ADDED : அக் 05, 2026 05:27 AM

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி
பகுதியில், 15 வார்டுகள் உள்ளன. இந்த, 15 வார்டுகளிலும் நாய்கள்
தொல்லையால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
மேலும், வார்டுக்கு,
50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இரவில்
சாலையில் தனியாக செல்லும்போது நாய்கள் சுற்றி வளைத்து கடித்து
விடுகின்றன. இதனால், இரவு, 10:00 மணிக்கு மேல் சாலையில் நடமாட முடியாத
நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், கால்நடைகள், வீட்டில் வளர்க்கும்
கோழிகள், அதேபோல் சிறுவர்கள் ஆகியோர் தனியாக வெளியே நடமாடினால்,
நாய்கள் சுற்றிவளைத்து கடிக்கின்றன. கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு
முன் தெருக்களில் சுற்றி திரிந்த நாய்களை பேரூராட்சி நிர்வாகம் மூலம்
பிடித்து சென்றனர். அதேபோல், தற்போது நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால்
தெரு நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என,
பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
