sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

செய்திகள் சில வரிகளில்... கரூர்

/

செய்திகள் சில வரிகளில்... கரூர்

செய்திகள் சில வரிகளில்... கரூர்

செய்திகள் சில வரிகளில்... கரூர்


ADDED : ஜன 18, 2024 12:42 PM

Google News

ADDED : ஜன 18, 2024 12:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாகன விபத்தில்

இளைஞர் பலி

வேகமாக சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால், இளைஞர் பலியானார்.

அரவக்குறிச்சி அருகே, வேளஞ்செட்டியூரை அடுத்த தொக்குப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் கார்த்திகேயன், 19. இவர், ஆண்டிபட்டிக்கோட்டையில் இருந்து குரும்பபட்டி செல்லும் சாலையில், நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ஆண்டிப்பட்டிக்கோட்டை கருப்பண்ண சுவாமி கோவில் அருகே சென்றபோது, வாகனத்தை வேகமாக இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தந்தை ராஜேந்திரன் அளித்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

பள்ளி சிறுமி மாயம்

போலீசில் தந்தை புகார்

குளித்தலை அடுத்த, கல்லடை பஞ்., கீழவெளியூர் நடுத்தெருவை சேர்ந்த கூலி தொழிலாளியின், 14 வயது மகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த, 15ல் இரவு 9:00 மணியளவில் வீட்டில் இருந்த அவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, தந்தை கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனர்.

சூதாட்டம்:14 பேர் கைது

குளித்தலை அடுத்த, லாலாபேட்டை கடைவீதி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக லாலாபேட்டை போலீசாருக்கு வந்த தகவல்படி, நேற்று முன்தினம் மாலை போலீசார் சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது பணம் வைத்து சூதாடிய கோவிந்தராஜ், 38, கிருஷ்ணமூர்த்தி, 39, மோகன்ராஜ், பாலாஜி, 41, சதீஷ்குமார், 39, தினேஷ்குமார், 32, மோகன், 36, ஆகிய ஏழு பேரை போலீசார் செய்தனர். அவர்களிடமிருந்து நான்கு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல், போத்துராவுத்தன்பட்டி குளத்துக்கரை அருகில் சூதாடிய பிரகாஷ், 26, தனபால், 32, பாலசுப்பிரமணி, 27, சிவானந்தம், 34, அமர்நாத், 23, முருகேசன், 38, சுரேஷ், 30, ஆகிய ஏழு பேரை தோகைமலை போலீசார் கைது செய்தனர்.

கனரக வாகனங்களால்

போக்குவரத்து நெரிசல்

கரூர் வையாபுரிநகர் முதல் கிராஸ் குறுகலான தெருவாக உள்ளது. இந்த தெருவில் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தனியார் கம்பெனிகளுக்கு லோடு ஏற்றிக்கொணடு கனரக வாகனங்கள் தினந்தோறும் வந்து செல்கின்றன. மேலும் லோடு ஏற்றுவதற்காக பல மணி நேரம் அங்கேயே நிறுத்தப்படுகிறது. இதனால் எதிர் திசையில் வரும் வாகனங்கள் ஒதுங்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றன. மேலும் டூவீலர்கள் போன்றவை ஒன்றோடு ஒன்று இடித்துக்கொண்டு சிறு விபத்துக்களும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.

கனரக வாகனங்கள் இந்த தெருவில் வரும்போதெல்லாம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நிற்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. எனவே, போக்குவரத்து போலீசார் வையாபுரி நகர் முதல் கிராசில் கனரக வாகனங்கள் செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எம்.ஜி.ஆர்., பிறந்த நாள்

விழா கொண்டாட்டம்

மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின், 107 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம், கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் அ.தி.மு.க., சார்பில் கொண்டாடப்பட்டது, மறைந்த முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாவட்ட, அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தலைமையில், அக்கட்சியினர் மாலை அணிவித்தனர். மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, பாசறை செயலாளர் கமலகண்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

* கரூர் மனோகரா கார்னரில், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., அணி சார்பில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அதில் எம்.ஜி.ஆர்., உருவ படத்துக்கு, மேற்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அரவக்குறிச்சியில் சேவல்

