/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மழை வெள்ளம் பாதித்த இடங்களை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
/
மழை வெள்ளம் பாதித்த இடங்களை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
மழை வெள்ளம் பாதித்த இடங்களை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
மழை வெள்ளம் பாதித்த இடங்களை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
ADDED : அக் 16, 2024 01:04 AM
குளித்தலை, அக். 16-
குளித்தலை அருகே, நங்கவரம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை, கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் ஆய்வு செய்தார்.
கரூர் மாவட்டத்தில், கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. குளித்தலை அடுத்த நங்கவரம் பகுதியில், 100 ஏக்கருக்கு மேல் மழை நீர் விளை நிலங்களில் தேங்கி, அருகில் உள்ள வீடுகளில் புகுந்தன. இப்பகுதிகளை, கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பத்திரப்பதிவு ஆணையருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று காலை ஆய்வு செய்தார்.
நங்கவரம் பகுதியில் வெங்கடேசா நகர், ஒத்தக்கடை பகுதியில் விளை நிலங்களில் மழை நீர் புகுந்துள்ளது. மேலும் நங்கம் காட்டுவாரி, பனையூர் காட்டுவாரி மற்றும் தென்கடை குறிச்சி பகுதியில் மழைநீர் வீடுகளுக்கு புகுந்துள்ளது. இந்த பகுதிகளை அவர் ஆய்வு செய்தார்.
கலெக்டர் தங்கவேல், டி.ஆர்.ஓ., கண்ணன், குளித்தலை சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ, தாசில்தார் இந்துமதி, நங்கவரம் டவுன் பஞ்., தலைவர் ராஜேஸ்வரி, துணைத்தலைவர் அன்பழகன், செயல் அலுவலர் காந்தரூபன், பொதுப்பணித்துறை எஸ்.டி.ஓ., கோபி கிருஷ்ணன், நெடுஞ்சாலை துறை ஏ.டி. செந்தில்குமரன், வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அப்போது, தென்கடை குறிச்சி வாரியில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பால், மழை தண்ணீர் குடியிருப்புகளுக்குள் புகுந்ததால், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என டவுன் பஞ்., துணைத் தலைவர் அன்பழகன், கண்காணிப்பு அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
குமாரமங்கலம் பஞ்., தேவேந்திரகுல தெருவில் தொடர்ந்து பெய்த கனமழையால், குடிசை வீடு முழுவதும் விழுந்து சேதம் ஏற்பட்டது. அந்த வீட்டின் உரிமையாளருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பஞ்., தலைவர் மனோகரன், பஞ்., செயலாளர் மதியழகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
* மேலும், கிருஷ்ணராயபுரம் அருகில் உடையகுளத்துப்பட்டி பகுதியில், மழை காரணமாக சேதமடைந்த பாதையை பார்வையிட்டு சரி செய்ய உத்தரவிட்டார். கடவூர் அருகில் பாப்பிரெட்டிபட்டி பகுதியில், கால்வாயில் நீர் செல்லும் வழி, அந்த குளம் மழை நீரால் நிரம்பி வழிந்து உபரி நீர் செல்லும் பாதை குறித்து ஆய்வு செய்தார். அதே பகுதியில் மழை நீரால் வீடு சேதமடைந்த மல்லிகா என்பவருக்கு, 6,000 ரூபாய் நிவாரண தொகைக்கான ஆணை மற்றும் பொருட்களை வழங்கினார்.