாரியை மட்டும் மாற்றியுள்ளனர். நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக உண்மை விபரம் தெரிய, வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட ஜெ., பேரவை செயலர் நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலர் தானேஷ் முத்துக்குமார், மண்டல தகவல் தொழில்நுட்ப அணி செயலர் கவின்ராஜ் உடனிருந்தனர்.