/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வைக்கோல் விலை குறைவு; விவசாயிகள் கடும் அதிர்ச்சி
/
வைக்கோல் விலை குறைவு; விவசாயிகள் கடும் அதிர்ச்சி
ADDED : ஜன 20, 2024 07:14 AM
கரூர் : நெல் அறுவடை துவங்கிய நிலையில், வைக்கோல் விலை
திடீரென குறைந்துள்ளதால், விவசாயிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில், சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட, நெல் அறுவடை சமீபத்தில் துவங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வட கிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் பெய்யாததால், நடப்பாண்டு பருவமழையை விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், முன்கூட்டியே வடகிழக்கு பருவமழை பெய்ய துவங்கியது.
மேலும், கடந்த நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம், இரண்டாவது வாரம் வரை மழை விட்டு விட்டு பெய்தது.
இதனால், கரூர் மாவட்டத்தில் நெல் பயிரிட்டுள்ள வயல்களில், தேவைக்கு அதிகமாக தண்ணீர் தேங்கி நின்றது. இதனால், நெல் பயிர்களில் எதிர்பார்த்த அளவில் துார் பிடிக்காமல் இருந்தது. மேலும், நெற்பயிரின் வளர்ச்சியும் தடைப்பட்டது. இதனால், ஒரு ஏக்கருக்கு, 35 மூட்டைகள் வரை கிடைக்க வேண்டிய நெல் மகசூல், 20 மூட்டைகளாக குறைந்தது. இந்நிலையில், வைக்கோலுக்கு விலை குறைந்துள்ளது.இதுகுறித்து கரூர் அருகே வீரராக்கியம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: நெல் அறுவடைக்கு பிறகு, வைக்கோலை மாடுகளின் தீவனத்துக்காக தனியாக விற்பனை செய்யப்படும். கடந்தாண்டு ஒரு ஏக்கரில் கிடைக்கும் வைக்கோல், 6,000 ரூபாய் வரை விலை போனது.
ஆனால், தற்போது வெறும், 4,000 ரூபாய்க்கு தான் வைக்கோல் விலை போகிறது. இதற்கு நெல் சாகுபடி அதிகரிப்பு ஒரு காரணமாக இருந்தாலும், இயந்திரம் மூலம், நெல் அறுவடை செய்யப்படுவதால், வைக்கோலுக்கு விலை குறைந்து விட்டது.
கையால் நெல்லை அறுவடை செய்யும் போது, நீளமான வைக்கோல் கிடைக்கும். ஆனால், இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் போது, வைக்கோல் நீளமாக இருக்காது. துண்டு துண்டாகத்தான் கிடை க்கும். இதை நீண்ட நாள் பாதுகாப்பாக வைத்திருந்த முடியாது. நீளமான வைக் கோலை, மாடுகள் தீவனத்துக்காக, அடுக்கி வைத்து பாதுகாக்க முடியும்.
இதனால் வைக்கோலுக்கு விலை குறைந்து விட்டது. ஏற்கனவே, மகசூல் குறைவு, நெல் அறுவடை இயந்திரம் வாடகை அதிகரிப்பு, சாகுபடி செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால், விவசாயிகளுக்கு எதிர்பார்த்த அளவில் லாபம் இல்லை. இந்நிலையில், வைக்கோலுக்கும் விலை குறைந்து விட்டதால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்தனர்.