ADDED : மார் 07, 2026 03:54 AM
ஆபத்தான வளைவில்
பாதுகாப்பு ஏற்பாடு தேவை
கரூர்: கரூரில் இருந்து தரகம்பட்டி செல்லும் சாலையில், ஆபத்தான வளைவு உள்ள பகுதிகளில் வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ள, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
கரூரில் இருந்து வெள்ளியணை, ஜெகதாபி வழியாக தரகம்பட்டிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். கிராமங்கள் சூழ்ந்த இந்த பகுதி சாலையில், அதிகளவு ஆபத்தான வளைவு பகுதிகள் உள்ளன. இதன் காரணமாக இரவு நேரங்களில் சிறு விபத்துகள் நடக்கிறது. அனைத்து வாகன ஓட்டிகளும் தெரிந்து கொள்ளும் வகையில், வளைவு பாதையில் விழிப்புணர்வு பலகை வைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
'உங்க கனவை சொல்லுங்க'நிகழ்ச்சி கரூரில் ஒளிபரப்பு
கரூர்: சென்னையில் நடைபெற்ற, உங்க கனவை சொல்லுங்க திட்ட நிகழ்ச்சி, கரூரில் தனியார் அரங்கில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தமிழக அரசின் உங்க கனவை சொல்லுங்க என்ற திட்ட நிகழ்ச்சி, நேற்று சென்னை வர்த்தக மையத்தில் நடந்தது. அதில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, கனவுகள் மெய்ப்படும் என்ற தலைப்பில் பேசினார். தொடர்ந்து, கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடந்தது.
அந்த நிகழ்ச்சிகள், கரூரில் தனியார் அரங்கில் எல்.இ.டி., திரை மூலம், நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில், கரூர் காங்., கட்சி எம்.பி., ஜோதிமணி, கலெக்டர் ரவிகுமார், டி.ஆர்.ஓ., விமல்ராஜ் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
நெடுஞ்சாலை சென்டர் மீடியனை3 கி.மீ., சுற்றி வரும் அவலம்
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் இருந்து, கணக்குப்பிள்ளை புதுார் பிரிவுக்கு செல்பவர்கள், காமக்காப்பட்டிக்கு பிரிந்து செல்லும் சாலையில் சென்டர் மீடியன் உள்ளதால், நேரே செல்ல முடியாமல் 3 கி.மீ., சுற்றி செல்லும் நிலையில் உள்ளனர். இந்த வழியை அரவக்குறிச்சியில் இருந்து, தினமும் வேலைக்கு செல்வோர், பள்ளி செல்லும் மாணவர்கள் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். மேலும், எதிர் திசையில் வாகனங்கள் வருவதால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. நான்கு முனை சாலை சந்திக்கும் இந்த இடத்தில், ஏற்கனவே இருந்தது போல பாதையை ஏற்படுத்தி தர வேண்டும் என, நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வனத்துறை சார்பில்உயிரின பாதுகாப்பு தினம்
கரூர்: கரூர் மாவட்ட வனத்துறை சார்பில், உலக வன உயிரின பாதுகாப்பு தின விழா, மண் மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நட ந்தது.
அதில், சுற்றுச்சூழல் மற்றும் சமூகம் சார்ந்த விழிப்புணர்வு பணிகளுக்கான, சமூக பாதுகாப்பு தலைமைத்துவ விருது, சீடு அறக்கட்டளை நிர்வாகி திருமூர்த்திக்கு, மாவட்ட வன அலுவலர் சண்முகம் வழங்கினார். விழாவில், கரூர் வனச்சரகர் அறிவழகன், ஆயுதப்படை போலீஸ் டி.எஸ்.பி., வெங்கடாசலம், பசுமை தோழி ஐஸ்வர்யா உள்பட பலர் பங்கேற்றனர்.
