ADDED : ஜன 01, 2024 11:38 AM
ஆதிதிராவிடர்
நலக்குழு கூட்டம்
கரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
அதில், கலெக்டர் தங்கவேல் பேசியதாவது:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர், சாக்கடை வசதி, சுடுகாடு மற்றும் சுடுகாட்டு பாதை, எரிமேடு அமைத்தல் போன்றவற்றில் உள்ள குறைபாடுகளை, ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டும். இரட்டை குவளை முறை, கோவிலுக்கு சமஉரிமை வழங்கப்படாமை, செருப்பு அணிய விடாமல் தடுப்பது போன்ற சம்பவங்களை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
டி.ஆர்.ஓ., கண்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சண்முக வடிவேல், ஆர்.டி.ஓ., ரூபினா, ஒன்றிய கவுன்சிலர் சுமித்ரா தேவி உள்பட பலர் பங்கேற்றனர்.
தார்ச்சாலை மோசம்
பொதுமக்கள் அவதி
கிருஷ்ணராயபுரம் அடுத்த மேட்டுப்பட்டி கிராமத்தில் இருந்து கணக்கம்பட்டி, அரபுளிப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு செல்லும் தார்ச்சாலை உள்ளது. இந்த சாலை வழியாக வாகன ஓட்டிகள் வாகனங்களில் செல்கின்றனர். சாலை பல இடங்களில் கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமாக காணப்படுகிறது. மேலும், சாலை மேடு, பள்ளமாக மாறி வருகிறது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, இந்த சாலையை புதுப்பிக்க கிருஷ்ணராயபுரம் யூனியன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாயனுார் கதவணையில்மீன் விற்பனை தீவிரம்
கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுாரில், காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில் காவிரிநீர் தேக்கி வைக்கப்படுகிறது.
இந்த நீரில் மீன்கள் வளர்க்கப்படுகிறது. வளர்க்கப்படும் மீன்களை, உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று மீன்களை பிடித்துக்கொண்டு வந்து மாயனுார் கதவணை அருகே, கட்டளை வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்கின்றனர். நேற்று, மீன் விற்பனை தீவிரமாக நடந்தது.
இதில், ஜிலேபி மீன் கிலோ, 150 ரூபாய், கெண்டை, 100 ரூபாய், விரால் மீன், 650 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. கரூர், லாலாப்பேட்டை, மணவாசி, சேங்கல், புலியூர், திருக்காம்புலியூர் பகுதியை சேர்ந்த மக்கள் மீன்களை வாங்கி சென்றனர்.
கி.புரம் யூனியனில்பூக்கள் விலை உயர்வு
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட மகிளிப்பட்டி, மாயனுார், காட்டூர், எழுதியாம்பட்டி, தாளியாம்பட்டி, செக்கணம், மதுக்கரை ஆகிய பகுதிகளில் விவசாயிகள், பரவலாக பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இதில், விரிச்சிப்பூக்கள், சின்னரோஜா, கோழிக்கொண்டை ஆகியவை அதிகளவில் சாகுபடி செய்துவருகின்றனர். தற்போது, பனி சீசன் காரணமாக பூக்கள் வரத்து சரிந்துள்ளது. இதனால் பூக்கள் விலை உயர்ந்தது.
அதன்படி, விரிச்சிப்பூ கிலோ, 80 ரூபாயில் இருந்து, 130 ரூபாய், சின்ன ரோஜா, 100 ரூபாயில் இருந்து, 160 ரூபாய், கோழிக்கொண்டை, 60 ரூபாயிலிருந்து, 90 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. கரூர், முசிறி, திருச்சி ஆகிய பூ மார்க்கெட்களுக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்த விலை உயர்வால், பூ விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ரங்கநாத சுவாமி கோவிலில் 9ம் நாள் ராப்பத்து உற்சவம்
கரூர் அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி, ஒன்பதாம் நாள் ராப்பத்து உற்வசம் நடந்தது.
வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, கடந்த, 23ல் கரூர் அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், முதல் ராப்பத்து நிகழ்ச்சி தொடங்கியது. அன்று அதிகாலை, பரமபத சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை, ஒன்பதாம் நாள் ராப்பத்து உற்சவம் நடந்தது.
அதில், உற்சவர் ரங்கநாத சுவாமி, ஆண்டாள் திருக்கோலம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் வளாகத்தில் உற்சவம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.
பா.ஜ., செயல்வீரர்கள் ஆலோசனை
அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி, பா.ஜ., செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம், மாவட்ட மருத்துவ பிரிவு தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில், க.பரமத்தி காட்டு முன்னுாரில், தனியார் திருமண மண்டபத்தில், நேற்று நடந்தது.
அதில், கரூர் எம்.பி., தொகுதியில் பா.ஜ., சார்பில் வெற்றி பெறுவது; பிரதமர் மோடி, 10 ஆண்டு கால சாதனைகளை துண்டு பிரசுரமாக தயார் செய்து, வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து, பிரசாரம் மேற்கொள்வது; பூத்கமிட்டி உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில்நாதன் விளக்கமளித்து பேசினார்.
கரூர் எம்.பி., தொகுதி பொறுப்பாளர் அஜித்குமார், இணை அமைப்பாளர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர் செல்வராஜ், க.பரமத்தி வடக்கு ஒன்றிய தலைவர் செல்வி பழனிசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
ராமர் கோவில் அட்சதை வழங்கல்
கரூர் மாவட்ட பா.ஜ., சார்பில், ராமர் கோவில் அட்சதை வழங்கும் விழா, கல்யாண வெங்கட்ரமண கோவிலில் நடந்தது.
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் மஹா கும்பாபிஷேகம் வரும், 22ல் நடக்கிறது. அதையொட்டி, ராமர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட குழந்தை ராமரின் அட்சதை மற்றும் மஹா பிரசாதம் வழங்கும் விழா, கரூர் மாவட்ட பா.ஜ., சார்பில், தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில், நேற்று நடந்தது. அதில், பொதுமக்களுக்கு கரூர் மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில்நாதன் அட்சதை வழங்கினார். அப்போது, மாவட்ட துணைத்தலைவர் செல்வம், விவசாய அணி தலைவர் செல்வம் உள்பட, பா.ஜ., நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
வெங்கமேடு சாலையில் நிறுத்தும் வாகனங்களால் விபத்து அபாயம்
வெங்கமேடு சாலையில், தள்ளுவண்டிகள், வேன்களை நிறுத்தி வியாபாரம் செய்கின்றனர். இதனால், அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
கரூர் - சேலம் பழைய சாலை வெங்கமேட்டில், குளத்துப்பாளையம் சாலையில் தினசரி மார்க்கெட் செயல்படுகிறது. அப்பகுதியில், 30க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்நிலையில், வெங்மேட்டில் சாலையில், வேன்கள், தள்ளுவண்டிகளில் பொருட்களை வைத்து பலர் வியாபாரம் செய்கின்றனர். இதனால், வெங்கமேடு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், வெங்கமேட்டில் சாலையின் குறுக்கே, தடுப்பு சுவர் உள்ளதால், வாகனங்களால் எளிதாக செல்ல முடியவில்லை.
இந்நிலையில், சாலையில் வேன்கள், தள்ளு வண்டிகளை நிறுத்தி வியாபாரம் செய்வதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, வெங்கமேடு சாலையில், வாகனங்களை நிறுத்தி வியாபாரம் செய்வதை தடுக்க வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கால்நடை மருந்தக நிலம் ஆக்கிரமிப்பு: அகற்ற கோரிக்கை
குளித்தலை அடுத்த கூடலுார் பஞ்., கால்நடை உதவி மருந்தகத்திற்கு அரசு சார்பில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த இடத்தை, கடந்த இரண்டு ஆண்டுக்கும் மேலாக, அருகில் உள்ள பொது மக்கள் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், புதிய கால்நடை மருந்தகத்தில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே, கால்நடை மருந்தகத்தில் உள்ள தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு
போலீஸ் ரோந்து பணி அவசியம்
திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, காந்திகிராமம் பகுதிகளில் பெருவாரியான தெருக்களில் தனித்தனி வீடுகள்தான் அதிகளவு உள்ளன.
