ADDED : ஜன 09, 2024 10:51 AM
க.பரமத்தியில் ரேஷன்
அரிசியுடன் வேன் சிக்கியது
கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், வீடுகளில் இருந்து ரேஷன் அரிசியை, கிலோ, 5 ரூபாய்க்கு பெற்று, அதை பாலீஷ் செய்து அதிக விலைக்கு விற்கப்படுகிறது. நேற்று முன்தினம் க.பரமத்தியில் மாருதி ஆம்னி வேனில் மூட்டைகளில் ரேஷன் அரிசி கொண்டு செல்லப்பட்டது.
அதை, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பிடித்தனர். வேனில் இருந்த இருவரும், தப்பி ஓடி விட்டனர். ரேஷன் அரிசியுடன் கூடிய வேனை, வி.சி.க., நிர்வாகிகள் சுரேந் திரன், சுடர் வளவன் ஆகியோர், நேற்று கரூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். குடிமை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் எஸ்.ஐ., லதா உள்ளிட்ட போலீசார் வேனை, விசாரணைக்கு ஸ்டே ஷனுக்கு கொண்டு சென்றனர்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு
கிலோ ரூ.30க்கு விற்பனை
கிருஷ்ணராயபுரம் யூனியனுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில், பரவலாக சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, கிழங்கு அறுவடை செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் நேரடியாக மக்களிடம் விற்பனை செய்து வருகின்றனர். ஒரு கிலோ சர்க்கரை வள்ளிக்கிழங்கு, 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. லாலாப்பேட்டை, சிந்தலவாடி, கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம் ஆகிய பகுதிகளுக்கு மினி ஆட்டோக்களில் கொண்டு சென்று விற்பனை செய்தனர். மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
சாலையோர வியாபாரிகளுக்கு
சிறுகடன் குறித்து விழிப்புணர்வு
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு, சிறுகடன் வழங்குதல் குறித்த விழிபுணர்வு முகாம் நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அரசு பள்ளி மைதானம் அருகே, டவுன் பஞ்., பகுதியில் உள்ள சாலையோர சிறுதொழில் வியாபாரிகளுக்கு, மத்திய அரசு மூலம் வழங்கும் கடன்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில், பூ வியாபாரம், பழ வியாபாரம், சிறு கடைகள் வைத்திருக்கும் வியாபாரிளுக்கு, மத்திய அரசு சார்பில் வங்கிகள் மூலம் தரப்படும் கடன்கள் பற்றி விரிவாக வங்கி அதிகாரிகள் எடுத்துக்கூறினர். கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., அலுவலக பணியாளர்கள் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள், சிறு வியாபாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணராயபுரத்தில்
சாரல் மழை
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட வயலுார், கருப்பத்துார், மேட்டுப்பட்டி, பாலப்பட்டி, வேங்காம்பட்டி, மகாதானபுரம், லாலாப்பேட்டை, கிருஷ்ணராயபுரம், மாயனுார், திருக்காம்புலியூர் ஆகிய இடங்களில், நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின், மதியம் சாரல் மழை பெய்தது. இதனால், கிராமப்பகுதி முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. சாரல் மழையால், மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள துவரை, சோளம், கொள்ளு ஆகிய பயிர்களுக்கு மழைநீர் கிடைத்துள்ளது. இதன் மூலம் பயிர்கள் செழிப்பாக வளரும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.
ஊரக உள்ளாட்சி துறை
ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யூ.,) சார்பில், கலெக்டர் அலுவலகம் முன், ஆர்பாட்டம் நடந்தது.
அதில், பஞ்சாயத்துக்களில் பணிபுரியும் மேல்நிலை குடிநீர் தொட்டி இயக்குபவர்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். துாய்மை காவலர்களுக்கு மாத ஊதியம், 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெற்ற ஓ.எச்.டி., ஆப்ரேட்டர்களுக்கு பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்ற துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு நிதி, 50 ஆயிரம் ரூபாயை, ஓய்வு பெறும் நாளில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் முருகேசன், நிர்வாகிகள் கந்தசாமி, ராஜா முகமது, கணேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
குளித்தலை அடுத்த ஐநுாற்றுமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கப்பொண்ணு, 50; கூலித்தொழிலாளி. இவரது மகன் ஞானபிரகாஷ்; எலக்ட்ரிக் தொழிலாளி. கடந்த டிச., 31 இரவு, 7:00 மணியளவில், தனக்கு சொந்தமான டூவீலரில், அப்பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவில் அருகே சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அதே ஊரை சேர்ந்த சரவணன் மகன் விளையாடிக்கொண்டிருந்தார். அவர் மீது மோதுவது போல் ஞானப்
பிரகாஷ் டூவீலரில் சென்றுள்ளார். இதை பார்த்த அதே ஊரை சேர்ந்த பிரேம், சக்தி, ராஜாராம் ஆகியோர், ஞானப்பிரகாஷிடம் கேட்டுள்ளனர். இதையறிந்த தாய் தங்கப்பொண்ணு, 'ஏன் என் மகனிடம் வீணாக தகராறு செய்கிறீர்கள்' என, கேட்டுள்ளார்.
