/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளப்பட்டி தி.மு.க.,வில் நிலவும் உட்கட்சி மோதல்
/
பள்ளப்பட்டி தி.மு.க.,வில் நிலவும் உட்கட்சி மோதல்
ADDED : பிப் 01, 2024 12:14 PM
கரூர்: பள்ளப்பட்டி தி.மு.க.,வில் நிலவும் உட்கட்சி பிரச்னையால், நகராட்சி கவுன்சிலர் கூட்டத்தை நகராட்சி துணை தலைவர் புறக்கணித்து வருகிறார்.
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகராட்சி தலைவராக, தி.மு.க.,வை சேர்ந்த முனவர்ஜான் இருந்து வருகிறார். துணைத் தலைவராக தோட்டம் பஷீர் அஹமது உள்ளார். தலைவர், துணை தலைவர் இடையில் மோதல் இருந்து வருகிறது. இதற்கிடையில், 2022ம் நகராட்சி தலைவர் முனவர்ஜான் குறித்து தகாத வார்த்தையால் பேசிய ஆடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. தொடர்ந்து, தோட்டம் பஷீர் அஹமதுவின் நகர செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் நகராட்சி செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும், கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வது இல்லை என புகார் எழுந்துள்ளது.
இது குறித்து பள்ளப்பட்டி தி.மு.க., நிர்வாகிகள் தரப்பில் இருந்து கூறியதாவது:
பள்ளப்பட்டி பகுதியில் தி.மு.க.,வில் செல்வாக்கு பெற்றவராக நகராட்சி துணை தலைவர் பஷீர் அஹமது இருந்து வருகிறார். அவருக்கு, குறிப்பிட்ட கவுன்சிலர்கள் ஆதரவு இருக்கிறது. நகராட்சி தலைவர் முனவர்ஜான் குறித்து தகாத வார்த்தையால் பேசிய ஆடியோ பிரச்னையை ஏற்படுத்தியதால், கட்சி பொறுப்பு பறிக்கப்பட்டது. கடந்த, 2022ம் ஆண்டு மார்ச் மாதம் பதவியேற்று முதல் கூட்டத்தில் மட்டும் நகராட்சி துணை தலைவர் தோட்டம் பஷீர் அஹமது கலந்துகொண்டார். அதன்
பிறகு, இரண்டு ஆண்டுகளாக நடந்த எந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதில்லை. மேலும், மூன்று கூட்டத்திற்கு மேல் பங்கேற்கவில்லை என்றால் கவுன்சிலர் பதவிக்கு ஆபத்து என்பதால், தீர்மானம் நோட்டில் மட்டும் கையெழுத்திட்டு சென்று விடுகிறார்.
பள்ளப்பட்டி தி.மு.க.,வில் நிலவும் கோஷ்டி மோதல் காரணமாக நகராட்சி பணிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. நகராட்சி ஆளும் கட்சி பெரும் பான்மையான கவுன்சிலர்கள் இருந்தும் கூட தீர்மானங்கள் நிறைவேற்றுவதில் பல்வேறு சிக்கல் இருந்து வருகிறது. இங்கு, குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை பணிகள் கூட முறையாக நடக்கவில்லை.
இவ்வாறு, அவர்கள், கூறினர்.
பள்ளப்பட்டி நகராட்சி துணைத் தலைவர் தோட்டம் பஷீர் அஹமது
கூறியதாவது: பள்ளப்பட்டி டவுன் பஞ்சாயத்தாக இருந்தபோது நடந்த கூட்டத்தில் ஆண் மற்றும் பெண் கவுன்சிலர்கள் இடையில் திரை அமைத்து கூட்டம் நடத்தப்பட்டு வந்தது. நகராட்சியாக தரம் உயர்த்திய பின், நடந்த முதல் கவுன்சிலர்கள் கூட்டத்தில், பழைய நடைமுறை போல திரை அமைத்து கூட்டம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
அவ்வாறு, இரு பாலருக்கும் இடையில் திரைபோட்டு கூட்டம் நடத்த சட்டத்தில் இடமில்லை என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்து விட்டனர். எப்போது, திரை அமைத்து கூட்டம் நடத்தப்படுகிறதோ, அப்போது தான் கூட்டத்தில் கலந்துகொள்வேன். அதுவரை கூட்டத்தில் பங்கேற்க
மாட்டேன்,
இவ்வாறு அவர் கூறினார்.