இந்த குடியிருப்புகளில், குறி வைத்து இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன. தற்போது தான்தோன்றிமலையில் பூங்காநகர், அசோக்நகர், பாரதிதாசன் நகர் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து, கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன.
பசுபதிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லை அதிக பரப்பளவை கொண்டவை. பசுபதி பாளையம் எல்லையில் இருந்து பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு, தான்தோன்றிமலை போலீஸ் ஸ்டேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.
இரண்டு போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
எனவே, இரவு நேரங்களில் ரோந்து பணியில் அதிகளவு போலீசார் ஈடுபட வேண்டும் என,
பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அ.தி.மு.க., பூத் கமிட்டி
நிர்வாகிகள் கூட்டம்
கரூர் சட்டசபை தொகுதி காதப்பாறை கிராம பஞ்சாயத்து அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், வரும் எம்.பி., தேர்தலுக்காக, கரூர் சட்டசபை தொகுதி காதப்பாறை பஞ்.,ல் உள்ள, வார்டுகளில் பூத் கமிட்டி பணிகளை விரைவுபடுத்துதல், நிறைவேற்றப்படாத தி.மு.க., அரசின் தேர்தல் வாக்குறுதிகளையும், அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதையும், பொதுமக்களிடம் எடுத்து கூறி பிரசாரம் செய்வது குறித்து மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் விளக்கமளித்து பேசினார்.
மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கமலக்கண்ணன், கரூர் பஞ்., யூனியன் கவுன்சிலர் தமிழ்செல்வன் உள்ளிட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.
சீதா - ராமர் கல்யாண உற்சவம்
ஐயப்பா சேவா சங்கம் சார்பில், 23வது ஆண்டு ஸ்ரீ சீதா கல்யாண உற்சவ விழா, நேற்று நடந்தது.
கரூரில் பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அருகே உள்ள ஐயப்பன் கோவில் வளாகத்தில், நேற்று முன்தினம் ஸ்ரீ சீதா கல்யாண உற்சவ விழா, பக்தி பாடல்களுடன் தொடங்கியது. நேற்று காலை, ரமேஷ் பாகவதர் தலைமையில், சீதா, ராமர் உற்சவ சிலைகளுக்கு மஹா அபிஷேகம், கல்யாண உற்சவ விழா நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, சீதா, ராமர் திருவீதி உலா நடந்தது.
வாடிவாசல் கட்டுமான பணி: எம்.எல்.ஏ., பூமி பூஜை
குளித்தலை அடுத்த ஆர்.டி., மலை விராச்சிலேஸ்வரர் கோவில் அருகே, கடந்த, 61 ஆண்டுகளாக பொதுமக்கள் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு, வாடிவாசல் நிரந்தரமாக இல்லாததால், ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாய் செலவு செய்து பொது மக்கள் போட்டி நடத்தி வந்தனர்.
இதனால், நிரந்தர வாடிவாசல் அமைத்து தரவேண்டும் என, பொது மக்கள், மக்கள் பிரதிநிதிகள் சார்பில் எம்.எல்.ஏ., மாணிக்கத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, நிரந்தர வாடிவாசல் அமைக்க, எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதி, 22 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கட்டுமான பணிக்கான பூமி பூஜை, நேற்று காலை, 11:00 மணிக்கு நடந்தது. தி.மு.க., ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார். தோகைமலை யூனியன் குழு தலைவர் சுமதி, யூனியன் கவுன்சிலர் சின்னையன், மாவட்ட பிரதிநிதி சந்திரன், விழாக்குழு தலைவர் சங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., மாணிக்கம் பூமி பூஜை செய்து, பணியை தொடங்கி வைத்தார்.
முன்னதாக, கோவில் காளையை வாடிவாசல் வழியாக அழைத்து வந்து பூஜை செய்தனர். இதில், ஜல்லிக்கட்டு விழாக்குழு பொறுப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், தி.மு.க., பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.