குளித்தலை தி.மு.க., வேட்பாளர் சந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பு
குளித்தலை தி.மு.க., வேட்பாளர் சந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பு
ADDED : ஏப் 18, 2026 05:19 AM
குளித்தலை : கரூர் மாவட்டம், குளித்தலை சட்டசபை தொகுதிக்குட்பட்ட நகராட்சி பகுதியில் வீடு, வீடாக சென்று, தி.மு.க., வேட்பாளர் சந்திரன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
குளித்தலை கடம்பர்கோவில் காவிரி படுகையில், சலவை தொழிலாளர்களை நேரில் சந்தித்து தி.மு.க., அரசின் சாதனைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி பிரச்சாரம் மேற்கொண்டார். குளித்தலை பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள பள்ளிவாசல் பகுதியில் வீடு வீடாக ஓட்டு சேகரித்தார். தொடர்ந்து காந்திசிலை அருகில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வெளி வந்த முஸ்ஸிம்களிடம் தி.மு.க., வேட்பாளர் சந்திரன் ஓட்டு சேகரிகத்தார்.
அப்போது, அவர், பேசியதாவது: தி.மு.க., ஆட்சியில், குளித்தலை அரசு மருத்துவமனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இணையாக, 50 கோடி ரூபாயில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில், பழனி கோவிலுக்கு இணையாக ரோப்கார் வசதி பக்தர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க., தேர்தல் அறிக்கையில், முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்வதற்கான ஆண்டு வருமான வரம்பு, 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும், காப்பீட்டு தொகை, 10 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்படும். உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டத்தின்படி மாதந்தோறும் வழங்கப்படும், 1,000 ரூபாய் இனி, 1,500 ரூபாயாக உயர்த்தப்படும்.
நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு, 3,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு, 4,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்தப்படும். முதியோர் உதவித்தொகை, 1,200 ரூபாயில் இருந்து, 2,000 ரூபாயாக உயர்த்தப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, 2,000 ரூபாயாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில், 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை மக்களிடம் கொண்டு வந்த வகையில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தொடர்ந்து நல்ல பல திட்டங்கள் கொண்டு வருவதற்கும், குளித்தலை தொகுதியின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் மக்கள் மீண்டும் தி.மு.க.,வை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும். இங்கு பணத்தை கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என, எதிர்க்கட்சியினர் நினைக்கின்றனர். பணமா குணமா என்றால் குணமே தான் முக்கியம். நான் என்றும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்து உங்களுக்கு சேவையாற்றுவேன்
இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னதாக வேட்பாளர் சந்திரன் சென்ற இடங்களில் எல்லாம், பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். கட்சி நிர்வாகிகள் அவருக்கு சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தனர்.
பிரச்சாரத்தின் போது, தி.மு.க., மாநில வர்த்தக அணி துணை செயலர் பல்லவிராஜா, மாவட்ட பிரதிநிதி மாணிக்கம் உள்ளிட்ட தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
