/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தி.மு.க., எம்.எல்.ஏ., உறவினர் கொலை மிரட்டல்
/
தி.மு.க., எம்.எல்.ஏ., உறவினர் கொலை மிரட்டல்
ADDED : செப் 11, 2011 01:02 AM
கரூர்: கரூரில் மணல் குவாரி அமைக்க கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு
போலீஸில் புகார் கொடுத்தவரை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்த
தி.மு.க., எம்.எல்.ஏ., உறவினர் உள்பட மூன்று பேர் மீது போலீஸார்
வழக்குபதிவு செய்தனர்.கரூர் நெரூர் மூப்பத்தெருவைச் சேர்ந்த அய்யாவு
என்பவரது மகன் ராவணன் (40). இவர் மணல் குவாரியில் வேலை செய்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு நெரூர் பகுதியில் விஷம் குடித்து
மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரை அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் கரூர்
அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.சிகிச்சை பெற்று வரும் ராவணன்
கூறியதாவது: கடந்த தி.மு. க., ஆட்சிக்காலத்தில் நெரூரில் உள்ள மணல்
குவாரியை தற்போது அரவக்குறிச்சி தி.மு.க., எம்.எல்.ஏ., பழனிசாமியின்
உறவினர் தியாகராஜன்(40) என்பவர் கவனித்து வந்தார். அவர் என்னிடம் அமராவதி
ஆற்றில் மணல் அள்ளும் உரிமையை வாங்கித் தருவதாக கூறினார்.நான் பல இடங்களில்
கடன் வாங்கி, கடந்தாண்டு அக்டோபர் 10 முதல் தவணையாக நான்கு லட்சத்து 20
ஆயிரம் ரூபாயும், இரண்டு மாதம் கழித்து ஐந்து லட்ச ரூபாய் என 9.20 லட்சம்
பெற்றுக்கொண்டார்.
ஆனால், தியாகராஜன் மணல் அள்ளும் உரிமையை
பெற்றுத்தரவில்லை. பலமுறை கேட்டும் பணமும் தரவில்லை. எனக்கு கடன்
கொடுத்தவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த
8ம் தேதி காலை 11 மணிக்கு கரூர் எஸ்.பி., அலுவலகத்தில் தியாகராஜன் மீது
புகார் கொடுத்தேன். இதையறிந்த தியாகராஜன், கண்ணன், சுகுமார் ஆகியோர் என்னை
சந்தித்து, புகாரை திருப்பிப்பெற்று கொள்ளுபடி அடித்து உதைத்தனர்.
இல்லையென்றால், என் குடும்பத்தை கொலை செய்வதாக மிரட்டினர்.
ஏற்கனவே, கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த நான், நேற்று முன்தினம் இரவு
மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்ள விஷம் குடித்து விட்டேன். இவ்வாறு அவர்
தெரிவித்தார்.இதையடுத்து ராவணன் கொடுத்த புகாரின் பேரில் தி.மு.க.,
எம்.எல்.ஏ., பழனிசாமி உறவினர் தியாகராஜன், கண்ணன், சுகுமார் ஆகியோர் மீது
வாங்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.