ADDED : மே 16, 2024 03:16 AM
சரக்கு வாகனம் மோதி
ஒருவர் படுகாயம்
அரவக்குறிச்சி: விஸ்வநாதபுரி மண்டகிரியூரை சேர்ந்தவர் ராமலிங்கம், 65. இவர், கரூர் - கோவை சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். தண்ணீர்பந்தல் பகுதியில் வந்தபோது, எதிர் திசையில் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செங்கோட்டு வேலு, 36, என்பவர் ஓட்டி வந்த சரக்கு வாகனம், டூவீலர் மீது மோதியது. இதில் ராமலிங்கத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். க.பரமத்தி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சாலையில் பறக்கும் குப்பை: வாகன
ஓட்டிகள் தவிப்பு
கரூர்: கரூர்,- வாங்கல் சாலையில் குப்பை கிடங்கு செயல்படுகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சேகரிக்கப்படும் குப்பை, வேன் மற்றும் லாரிகள் மூலம் இங்கு கொண்டுவந்து கொட்டப்படுகிறது. இருந்தபோதும், சாலையில், ஏராளமான குப்பை கொட்டப்பட்டு வருகிறது. குப்பை காற்றில் பறந்து, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. மேலும் குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், குடியிருப்பு வாசிகள் தவித்து
வருகின்றனர்.