ADDED : மே 02, 2026 07:19 AM

கரூர்: கரூர் வட்டாரத்தில், நேற்று அதிகாலை வரை மழை பெய்தது.
கரூர் மாவட்டத்தில் கடந்த, 15 நாட்களாக கோடை வெயிலின் தாக்கம், படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம், கரூர் மாவட்டத்தில், 106.7 டிகிரி வெயில் காணப்பட்டது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையிலும், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது திடீரென அடிக்கடி மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு கரூர் வட்டாரத்தில் பல இடங்களில் பெய்ய தொடங்கிய மழை, நேற்று அதிகாலை வரை நீடித்தது.கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மி.மீ.,) அரவக்குறிச்சி, 17, அணைப்பாளையம், 28.40 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 3.78 மி.மீ., மழை பதிவானது.
* அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில் கோடை மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அரவக்குறிச்சியில், கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் கோடையை குளிர்விக்கும் விதமாக மழை பெய்தது. கடந்த, 30 நாட்களுக்கும் மேலாக கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. ஒன்றரை மணி நேரம் விடாமல் பெய்த கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு மாதமாக வாட்டி வதைத்த கோடை வெயிலை குளிர்வித்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