சண்டை; 18 பேர் கைது

அரவக்குறிச்சியில், சேவல் சண்டை நடத்திய 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், அனுமதியின்றி சேவல் சண்டை நடப்பதாக அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சென்ற போலீசார், பூலாம்வலசு பகுதியில் சேவல் சண்டை நடத்திய அசோக், 34, மாரியப்பன், 40, செந்தில்குமார், 30, ஜெயராம், 40, மணல்மேட்டில் உள்ள ஒரு தோட்டத்தில் சேவல் சண்டை நடத்திய முத்துராஜ், 48, வசந்தகுமார், 28, புத்தாம்பூர் பாலமுருகன், 30, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் நாகம்பள்ளி செல்லாண்டியம்மன் கோவில் அருகே, சேவல் சண்டை நடத்திய இதே பகுதியை சேர்ந்த செல்வராஜ், 37, வெங்கடாபுரம் செல்வன், 30, கணேசன், 30, மூலப்பட்டி சத்யராஜ், 37, பொன்னாவரம் பகுதியில் சேவல் சண்டை நடத்திய அரவக்குறிச்சி வரசன், 20, விஜயகுமார், 29, ராம்பிரசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தாராபுரம் சாலையில் சேவல் சண்டையில் ஈடுபட்ட திருப்பூர் மாவட்டம், பட்டுத்துறையை சேர்ந்த முனியப்பன், 34, தாராபுரத்தை சேர்ந்த கண்ணன், 20, கிளாங்குண்டல் பகுதியை சேர்ந்த கார்த்திக் பிரபு, 26, மூலனுாரை சேர்ந்த ஆனந்த், 32, என, 18 பேரை அரவக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சண்டையில் ஈடுபடுத்திய, 12 சேவல்களை பறிமுதல் செய்தனர்.

கபிலர்மலை பாலசுப்பிரமணிய

சுவாமி கோவிலில் கொடியேற்றம்

கபிலர்மலை, பாலசுப்பிரமணியர் சுவாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கொடியேற்று விழா நடந்தது.

கபிலர்மலை, பாலசுப்பிரமணியர் கோவிலில் நடப்பாண்டு தைப்பூச தேர்த்திருவிழா வரும், 25ல் நடக்கிறது. இதை முன்னிட்டு அன்று அதிகாலை, 4:30 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி, மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. கொடியேற்று விழாவை முன்னிட்டு, திருவிழா ஆலோசனை குழு தலைவர் ராமலிங்கம் முன்னிலையில் கொடியேற்று விழா நேற்று நடந்தது. முன்னதாக பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. நுாற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

கொடியேற்று விழா, தேர்த்திருவிழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் செந்தில்குமார், ஆய்வாளர் ஜனனி, தக்கார் வினோதினி மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

மத்திய பிரதேசத்தில் இருந்து

நாமக்கல்லுக்கு வரத்தான சோயா

கோழித்தீவன அரவை ஆலைகளுக்கு தேவையான, சோயா மத்தியபிரதேசத்தில் இருந்து, நாமக்கல்லுக்கு சரக்கு ரயில் மூலம் வரத்தானது.

நாமக்கல் மாவட்டத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் செயல்படுகின்றன. அங்கு வளர்க்கப்படும் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் சேர்க்கப்படும் சோளம், மக்காச்சோளம், சோயா, புண்ணாக்கு உள்ளிட்ட மூலப்பொருட்கள் பெரும்பாலும் வடமாநிலங்களில் இருந்து வாங்கி வரப்படும்.

அந்த வகையில் மத்தியபிரதேசம் மாநிலம் அர்தாவில் இருந்து, 2,600 டன் சோயா வாங்கி, 51 வேகன்கள் கொண்ட சரக்கு ரயிலில், நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டு. அங்கிருந்து, 110 லாரிகளில் ஏற்றி கோழித்தீவன அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இளவட்ட கல்

துாக்கும் போட்டி

திருச்செங்கோடு, நெசவாளர் காலனி பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இளவட்டக்கல் துாக்கும் போட்டி நடந்தது.

சங்க காலம் தொட்டு, இளவட்ட கல்லை துாக்குபவர்களுக்கு மட்டுமே திருமணத்திற்குபெண் கொடுக்கும் நிலை இருந்து வந்தது. காலப்போக்கில் இந்த கலை அழிந்து வரும் சூழலில், சில கிராமங்களில் மட்டுமே நடந்து வருகிறது. திருச்செங்கோடு, நெசவாளர் காலனி பகுதியில் இளவட்டக்கல் துாக்கும் போட்டி நேற்று நடந்தது. 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள், 86 கிலோ எடை கொண்ட கல்லை தோளுக்கு மேல் துாக்கி, பின்பக்கமாக போடுவோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

வெள்ளியணையில்

எருது விடும் விழா

கரூர் மாவட்டம், தான்தோன்றி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளியணையில், ஆண்டுதோறும் தை மாதத்தில் எருதுவிடும் விழா நடப்பது வழக்கம். இந்த விழாவில் மேட்டுப்பட்டி, முத்துப்பட்டி பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள், தாங்கள் வளர்த்து வந்த எருதுகளை இப்

பகுதியில் உள்ள பெருமாள், மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்து, பின்னர் ஊரைச் சுற்றி வலம் வருவது வழக்கம். அதன் அடிப்படையில், நேற்று எருது விடும் விழா வெகு சிறப்பாக நடந்தது. கிராமமக்கள், கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்லில் பொது இடங்களில்

கண்காணிப்பு பணி: எஸ்.பி.,

குடியரசு தினவிழாவையொட்டி, பொது இடங்களில் கண்காணிப்பு பணி நடைபெறும் என, எஸ்.பி., தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

