ADDED : ஏப் 04, 2026 04:46 AM
கரூர், புனித வெள்ளியையொட்டி, கரூரில் உள்ள சர்ச்சுகளில் சிறப்பு திருப்பலி நேற்று நடந்தது.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை, நினைவு கூறும் வகையில் கடந்த பிப்., 18ல் சாம்பல் புதனுடன் தவக்காலம் தொடங்கியது. ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிறை, குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்தவர்கள் கடந்த, 13ல் அனுசரித்தனர்.
அதன் தொடர்ச்சியாக, நேற்று கரூர் புனித தெரசம்மாள் ஆலயம், சர்ச் கார்னர் சி.எஸ்.ஐ., சர்ச், பசுபதிபாளையம் புனித கார்மேல் அன்னை பேராலயம் உள்ளிட்ட, பல்வேறு சர்ச்சுகளில் புனித வெள்ளியையொட்டி, சிறப்பு திருப்பலி நடந்தது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
புனித கார்மேல் அன்னை பேராலயத்தில் நடந்த நிகழ்ச்சியில், பங்கு தந்தை ஜோசப் டேவிட், அருட் தந்தைகள் டோமினிக், ரோலிங்டன் பங்கேற்றனர். முன்னதாக, சிலுவை தாங்கிய ஊர்வலம் நடந்தது. சிறப்பு திருப்பலிக்கு பிறகு, நோன்பு முறிவு உணவு வழங்கப்பட்டது.
நாளை, இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெரு நாளான, ஈஸ்டர் பண்டிகை கிறிஸ்தவர்களால் கொண்டாப்பட உள்ளது.
* இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டதை நினைவு கூறும் விதமாக, கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும், தவக்காலத்தை கடைப்பிடித்து வருகின்றனர். சாம்பல் புதனன்று துவங்கும் தவக்காலம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை கொண்டாடும் ஈஸ்டர் ஞாயிறுடன் முடிவடைகிறது. இறுதி வாரம், புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. நேற்று முன்தினம், புனித வியாழனை முன்னிட்டு அரவக்குறிச்சி புனித சவேரியார் ஆலயத்தில் பாதம் கழுவும் சடங்கும்,
நற்கருணை ஆராதனையும் நடந்தன.
இயேசு சிலுவையில் உயிர் விட்ட நாளாக நினைவு கூறப்படும் புனித வெள்ளி, நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, அரவக்குறிச்சி துாய தோமா ஆலயம், புனித சவேரியார் ஆலயம், பள்ளப்பட்டி பவுல் ஆலயம், சவுந்தராபுரம் நல்ல மேய்ப்பன் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலிகள் நடைபெற்றன.
இயேசு கிறிஸ்துவின் பாடுகளை நினைவு கூறும் வகையில், சிலுவைப்பாதை வழிபாடு மற்றும் சிறப்பு ஆராதனைகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புனித வெள்ளியை முன்னிட்டு, பல்வேறு தேவாலயங்களிலும் கிறிஸ்தவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
