ADDED : மே 29, 2026 05:53 AM
குளித்தலை, குளித்தலை தென்கரை பாசன வாய்க்காலில், மருதுார் கிளை பாசன வாய்க்கால், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வழியாக மருதுார் ரயில்வே குகை பாதை, மேட்டு
மருதுார் சாலை ஓரமாக விவசாய நிலத்திற்கு செல்லும் இடத்தில் செடி கொடிகளால் சூழ்ந்தும், விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்தும், துார்ந்துள்ளது.
இதனால் தண்ணீர் விவசாய நிலத்திற்கு செல்ல முடியாமல் தேக்கமடைந்து, குடியிருப்பு பகுதி, பள்ளி வளாகம் மற்றும் ரயில்வே குகை வழி பாதையில் அதிகளவு தேங்கி விடுகிறது. கிளை பாசன வாய்க்காலில் செல்லும் தண்ணீர் முழுவதையும், விவசாயத்திற்கு செல்லும் வகையில் நீர்வளத்துறை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் மருதுார் பஸ் நிறுத்தம் வழியாக செல்லும் கிளை பாசன வாய்க்கால், நுாலகம், டவுன் பஞ்.. அலுவலகம், மருதுார் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் வழியாக செல்லும் கிளை பாசன வாய்க்கால் ஆகியவை துார்ந்துள்ளது. இவைகளையும் துார்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
