ADDED : ஜூன் 17, 2024 01:36 AM
இரவு நேரத்தில் ஆற்றிலிருந்து
வாகனத்தில் மணல் கடத்தல்
குளித்தலை: குளித்தலை அடுத்த வதியம், நாப்பாளையம், கடம்பர் கோவில் படித்துறை, பெரியபாலம்,
சாந்திவனம், மருதுார், வீரம்பூர் காவிரி ஆற்றில் இரவு நேரங்களில் தினந்தோறும் பொக்லைன்
இயந்திரம் மூலம் லாரியில் மணல் கடத்தல் நடந்து வருகிறது.
மணல் கடத்தலை எந்த அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. மேலும் காற்றாற்று மணல், கிராவல் மண், பொது ஏரி, குளத்தில் இருந்து மணல் எடுத்து கடத்தப்படுகிறது. குளித்தலை பகுதியில் குற்றச்சம்பவங்களை தடுக்கவும், உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனைவி மாயம்: கணவன் புகார்
கரூர்: கரூர் அருகே, மனைவியை காணவில்லை என, போலீசில் கணவர் புகார் செய்துள்ளார்.
கரூர் வேப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த துரைசாமி என்பவரது மகன் சிவசாமி, 36; இவருடைய மனைவி மலர்விழி, 22; கடந்த, 14 இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற மலர்விழியை காணவில்லை. உறவினர்களின் வீடுகளுக்கும், மலர்விழி செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த கணவர் சிவசாமி, போலீசில் புகார் செய்தார்.
கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
வெள்ளபட்டி பஞ்சாயத்தில்
சிறப்பு கிராம சபை கூட்டம்
கரூர்-
கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளபட்டி பஞ்சாயத்தில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
பஞ்., தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். சமீபத்தில் நடந்த சமூக தணிக்கை குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பொதுமக்கள் தெரிவித்த பல்வேறு குறைபாடுகள் குறித்து கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு, உடனடியாக அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானம் இயற்றப்பட்டது.
கூட்டத்தில், பஞ்., துணைத் தலைவர்
தர்மராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், வட்டார வள பயிற்றுனர் இந்துமதி, பஞ்., செயலாளர் மோகன் குமார் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
புகழூர் டி.என்.பி.எல்.,
ஆலையில் ரத்த தான முகாம்
கரூர்: கரூர் மாவட்டம் புகழூரில், தமிழ்நாடு செய்தி தாள் காகித ஆலை நிறுவனம் சார்பில், ரத்த தான முகாம் நடந்தது.
முதன்மை பொதுமேலாளர் (இயக்கம்) நாகராஜன் தொடங்கி வைத்தார். ஆலை பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், தொழில் பழகுனர்கள், பொதுமக்கள் என, 174 பேர் ரத்த தானம் செய்தனர். அவர்களுக்கு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையால் சான்றிதழ் வழங்கப்பட்டது.
முன்னதாக ஆலையில், முதியோருக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதி மொழியை ஆலையின் முதுநிலை மேலாளர் (மனிதவளம்).வெங்கடேசன், உதவி மேலாளர் (கொள்முதல்) ரவிச்சந்திரன் ஆகியோர் வாசிக்க, ஆலை பணியாளர்கள் ஏற்றனர்.