புதிய பஸ் ஸ்டாண்டில் மொபைல் திருடர்கள்: பீதியில் மாணவ, மாணவியர்
புதிய பஸ் ஸ்டாண்டில் மொபைல் திருடர்கள்: பீதியில் மாணவ, மாணவியர்
ADDED : மார் 07, 2026 03:56 AM
கரூர்: கரூர் புதிய பஸ் ஸ்டாண்டில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவியரிடம், மொபைல் போன் திருட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில், தொழில் நகரத்தில் ஒன்றான கரூர் திருமாநிலையூரில், புதிய பஸ் ஸ்டாண்ட் குறுகிய இடத்தில் செயல்பட்டு வருகிறது.ஏற்கனவே, சுத்தம் இல்லாத கழிப்பிடங்கள், பிளாட்பாரத்தில் ஆக்கிரமிப்புகள் என பல குறைபாடுகள், கரூர் புதிய பஸ் ஸ்டாண்டில் நிறைந்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியரிடம் மொபைல் போன் திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, காலை நேரங்களில் திருச்சி, கோவை, ஈரோடு பகுதிகளுக்கு பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர் பஸ்சில் ஏறும் போது, அவர்களை திசை திருப்பி, பாக்கெட்டில் உள்ள மொபைல் போன்களை திருடி செல்லும் அவலம் நடந்து வருகிறது. புதிய பஸ் ஸ்டாண்டில் புறக்காவல் நிலையம் இல்லை. காலை நேரங்களில், போலீசார் பெரும்பாலும் ரோந்து பணியில் இருப்பது இல்லை. இதனால், மொபைல் போன் திருடர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
எனவே, புதிய பஸ் ஸ்டாண்டில் புறக்காவல் நிலையத்தில், நாள்தோறும் போலீசாரை பணியில் நியமித்து, ரோந்து பணியில் ஈடுபட வைப்பது அவசியம்.
