/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கடும் பனிப்பொழிவால் முருங்கை விலை உயர்வு
/
கடும் பனிப்பொழிவால் முருங்கை விலை உயர்வு
ADDED : ஜன 29, 2025 07:17 AM
அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில், கால்நடை வளர்ப்பு தொழிலுக்கு அடுத்தபடியாக முருங்கை விவசாயம் பிரதானமாக உள்ளது. கொடி முருங்கை, செடி முருங்கை, மர முருங்கை, மூலனுார் முருங்கை என பல்வேறு வகையான முருங்கை ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் முருங்கை சாகுபடி நடந்து வருகிறது. தற்போது அதிகளவு பனிப்பொழிவு மற்றும் மழை பெய்ததால் மகரந்த சேர்க்கை நடக்காததால், முருங்கை வளர்ச்சி பாதிக்கப்பட்டு கிலோ, 300 முதல், 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து, விவசாய விழிப்புணர்வு இயக்கத் தலைவர் செல்வராஜ் கூறியதாவது: கடும் பனிப்பொழிவால், முருங்கை விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சியில் இருந்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நிலை மாறி, தற்போது மஹாராஷ்டிரா மாநிலம், நாசிக் பகுதியில் இருந்து, முருங்கை இறக்குமதி செய்து விற்பனை நடந்து வருகிறது. தமிழக முருங்கை காய்கள் மணமுடையதாக இருக்கும். நாசிக் பகுதியில் இருந்து இறக்குமதி செய்யும் முருங்கை மணம், சுவை இருக்காது. கடந்த ஆண்டு இதே மாதம் முருங்கைக்காய் கிலோ, 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது கிலோ, 300 முதல் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு காரணம் மகரந்த சேர்க்கை இல்லாததே. மேலும் மழை, பனிப்பொழிவு ஆகியவற்றாலும் வரத்து குறைந்து விலை அதிகரித்து வருகிறது. இவ்வாறு கூறினார்.