ADDED : மே 31, 2024 03:33 AM
கரூர் மாவட்டத்தில் வி.ஏ.ஓ.,
மாதிரி தேர்வு எழுதிய 143 பேர்
கரூர்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 வி.ஏ.ஓ., பதவிக்கான போட்டி தேர்வு நடக்க உள்ளது. அதற்காக, கரூர் மாவட்டத்தில் நுாலகங்களில் புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டு, மாதிரி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நேற்று கரூர் மாவட்டத்தில், கரூர் நகரில் உள்ள மாவட்ட மைய நுாலகத்தில், 89 பேரும், முழுநேர கிளை நுாலகங்களான குளித்தலையில், 28 பேரும், கிருஷ்ணராயபுரத்தில், 15 பேரும், அரவக்குறிச்சியில், 6 பேரும், தோகைமலை ஊர்ப்புற நுாலகத்தில், 6 பேர் உள்பட மாணவ, மாணவியர், 143 பேர் வி.ஏ.ஓ., தேர்வுக்கான மாதிரி தேர்வை எழுதினர்.
இத்தகவலை, மாவட்ட மைய நுாலக அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார்.
க.பரமத்தியில் தீயணைப்பு
நிலையம் அமைக்க கோரிக்கை
அரவக்குறிச்சி-
க.பரமத்தியில், தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரூரிலிருந்து, கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வளர்ந்து வரும் நகராக க.பரமத்தி உள்ளது. க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில், 30 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலையையொட்டி கிராம பஞ்சாயத்துகள் உள்ளதால், அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. சாலை விபத்து, தீ விபத்து மற்றும் தீ விபத்துகளால் உயிரிழப்பு போன்றவற்றை தடுக்க, க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் இல்லை.
கரூர், அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வருகின்றன. சம்பவ இடத்திற்கு செல்ல நீண்ட நேரமாவதால் உயிர் சேதம், பொருட்சேதம் அதிகளவில் ஏற்படுகிறது. எனவே, க.பரமத்தி பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில்
கோடை உழவு பணி மும்முரம்
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், மழை காரணமாக மானாவாரி நிலத்தில், கோடை உழவு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேட்டுப்பட்டி, வரகூர், குழந்தைப்பட்டி, சரவணபுரம், சிவாயம், பாப்பகாப்பட்டி, மலையாண்டிப்பட்டி, பஞ்சப்பட்டி, கொம்பாடிப்பட்டி, கணக்கம்பட்டி, மத்திப்பட்டி ஆகிய பகுதிகளில் கடந்த வாரம் மழை பெய்தது.
இதனால் மானாவாரி நிலங்களில், கோடை உழவு பணிகளுக்கு தேவையான ஈரப்பதம் கிடைத்துள்ளது. மேலும், கோடை உழவு பணிகளில் டிராக்டர் இயந்திரம் கொண்டு உழவு பணி செய்யப்பட்டது. தொடர்ந்து மழை பெய்தால் வரும் சில நாட்களில், விதை தெளிப்பு பணிகள் துவங்கும் என, விவசாயிகள் கூறினர்.