வரும், 26ல் குடியரசு தினவிழா கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் ஸ்டாண்ட், கடைவீதி மற்றும் முக்கிய சந்திப்புகள், வழிபாட்டு தலங்களில் குற்றத்

தடுப்பு போலீசார் மற்றும் வெடிபொருள் கண்டு

பிடித்தல், செயல் இழக்க செய்யும் போலீசார் சோதனைகள் நடத்தி பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குற்ற செயல்களில் ஈடுபடுவோர் கண்டுபிடிக்கும் பட்சத்தில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அய்யர்மலையில் காணும் பொங்கல்

விழாவில் தேவராட்டம் ஆடி வழிபாடு

குளித்தலை அடுத்த, அய்யர்மலை ரத்தனகிரீஸ்வரர் கோவிலில் காணும் பொங்கலையொட்டி பாரம்பரிய முறைப்படி தேவராட்டம் ஆடி வழிபாடு நடந்தது.

குளித்தலை அடுத்த, சத்தியமங்கலம் பஞ்., அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 26 ஊர் மந்தை நாயக்கர்கள், காணும் பொங்கல் விழாவை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி வழிபாடு செய்தனர். நேற்று மாலை, 5:00 மணியளவில் காளை மாடுகளுடன் கையில் பிரம்பு ஏந்தி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். பின் காளை மாடுகளை காமன் கோவில் அருகே அவிழ்த்து விட்டு மாலை தாண்டும் நிகழ்வை நடத்தினர்.

அதனை தொடர்ந்து ரத்தினகிரீஸ்வரர் கோவில் முன்புறம், உருமி மேளதாளங்கள் முழங்க தேவராட்டம் ஆடி மகிழ்ந்தனர். பின்னர் ஊர் மந்தையை சேர்ந்தவர்கள் சுவாமி தரிசனம் செய்து வந்திருந்த அனைவருக்கும் சந்தனம், குங்குமம் வழங்கி வழிபட்டனர். தேவராட்டத்தை காண சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளானோர் கண்டுகளித்தனர்.

காளியம்மன் கோவில்

தீர்த்த குட ஊர்வலம்

குமாரபாளையம், காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.

குமாரபாளையம், காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கிராம சாந்தி பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை கணபதி பூஜை, பூர்வாங்க பூஜைகள் நடத்தப்பட்டு, காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டன. ஆயிரக்கணக்கான பெண்கள், மஞ்சள் ஆடை அணிந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்தனர். இன்று நவகிரக ஹோமம், பூமி பூஜை செய்து மண் எடுத்தல் நடக்கிறது.நாளை அஷ்ட லட்சுமி ஹோமம், முதற்கால யாக சாலை பூஜைகள் துவக்கப்படவுள்ளன.

வரும், 20ல் இரண்டாம் கால யாக சாலை பூஜை, மாலையில் மூன்றாம் கால யாக சாலை பூஜை நடக்கிறது. 21 காலை கும்பாபிஷேக விழாவையொட்டி, கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்களால் புனித நீர் ஊற்றப்படுகிறது. அன்று இரவு உற்சவ மூர்த்தி திருவீதி உலா நடைபெறவுள்ளது.

கும்பாபிஷேக விழாவை பவானி காளிங்கராயன்பாளையம் மணிகண்டன் சிவாச்சாரியார், கோவில் அர்ச்சகர் சதாசிவம் மற்றும் குழுவினர் நடத்தவுள்ளனர்.

காப்பீடு இல்லாமல் வாகனங்கள் இயக்கம்

பாதிக்கப்படுபவர் இழப்பீடு பெறுவதில் சிக்கல்

காப்பீடு எடுக்காத லாரி போன்ற நான்கு சக்கர வாகனங்கள் மீது போக்குவரத்துத்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

க.பரமத்தி ஒன்றியத்தில் ஆண்டு தோறும் சிறிய, பெரிய அளவிலான வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதில், விபத்துக்குள்ளாகும் போது, பாதிப்புக்குள்ளாகும் நபர் விபத்தை ஏற்படுத்தியவர் மீது வழக்கு தொடர்ந்து, தனக்கான இழப்பீட்டை காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்ள வழியுள்ளது. இங்கு, கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலையில், கார், வேன், மினி ஆட்டோக்கள் மட்டுமல்லாது குறிப்பாக ஜல்லி லாரிகள் போன்ற வாகனங்கள் காப்பீடு இல்லாமல் இயக்கப்படுகின்றன. போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடும் போது, ஜல்லி லாரி போன்ற வாகனங்களில் காப்பீடு உள்ளதா என ஆய்வு செய்வதில்லை.

இதனால் காப்பீடு இல்லாத லாரி, கார், வாகனங்கள் மூலம் விபத்து ஏற்படும் போது பாதிக்கப் படுவோருக்கு உரிய இழப்பீடு கிடைக்காத நிலை உள்ளது.எனவே, காப்பீடு எடுக்காத ஜல்லி லாரி உள்பட வாகனங்கள் மீது, போக்குவரத்து மற்றும் போலீஸ் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us