ADDED : ஏப் 28, 2024 03:50 AM
டூவீலர் மீது லாரி மோதி
வாலிபர் படுகாயம்
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே கிழக்கு காந்தி நகரை சேர்ந்தவர் ரஞ்சித் குமார், 36. இவர் டூவீலரில் நேற்று அரவக்குறிச்சியில் இருந்து, புங்கம்பாடி சாலையில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் அரவக்குறிச்சி நீதிமன்றம் அருகே சென்ற போது, எதிர் திசையில் கேரள மாநிலம், திருச்சூர் சாலக்கோடு பகுதியை சேர்ந்த வீரன் குட்டி, 43, என்பவர் ஓட்டி வந்த அசோக் லேலண்ட் லாரி ரஞ்சித் குமார் டூவீலர் மீது மோதியது.
இந்த விபத்தில் ரஞ்சித் குமார் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ரஞ்சித் குமார் மனைவி வனிதா அளித்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் வீரன் குட்டி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சந்தையூர் வார சந்தையில்ஆடு, கோழி விற்பனை மந்தம்
கிருஷ்ணராயபுரம்: சந்தையூர் வார சந்தையில், ஆடு, கோழிகள் விற்பனை மந்த நிலையில் காணப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிவாயம் பஞ்சாயத்து இரும்பூதிப்பட்டி சந்தையூர் வார சந்தை நேற்று கூடியது. காலை நேரத்தில் ஆடு, கோழிகள் விற்கப்படுகிறது. மேலும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. கிராமங்களில் இருந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு, கோழிகள், வார சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது வெயில் காலம் என்பதால் ஆடு, கோழிகள் விற்பனை மந்தநிலையில் இருந்தது. 7 கிலோ கொண்ட ஆடு ஒன்று, 6,500 ரூபாய், நாட்டுக்கோழி கிலோ, 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கரூர், புலியூர், சேங்கல், தோகைமலை, குளித்தலை, லாலாப்பேட்டை பகுதி வியாபாரிகள் வாங்கி சென்றனர்.
பாலப்பட்டி குழாயில்விரிசல்; வீணாகும் தண்ணீர்
கிருஷ்ணராயபுரம்: பாலப்பட்டி சாலை அருகில், குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டு காவிரி நீர் வீணாகிறது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை சிந்தலவாடி காவிரி ஆற்றில் இருந்து கொம்பாடிப்பட்டி பிரிவு சாலை சந்திப்பு வரை, காவிரி குடிநீர் குழாய்கள் மூலம் கொண்டு வரப்பட்டு, கிராமங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இதில் பாலப்பட்டி சாலை வழியாக செல்லும் குழாயில் விரிசல் ஏற்பட்டு, அதிகமான தண்ணீர் வீணாகிறது. கோடை காலத்தில் கிராமங்களில் தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, வீணாக சாலையோர பள்ளங்களில் செல்லும் காவிரி நீரை, தடுக்கும் வகையில் விரிசல் அடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய, குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரூர் அருகே சாலையில்கிடந்த சில்வர் பாத்திரங்கள்
கரூர்,-கரூர் அருகே, சாலையில் கிடந்த சில்வர் பாத்திரங்களை பறக்கும் படை அலுவலர் கைப்பற்றினார்.
கரூர் சட்டசபை தொகுதி பறக்கும் படை அலுவலர் பிரபாகரன். இவர் கடந்த, 18 இரவு கரூர் அருகே, வாங்கல் இ.வி.ஆர்., தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த பகுதியில் வாக்காளர்களுக்கு, ஓட்டுக்கு பணம் கொடுக்க நின்று கொண்டிருந்த, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கையில் வைத்திருந்த, 25 சில்வர் பாத்திரங்களை, கீழே போட்டு விட்டு ஓடி விட்டார்.
கீழே கிடந்த பாத்திரங்களை கைப்பற்றிய பறக்கும் படை அலுவலர் பிரபாகரன், போலீசில் புகார் செய்தார். அதன்படி, வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

