/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை நீலமேக பெருமாள் கோவில் தேரோட்டம்
/
குளித்தலை நீலமேக பெருமாள் கோவில் தேரோட்டம்
ADDED : ஜூன் 10, 2025 01:35 AM
குளித்தலை, கரூர் மாவட்டம், குளித்தலையில் அமைந்துள்ள, நீலமேக பெருமாள் கோவிலில், நேற்று வைகாசி விசாக பிரமோற்சவ தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. நுாற்றுக்கணக்கானோர் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
குளித்தலை நகரின் மத்தியில், நீலமேக பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கடந்த, 1,500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
காவிரி ஆற்றின் தென்கரையில், குளிர்தண்டலை என்று கல்வெட்டுகளில் அழைக்கப்படும் குளித்தலை மத்தியில், கோவில் கொண்டிருக்கும் கமலா நாயகி சமேத நீலமேக பெருமாளுக்கு வைகாசி விசாக பிரமோற்சவம் திருத்தேர் திருவிழா கடந்த, 1ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நேற்று காலை விசாக நட்சத்திரம் கூடிய சுப தினத்தில், திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருத்தேர் நகராட்சி அலுவலகம், பஜனை மடம், கடைவீதி, அக்ரஹாரம், அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி வழியாக சென்று, திருத்தேர் கோவில் நிலைக்கு வந்தடைந்தது. தேரோட்டம் சென்ற போது, தெருக்களில் கூடிய பக்தர்கள் வாழைப்பழம், தேங்காய் உடைத்து அபிஷேகம் செய்து சுவாமியை வழிபட்டனர். தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் சென்ற வீதிகளில், 20க்கும் மேற்பட்ட இடங்களில் பக்தர்கள் அன்னதானம் வழங்கி
சிறப்பித்தனர்.