ADDED : ஜூன் 27, 2024 04:03 AM
கரூரில் மின்சார தொழிலாளர்
சம்மேளன செயற்குழு கூட்டம்
கரூர்: தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளன மாநில செயற்குழு கூட்டம், மாநில தலைவர் ஷாஜகான் தலைமையில், கரூரில் நேற்று நடந்தது.
அதில், கேங்மேன் பணியாளர்களை, மஸ்துார் பணியாளர்களாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிற்சங்கவாதி கிருஷ்ணன் பெயரை, சென்னையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தின், 8 வது மாடிக்கு சூட்ட வேண்டும். வாரிசு வேலை விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலனை செய்து உத்தரவு வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். கரூரில் சம்மேளனத்துக்கு தொழிற்சங்க மனை ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்
பட்டன.
கூட்டத்தில், மாநில துணைத்தலைவர் பிரேமா, பொதுச்செயலாளர் சம்பத், பொருளாளர் ராமச்சந்திரன் உள்பட பலர்
பங்கேற்றனர்.
சின்ன வெங்காயம் சாகுபடி
களை எடுக்கும் பணி தீவிரம்
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், சின்னவெங்காயம் சாகுபடி செய்யும் நிலங்களில், களை எடுக்கும் பணிகளில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குழந்தைப்பட்டி, வரகூர், சிவாயம், வேப்பங்குடி, பாப்பகாப்பட்டி ஆகிய இடங்களில், சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடிக்கு கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது சின்னவெங்காயம் நடவு செய்யப்பட்டு பயிர்கள் வளர்ந்து வருகிறது.
பயிர்கள் நடுவில் அதிகமான களைகள் வளர்ந்துள்ளது. இதனால் செடிகள் வளர்ச்சி பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதையடுத்து, விவசாய தொழிலாளர்களை கொண்டு களை எடுக்கும் பணிகள் துரிதமாக நடந்து
வருகிறது.
அரசு அலுவலர் கழக
நிர்வாகிகள் ஆலோசனை
கரூர்: தமிழ்நாடு அரசு அலுவலர் கழக, கரூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட தலைவர் நீலகண்டன் தலைமையில், காந்தி கிராமத்தில் நடந்தது.
அதில், ஊட்டச்சத்து துறையில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு பணிவரன் முறை செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள, பணியிடங்களை நிரப்ப வேண்டும், பொதுப்பணித்துறை என்.எம்.ஆர்., பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநில பிரதிநிதி பிச்சை முத்து, மாவட்ட துணைத்தலைவர் விமலாதித்தன், செயலாளர் விஜய் ஆனந்த் உள்பட பலர்
பங்கேற்றனர்.
அறிவியல் பாடங்களுக்கு
இரண்டாம் கட்ட கலந்தாய்வு
கரூர்: கரூர் அரசு கலைக்கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான, அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு நேற்று, இரண்டாம் கட்ட கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
கரூர் அரசு கலைக்கல்லுாரியில் இளம் கலை, இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2024-25) இரண்டாம் கட்ட கலந்தாய்வு கூட்டம் கடந்த, 24ல் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று பி.எஸ்சி., அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு, இரண்டாம் கட்ட கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அதில், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்
பங்கேற்றனர்.
மேலும், நாளையும் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், இறுதி கட்டமாக நடக்கிறது.