கோவில் இனாம் நிலம் பிரச்னைக்கு தீர்வு கரூர் தி.மு.க., வேட்பாளர் வாக்குறுதி
கோவில் இனாம் நிலம் பிரச்னைக்கு தீர்வு கரூர் தி.மு.க., வேட்பாளர் வாக்குறுதி
ADDED : ஏப் 20, 2026 05:18 AM

கரூர்:''இனாம்
நிலம் பிரச்னைக்கு தீர்வு காணவேண்டி, இரண்டு டி.ஆர்.ஓ.,-க்கள் கொண்ட
அதிகாரிகளை நியமனம் செய்ய, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மீண்டும் ஆட்சி அமைந்தவுடன், கோவில் நிலம் பிரச்னைக்கு தீர்வு
காணப்படும்,'' என, கரூர் தி.மு.க., வேட்பாளர் ஆசி.தியாகராஜன்
தெரிவித்தார்.
கரூர் தொகுதி, தி.மு.க., வேட்பாளர் ஆசி.தியாகராஜன்,
தீவிர பிரசாரத்தில் மேற்கொண்டு வருகிறார். கரூர்
மாநகராட்சிக்குட்பட்ட தான்தோன்றிமலை, திருமாநிலையூர் உள்பட
பல்வேறு பகுதிகளில் வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி
ஓட்டு சேகரித்து வருகிறார்.
அப்போது, அவர் பேசியதாவது:
தமிழகத்தில், ஐந்தாண்டுகளில், தி.மு.க., ஆட்சியில் பள்ளி மாணவ,
மாணவியருக்கு காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண்
திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், பொங்கல் பரிசாக 3,000 ரூபாய், மகளிர்
உரிமைத்தொகை மற்றும் கோடைகால சிறப்பு நிதியாக உங்கள் வங்கி
கணக்கிற்கு வந்த, 5,000 ரூபாய் உள்பட பல்வேறு திட்டங்கள்
நிறைவேற்றப்பட்டுள்ளன.
கரூர் தொகுதி மக்களின், 25 ஆண்டு
கால
கோரிக்கையான புதிய பஸ் ஸ்டாண்ட், 40 கோடி ரூபாய் மதிப்பில்
அமைத்திருக்கிறோம். மேலும், கரூரில், 38.50 கோடி ரூபாயில், மினி டைடல்
பார்க்கிற்கு அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கரூர்,
-திருவள்ளுவர் மைதானத்தில் மாவட்ட மைய நுாலகத்திற்கு, புதிய கட்டடம்
திறக்கப்பட்டுள்ளது உள்பட, 1,500 கோடி ரூபாய் மதிப்பில்
மாநகராட்சியில் மட்டும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில், இனாம் நிலப்பிரச்னை
என்பது, அ.தி.மு.க., ஆட்சியில் வந்தது. கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில்,
நீதிமன்றத்தில் முறையாக மனு தாக்கல் செய்யாமல், தவறான ஆவணங்களை
தாக்கல் செய்தனர். அதனடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி
உள்ளது. இந்த இனாம் நிலம் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டி, இரண்டு
டி.ஆர்.ஓ.,-க்கள் கொண்ட அதிகாரிகளை நியமனம் செய்ய, முதல்வர் ஸ்டாலின்
உத்தரவிட்டுள்ளார். மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் கோவில் நிலம்
பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.
மேலும், தி.மு.க., தேர்தல்
வாக்குறுதியாக, மாதந்தோறும், 1,000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை
என்பதை, இனி, 2,000 ரூபாயாக உயர்த்தப்படும். புதுமைப்பெண், தமிழ்
புதல்வன் திட்டத்தில் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு மாதந்தோறும்,
1,000 ரூபாய் வழங்கி வருகிறோம். இனி, 1,500 ரூபாயாக உயர்த்தி
வழங்கப்படும். 5ம் வகுப்பு வரை இருந்து வந்த காலை உணவு திட்டத்தை, 8-ம்
வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். இதனால், 15 லட்சம் மாணவர்கள்
பயன்பெறலாம். இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி தரும், இன்னொரு சூப்பர்
டூப்பர் வாக்குறுதியையும் கொடுத்திருக்கிறோம். அவர்கள் வீட்டிற்கு
தேவையான வாஷிங் மிஷின், பிரிட்ஜ், டிவி, கிரைண்டர், மிக்சி, மைக்ரோ-வேவ்
அவன், மின் அடுப்பு போன்ற வீட்டு உபயோக பொருட்களை புதிதாக வாங்கவும்
அல்லது ஏற்கனவே பயன்படுத்தி வரும் இத்தகைய பொருட்களை
கொடுத்துவிட்டு, அதற்கு பதிலாக வேறு வாங்கிக் கொள்ளவும்,
'இல்லத்தரசி' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். அதுவும்
உங்களுக்கு பிடித்த கடைகளிலேயே, உங்களுக்கு பிடித்த கம்பெனி,
உங்களுக்கு பிடித்த மாடலாக பார்த்து கொள்ள ஒவ்வொரு
குடும்பத்திற்கும் தலா, 8,000 ரூபாய் மதிப்பிலான, 'கூப்பன்'
கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