அப்போது, மூவரும் தகாத வார்த்தையில் பேசி, தங்கப்பொண்ணுவை தாக்கியுள்ளனர். இதுகுறித்து, தங்கப்பொண்ணு கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் வழக்குப்
பதிவு செய்து, மூன்று பேரை தேடி வருகின்றனர்.
கரூர் பகுதிகளில் சாரல் மழை
கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று சாரல் மழை பெய்தது.
தென்மேற்கு வங்க கடல் பகுதி, அரபிக்கடல் பகுதிகளில், மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு, சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழகத்தில் பல மாவட்டங்களில், மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், நேற்று காலை கரூர் நகர், புலியூர், வெண்ணை மலை, தொழிற்பேட்டை, கொளந்தானுார், வெள்ளியணை, தான்
தோன்றிமலை, அரசு காலனி, காந்தி கிராமம், ராமானுார், சுக்காலியூர், செல்லாண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், சிறிது நேரம் சாரல் மழை பெய்தது.
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு
பணி தீவிரம்: கலெக்டர் தகவல்
கரூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி, நடப்பு மாதம் முழுவதும் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கான, சமூக தரவுகள் பதிவு இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பு பணி, கரூர் மாவட்டத்தில் நடப்பு மாதம், முழுவதும் நடத்தப்படுகிறது. கணக்கெடுப்பில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்க களப்பணியாளர்கள், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன களப்பணியாளர்கள், தகவல் சேகரிக்கும் பணியை மேற்கொள்கின்றனர்.
கணக்கெடுப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள செயலியில், தகவல்கள் பதிவு செய்யப்படும். மாவட்டத்தில் உள்ள, அனைத்து மாற்றுத் திறனாளிகளும், தங்கள் தகவலை தயக்கம் இல்லாமல் வழங்கலாம். நடப்பு மாதம் முழுவதும், மாற்றுத்திறனாளிகள் தங்கள் விபரங்களை சமூக தரவு தளத்தில் பதிவு செய்யலாம். மேலும், விபரங்களுக்கு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம். 04324-257130 என்ற தொலைபேசி எண்ணிலும், தொடர்பு கொண்டு விபரம் பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விலையில்லா
சைக்கிள் வழங்கல்
அரவக்குறிச்சி அருகே, எலவனுார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.
எம்.எல்.ஏ., இளங்கோ, க.பரமத்தி தெற்கு ஒன்றிய செயலர் கருணாநிதி, ஒன்றிய துணை செயலர்கள் கருப்புசாமி, நல்லுசாமி, எலவனுார் ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி, மாவட்ட கல்வி அலுவலர் காமாட்சி, தலைமை ஆசிரியை கயல்விழி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பள்ளியில் பயிலும், 38 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை எம்.எல்.ஏ., இளங்கோ வழங்கினார்.
கலெக்டர் அலுவலகத்தில்
மக்கள் குறைதீர் முகாம்
கரூர் கலெக்டர் அலுவலகத்தின் கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது.
அதில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தண்டபாணி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். ஓய்வூதியம், வங்கி கடன், வீட்டு மனை பட்டா, வேலைவாய்ப்பு, ரேஷன் கார்டு கோரிக்கை உள்ளிட்ட, 557 மனுக்கள் பெறப்பட்டன. அதில், மாற்றுத்திறனாளிகள் தரப்பில் வழங்கப்பட்ட, 48 மனுக்களும் அடங்கும். முகாமில், கூடுதல் திட்ட இயக்குனர் உமா சங்கர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோவன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அன்புமணி, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சண்முக வடிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.
