/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மஹா சிவராத்திரி உற்சவ விழா ஏற்பாடு கள் தீவிரம்
/
மஹா சிவராத்திரி உற்சவ விழா ஏற்பாடு கள் தீவிரம்
ADDED : பிப் 20, 2024 10:47 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, நாகனுார் பஞ்., ஆதிபரந்தாடியில் பெரியக்காண்டியம்மன், கன்னிமார் அம்மன் கோவில்களில் மார்ச், 8 இரவு மஹா சிவராத்திரி உற்சவம் விழா நடைபெற உள்ளது.
அன்று இரவு நான்கு கால பூஜை, அதிகாலை பொன்னர், சங்கர், மாயவர், தங்காள், வீரபாகு சாம்புகன் ஆகிய சுவாமிகளுக்கு படுகளம் போட்டு எழுப்புதல் நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சிக்கு பொன்னர் சங்கர் படுகளத்திற்கு, சங்ககவுண்டன்பட்டியில் இருந்தும், இதற்கு புலம்பல் பூசாரியாக கழுகூர் பஞ்., பூசாரியூர் பகுதியில் இருந்தும் திரளான பக்தர்கள் வர உள்ளனர்.
பந்தம் பிடிக்கும் பூசாரியாக அழகனாம்பட்டியில் இருந்தும், இதேபோல் வீரபாகு சாம்புகன் படுகளத்திற்கு பாதிரிபட்டியில் இருந்தும், இதற்கு புலம்பல் பூசாரியாக சிவாயம் பஞ்.,ஆதனுார் கிராமத்தில் இருந்து திரளான பூசாரிகளும், பக்தர்களும் வருவர்.
மேலும் வீரபாகு சாம்புகனுக்கு, கோடி போடுதல் நிகழ்ச்சிக்கு நாகனுார் காலனியில் இருந்து பக்தர்கள் வருகை தருவர். மஹா சிவராத்திரி உற்சவ விழாவின் போது தோகைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் குடிபாட்டுக்காரர்கள் வருவர்.
இந்நிலையில், கோவில் வரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பிடம், மின்விளக்கு வசதி உள்பட அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் சார்பாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

