தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ க.பரமத்தி வடக்கு பகுதி வாய்க்கால் துார்வாரப்படும் அரவக்குறிச்சி தி.மு.க., வேட்பாளர் இளங்கோ உறுதி

க.பரமத்தி வடக்கு பகுதி வாய்க்கால் துார்வாரப்படும் அரவக்குறிச்சி தி.மு.க., வேட்பாளர் இளங்கோ உறுதி

க.பரமத்தி வடக்கு பகுதி வாய்க்கால் துார்வாரப்படும் அரவக்குறிச்சி தி.மு.க., வேட்பாளர் இளங்கோ உறுதி


ADDED : ஏப் 14, 2026 04:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 04:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர் :'' க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன், வடக்கு பகுதியில் விவசாய பணிகளை மேம்படுத்த, அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால்கள் துார் வாரப்படும்,'' என, அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க., வேட்பாளரும், எம்.எல்.ஏ., வுமான இளங்கோ பேசினார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி தி.மு.க., வேட்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான இளங்கோ, நேற்று க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன், வடக்கு பகுதிகளில் பொதுமக்ளிடம் ஓட்டு கேட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, அவர் பேசியதாவது:

திராவிட மாடல், 2.0 ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலர வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில், தி.மு.க., ஆட்சியில் விவசாயிகள், மகளிர், தொழிலாளர்கள், மாணவ, மாணவியர் உள்பட, அனைத்து தரப்பினரும் பல்வேறு திட்டங்கள் மூலம் பயன் அடைந்துள்ளனர்.

திராவிட மாடல் ஆட்சி

மேலும், இல்லத்தரசிகளுக்கு, 8,000 ரூபாய் கூப்பன், மகளிர் உரிமை தொகை, 2,000 ரூபாயாக உயர்வு உள்ளிட்ட, பல்வேறு வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால், தி.மு.க., ஆட்சி தொடர வேண்டும் என, தமிழக மக்கள் முடிவு செய்து விட்டனர். மத்திய பா.ஜ., அரசு, தமிழகத்துக்கு தர வேண்டிய நியாமான நிதியை கூட தருவதில்லை என, முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் சொல்லி வருகின்றனர். போதிய நிதி இல்லாத நிலையிலும் கூட, முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார்.

கரூர் மாவட்டத்துக்கு மட்டும் கடந்த, ஐந்தாண்டுகளில், 5,000 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி திட்டங்களை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்து பெற்று தந்துள்ளார். அரவக்குறிச்சி தொகுதி அதிக கிராமப்புறங்களை கொண்ட, விவசாய பணிகள் அதிகம் நடக்கின்ற தொகுதியாகும். க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன், வடக்கு பகுதிகளில், விவசாய பணிகளை மேம்படுத்த, அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால் துார்வார நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதுகாக்கப்பட்ட குடிநீர்

காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணிகளுக்காக, தோண்டப்பட்ட குழிகளால், சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. வரும் மே மாதம் தி.மு.க., ஆட்சி அமைந்ததும், இரண்டு மாதங்களில் புதிதாக தார்ச் சாலைகள் அமைக்கப்படும். அனைத்து கிராமப்பகுதிளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.

மேலும், அரவக்குறிச்சி தொகுதியில் கடந்த ஐந்தாண்டுகளில் சமுதாய கூடம், கூடுதல் பள்ளிக்கட்டிடங்கள், நிழற்கூடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள், தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்ற, மக்கள் நல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த, எனக்கு இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ., வாக தேர்வு செய்து வாய்ப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

பிறகு நெடுங்கூர், க.பரமத்தி, ஆரியூர், துக்காச்சி, அஞ்சூர், கார்வாழி ஆகிய கிராம பஞ்சாயத்துக்களில், 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில், தி.மு.க., வேட்பாளர் இளங்கோ பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது சென்ற இடங்களில் எல்லாம் பெண்கள், வேட்பாளர் இளங்கோவுக்கு ஆரத்தி எடுத்து ஆதரவு தெரிவித்தனர். கட்சி நிர்வாகிகள் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us