அரவக்குறிச்சி பகுதியில்
பரவலாக மழை
விட்டு விட்டு மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 8:30 மணி அளவில் சாரல் மழை பெய்தது. மீண்டும் மதியம், 12:00 மணி அளவில் பரவலாக மழை பெய்தது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக, வறட்சியாக காணப்பட்ட அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரத்தில் மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சுதந்திர போராட்ட வீரர்
வாரிசுகள் சங்க பொதுக்குழு
கரூர் மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்-வாரிசுகள் சங்க பொதுக்குழு கூட்டம், தலைவர் அவினாசி லிங்கம் தலைமையில் நடந்தது.
அதில், தமிழக அரசு சங்க உறுப்பினர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும், கரூர் நேதாஜி சிலை வளாகத்தில், மாவட்ட தியாகிகள் பெயர் பொறித்த, கல்வெட்டு வைப்பது, அரசு போக்குவரத்து கழக பஸ்களில், 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், துணைத்தலைவர் ராஜேந்திரன், அமைப்பு செயலாளர் ஓம்சக்திசேகர், செயலாளர் ராதா கிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
மயானம் செல்ல சாலை வசதி
கேட்டு கலெக்டரிடம் மனு
குளித்தலை அருகே, மயானம் செல்ல சாலை வசதி செய்து தர வேண்டும் என, பொதுமக்கள் நேற்று, கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கலிங்கப்பட்டியில், 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்குள்ள குளத்துப்பகுதியில் மயானம் செல்ல சாலை வசதி உள்ளது. அந்த சாலையை உள்ளூரை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.
இதனால், இறந்தவர்களின் உடலை எளிதாக எடுத்து செல்ல முடியவில்லை. எனவே, கலிங்கப்பட்டியில் மயானம் அமைந்துள்ள பகுதியில் உள்ள, ஆக்கிரமிப்புகளை அகற்றி மயானம் செல்ல வசதியாக பாதை அமைத்து தர வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இ.கம்யூ., கட்சி
ஆர்ப்பாட்டம்
கரூர் மாவட்ட இ.கம்யூ., கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் நாட்ராயன் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம், மழை பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். தமிழகத்துக்கு மத்திய அரசு உரிய நிதியை, உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் சண்முகம், நிர்வாக குழு உறுப்பினர்கள் லட்சுமி காந்தன், குப்புசாமி, ஏ.ஐ.டி.யு.சி., செயலாளர் வடிவேலன் உள்பட பலர் பங்கேற்றனர்.
மாத வாடகை செலுத்தாத
கடைகளை பூட்டிய மாநகராட்சி
கரூரில், மாத வாடகை செலுத்தாத, கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டினர்.
கரூர் மாநகராட்சி பகுதியில் செலுத்த வேண்டிய நிலுவை வரிகளை, மார்ச், 24 க்குள் செலுத்த வேண்டும் என, ஆணையாளர் சுதா கடந்த டிச., 28 ல் உத்தர விட்டிருந்தார். மேலும், மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு பிரதி மாதம், 5 க்குள் வாடகை செலுத்த வேண்டும் எனவும், உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று மாலை மாநகராட்சிக்கு சொந்தமான, மாத வாடகை செலுத்தாத, 28 கடைகளை வருவாய் ஆய்வாளர்கள் ரகுபதி, பாஸ்கர் தலைமையிலான, மாநகராட்சி ஊழியர்கள் பூட்டினர். வாடகை பாக்கியை செலுத்தி விட்டால், கடைகளை திறக்க அனுமதிக்கப்படும் என,அதிகாரிகள் தெரிவித்தனர்.
மிளகாய் பொடி துாவி
சாப்பாடு பேக் திருட்டு
குளித்தலை அடுத்த வயலுார் பஞ்., குழந்தைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜரத்தினம், 45; டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேன். இவர், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு பணி முடிந்து வரவு - செலவு கணக்கு பார்த்துவிட்டு, பணத்தை மேஜை டிராயரில் வைத்து கடையை பூட்டினார்.
பின், 11:30 மணியளவில் தனக்கு சொந்தமான டூவீலரில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.
குளித்தலை - மணப்பாறை நெடுஞ்சாலை, தோகைமலை அருகே தனக்கு பின்னால் பைக்கில் வந்த, 25 வயது மதிக்கத்தக்க இருவர், ராஜரத்தினம் முகத்தில் மிளகாய் பொடியை துாவினர். பின், டூவீலரில் இருந்த சாப்பாட்டு பையை, பணப்பை என நினைத்து அதை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பினர். இது குறித்து ராஜரத்தினம் அளித்த புகார்படி, தோகைமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சக்தி அம்மன் கோவில் திருவிழா
மோகனுார் யூனியன், ராசிபாளையம் பஞ்., இந்திரா நகரில், சக்தி விநாயகர், சக்தி அம்மன் ஆலயம் உள்ளது. இக்கோவிலில், மார்கழி மாத திருவிழா, மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நேற்று முன்தினம், காவிரி ஆற்றில் இருந்து வேல் மற்றும் பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக சென்று, கோவிலை அடைந்தது.
