ADDED : மே 25, 2024 02:37 AM
வல்லம் மாரியம்மன் கோவிலில்
குளிர்ச்சி திருவிழா சிறப்பு பூஜை
கிருஷ்ணராயபுரம்: வல்லம், மாரியம்மன் கோவில் குளிர்ச்சி திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் காவிரி தீர்த்தக்குடம் எடுத்து வந்து கோவிலில் சிறப்பு வழிபாடு பூஜை செய்தனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, வல்லம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று குளிர்ச்சி திருவிழாவை முன்னிட்டு, லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடி காவிரி தீர்த்தம் எடுத்து வந்தனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் வழிபாடு செய்யப்பட்டது. மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலை கோவிலில் மா விளக்கு பூஜை நடைபெறுகிறது.
தான்தோன்றிமலையில்பூங்காவை சரி செய்யணும்
கரூர்,: கரூர்-வெள்ளியணை சாலை தான்தோன்றிமலை அரசு குடியிருப்பு வளாகத்தில், 25க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன், அந்த பகுதியில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. சிறுவர், சிறுமிகள் விளையாடி வந்தனர்.
ஆனால், நாளடைவில் பூங்கா போதிய பராமரிப்பு செய்யப்படாமல் விடப்பட்டது. தற்போது, பூங்காவில் இருந்த உபகரணங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளது. பூங்காவும் பூட்டி வைக்கப் பட்டுள்ளது.
இதை பராமரித்து முறையாக பயன்படுத்தும் வகையில், புதிதாக விளையாட்டு உபகரணங்களை அமைக்கும், வகையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேலம் நெடுஞ்சாலையில்தடுப்பு வைக்க வேண்டும்
கரூர்: கரூர்-சேலம் நெடுஞ்சாலையில், பல்வேறு கிராம பகுதிகளை இணைக்கும் பகுதிகள்
உள்ளது. பெரும்பாலான இடங்களில் வேகத்
தடைகள் அமைக்கப்படவில்லை.
மேலும், சாலையின் ஓரத்தில் மிகப்பெரிய பள்ளங்கள் உள்ளது. அதற்கு முன் தடுப்புகள் இல்லை. இதனால், இரவு நேரத்தில் வாகனங்களை ஓட்டும் டிரைவர்களுக்கு பள்ளங்கள் தெரிவது இல்லை.
இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. விபத்துகளை தடுக்கும் வகையில், தடுப்புகள் வைக்க நடவடிக்கை தேவை.
பலவீனமான குடிநீர் தொட்டிஅச்சப்படும் கிராம மக்கள்
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, வீரியபாளையம் பஞ்சாயத்து குரும்பபட்டி கிராமத்தில் குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டி கட்டப்பட்டு நீண்ட ஆண்டுகள் ஆகிறது. தொட்டியில் நீர் ஏற்றப்பட்டு குழாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் நடக்கிறது.
இந்நிலையில் தண்ணீர் தொட்டியில் நீர் ஏற்றி நிரம்பும் போது, நீர் கசிவு ஏற்பட்டு வீணாகிறது. மேலும் தொட்டியும் பலவீனமாக இருப்பதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் மோசமான நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பூக்கள் வரத்து சரிவால்விலை உயர்வு
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதியில், பூக்கள் வரத்து சரிவால் விலை உயர்ந்துள்ளது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த மகிளிப்பட்டி, மாயனுார், எழுதியாம்பட்டி, செக்கணம் ஆகிய பகுதியில் விவசாயிகள் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இதில் விரிச்சிப்பூக்கள், சின்னரோஜா, செண்டுமல்லி ஆகிய ரக பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மழை காரணமாக பூக்கள் வரத்து சரிந்துள்ளது. இதனால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
விரிச்சிப்பூக்கள் கிலோ, 90 ரூபாயிலிருந்து, 110 ரூபாய், சின்னரோஜா, 100 ரூபாயிலிருந்து, 130 ரூபாய், செண்டுமல்லி, 30லிருந்து 70 ரூபாய் என விற்கப்பட்டது.
வரத்து சரிவு காரணமாக விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைத்து வருகிறது. மேலும் கரூர் சுற்று வட்டார பகுதியில் கோவில் திருவிழாக்கள் காரணமாக, பூக்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது.
