/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு பள்ளிகளில் 'வாட்டர் பெல்' திட்டம் அமல்
/
அரசு பள்ளிகளில் 'வாட்டர் பெல்' திட்டம் அமல்
ADDED : ஜூலை 01, 2025 01:01 AM
கரூர், கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 'வாட்டர் பெல் திட்டம்' நடைமுறைக்கு வந்தது.
அரசு பள்ளிகளில், மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு நாளும் காலை, 11:00 மணி, பகல், 1:00 மணி, பிற்பகல், 3:00 மணிக்கு என மூன்று முறை 'வாட்டர் பெல்' அடிக்கப்படும், அப்போது மாணவர்கள் தண்ணீர் அருந்த வேண்டும். வெயிலின் தாக்கத்தால், குழந்தைகளிடையே நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்கவும், மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுவதை தடுக்கவும் இந்த திட்டம் கொண்டு வரப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்புபடி, நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன்படி, கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் நேற்று வாட்டர் பெல்' அடிக்கப்பட்டது. இதில், வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை, 11:00 மணிக்கு தலைமை ஆசிரியர் தர்மலிங்கம் மணி அடித்து, மாணவர்கள் தண்ணீர் குடிக்க வைக்கப்பட்டனர். அப்போது, அவர் பேசுகையில், ''சரியான அளவில் தண்ணீர் குடிப்பதால், நினைவாற்றல் அறிவாற்றல் அதிகரிக்கும்.
உடல் நலம் பராமரிக்கப்படும். தலைவலி மற்றும் சோர்வின்றி இருக்கலாம். நடத்தை மற்றும் கற்றலுக்கான மனநிலையில் முன்னேற்றம் காணப்படும். உடலியக்க செயல்பாடுகள் நன்றாக பேணப்படும். ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் மாணவர்களிடம் அதிகரிக்கும்,'' என்றார்.
இதனை செயல்படுத்தும் விதமாக ஆசிரியர்கள் வாசுகி, மனோகர், மகேஸ்வரி, வெங்கடேசன், சசிகலா ஆகியோர் அந்தந்த வகுப்பு மாணவர்களை தண்ணீர் குடிக்க வைத்தனர்.