தொடர்ந்து, மூலவர் முன் வைக்கப்பட்டு, விநாயகர், மூலவர் சக்தியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, தீபாராதனை நடந்தது.
நேற்று, மாவிளக்கு பூஜையும், மூலவர் சக்தி அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.
அரவக்குறிச்சியில் புதிய பாரத
எழுத்தறிவு திட்ட பயிற்சி முகாம்
அரவக்குறிச்சி வட்டார வள மைய அலுவலகத்தில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
அரவக்குறிச்சி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அரவக்குறிச்சி வட்டார வளமைய அலுவலகத்தில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நேற்று நடைபெற்றது. பயிற்சியில், 42 மையங்களை சேர்ந்த தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ், கணிதம் பற்றியும், மதிப்பீடு பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியை வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் லதா, பிரதிப்பிரியா, தீபா ஆகியோர் அளித்தனர்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம் பயிற்சியை துவக்கி வைத்தார். பயிற்சி ஏற்பாடுகளை மகேஸ்வரி செய்தார். பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பாட கையேடு வழங்கப்பட்டது.
பள்ளி வகுப்பறை கட்டுமானப்பணி
எம்.எல்.ஏ., பூஜை செய்து தொடக்கம்
கடவூரில், 1.91 கோடி ரூபாய் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டுமான பணியை, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாம சுந்தரி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., தொகுதிக்குட்பட்ட, கடவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், நபார்டு திட்டத்தில், 1.91 கோடி ரூபாய் மதிப்பில், 10 புதிய வகுப்பறைகள் கட்டுமான பணிக்கு, எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
அதை தொடர்ந்து, கடவூர், பூஞ்சோலைப்பட்டி, துாளிப்பட்டி, அய்யம்பாளையம் பகுதியில் உள்ள அரசு துவக்க பள்ளிகளில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், தலா, 2 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய, 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பறையை துவக்கி வைத்தார்.
கடவூர் தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் சுதாகர், யூனியன் கவுன்சிலர் சுமதி மோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
சட்ட விரோத மது விற்பனை
74 பாட்டில்கள் பறிமுதல்
கரூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 74 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 74 மது பாட்டில்களை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், மதுபாட்டில்களை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததாக குமார், 40; மருதன், 30; தமிழழகன், 29; பன்னீர் செல்வம், 47; சரவணன், 50; உள்பட, 11 பேரை, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு பயிற்சி
மாவட்ட நுாலக அலுவலர் அழைப்பு
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 போட்டி தேர்வுக்கான, மாதிரி தேர்வுகளில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் வரும், 19க்குள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என, கரூர் மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடைபெற உள்ள குரூப்-4 (வி.ஏ.ஓ.,) போட்டி தேர்வுக்கு, கரூர் மாவட்ட நுாலகத்தில் மாதிரி தேர்வுகள், வினாத்தாள் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் இலவசமாக நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி, ஒவ்வொரு புதன் கிழமையும், காலை, 10:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை மாதிரி தேர்வுகளும், மதியம், 2:30 மணி முதல், மாலை, 5:30 மணி வரை வினாத்தாள் குறித்த கலந்துரையாடலும், கரூர் மாவட்ட மைய நுாலகம், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி ஆகிய முழு நேர நுாலகங்களில் நடக்கிறது.
இதில், பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் அந்தந்த நுாலகங்களில் வரும், 19 க்குள் பெயர், முகவரியை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கால்நடை பல்கலை கழக மையத்தில்
இன்று நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி
கரூர், மண்மங்கலம் பண்டுதகாரன்புதுார் கால்நடை பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இன்று, நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த, இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.
இதுகுறித்து, ஆராய்ச்சி மையம் மற்றும் பயிற்சி மைய தலைவர் டாக்டர் அமுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோழி இனங்கள், பராமரிக்கும் முறைகள், தீவனங்கள், கோழிகளை தாக்கும் நோய்கள் மற்றும் கட்டுப்
படுத்தும் முறைகள் உள்ளிட்ட, பல்வேறு தலைப்புகளில் கால்நடை பல்கலைகழக பேராசிரியர்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் இன்று காலை, 10:30 மணிக்குள், பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 73390-57073 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.