ADDED : ஜன 01, 2025 10:12 PM
குளித்தலை:கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த வடசேரி ஊராட்சி பாலசமுத்திப்பட்டி எம்.ஜி.ஆர்., நகர் காலனியில் வசித்தவர் மாரியாயி, 73. இவரது ஒரே மகள் சித்ரா, 40. சித்ராவின் கணவர் சவுந்தர்ராஜன். சில ஆண்டுகளுக்கு முன் கணவர் ரங்கன் இறந்ததால், மகள் சித்ரா குடும்பத்துடன் மாரியாயி வடசேரியில் வசித்தார்.
சில நாட்களுக்கு முன், மாரியாயி சேற்றில் வழுக்கி விழுந்து காயமடைந்தார். அதேபோல், சித்ராவின் கணவர் சவுந்தர்ராஜனும் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்தார். இருவரையும் சித்ரா பராமரித்து வந்தார். கடந்த 29ம் தேதி இரவு 9:00 மணிக்கு மாரியாயி மரணம் அடைந்தார். அந்த அதிர்ச்சியில் சவுந்தர்ராஜனும் அன்று நள்ளிரவு 2:00 மணிக்கு இறந்தார்.
தாய், கணவர் இருவரும் ஒரே நாளில் இறந்ததால், இறுதிச் சடங்குக்குக் கூட பணம் இல்லாமல் சித்ரா தவித்தார். வடசேரி ஊராட்சித் தலைவர் சரவணன், எம்.ஜி.ஆர். நகர் காலனி மக்கள், இளைஞர்கள், உறவினர்கள் உதவியுடன் இருவரது உடல்களும் நல்லடக்கம் செய்யப்பட்டது.

