ADDED : ஜன 22, 2024 12:03 PM
பணம் வைத்து சூதாடிய
ஆறு பேர் அதிரடி கைது
குளித்தலை அடித்த, போத்தராவுத்தன்பட்டி குளக்கரையில் பணம் வைத்து சூதாடுவதாக, தோகைமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று முன்தினம் மாலை சம்பவ இடத்தில் போலீஸ் ரோந்து சென்றனர்.
அப்போது, சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த போத்தராவுத்தன்பட்டியை சேர்ந்த அமர்நாத், 23, சுரேஷ், 30, சின்னதேவன்பட்டி முருகேசன், 35, ஆகியோரை பிடித்து கைது செய்தனர்.
இதேபோல், மருதுார் டவுன் பஞ்., பணிக்கம்பட்டி காலனி தண்ணீர் தொட்டி அருகே பாண்டியன், 51, மேட்டு மருதுார் மூக்கன், 42, புதுப்பாளையம் கி ேஷார்குமார், 21, ஆகியோரை குளித்தலை போலீசார் கைது செய்தனர்.
சாலையின் இரு புறமும்
மணல் பரப்பால் விபத்து
சாலையின் இருபுறமும் உள்ள மணல் பரப்பால், விபத்து ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர்.
கரூரிலிருந்து, கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் தென்னிலை வழியாக சென்று வருகிறது. இதில், கடைவீதி பகுதியில் சாலையின் இருபுறமும் ஏராளமான மணல் பரப்பு சேர்ந்து கிடக்கிறது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் வரும் பலரும் எதிரே வேகமாக வரும் வாகனங்களுக்கு, வழி கொடுக்க நினைத்து ஒதுங்கும்போது, மணல் சறுக்கி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் தென்னிலை பகுதியில் உள்ள மணல் பரப்பை அப்புறப்படுத்த அதிகாரிகள் முன் வர வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
சட்ட விரோத மதுபாட்டில்
விற்பனை: 7 பேர் கைது
கரூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த, ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று முன்தினம் தோகமலை, வெள்ளியணை, லாலாப்பேட்டை, அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், வாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக வெங்கடேஷன், 35, ராஜா, 50, நதியா, 36, மதிவாணன், 56, காளிமுத்து, 65, மலையாத்தாள், 46, மகேந்திரன், 26, ஆகிய ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து, 56 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்
கொடிமரம் புதிதாக ஸ்தாபிதம்
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், கொடி மரம் நேற்று, புதிதாக ஸ்தாபிதம் செய்யப்பட்டது.
கரூரில் பிரசித்தி பெற்ற, கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், பழமை வாய்ந்த கொடி மரம் கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன் சேதம் அடைந்தது. இதையடுத்து, சேதமடைந்த கொடிமரம் அகற்றப்பட்டு, தற்காலிகமாக கொடி மரம் வைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை புதிதாக கொடி மரம் தயார் செய்யப்பட்டு, நந்தி சிலை முன்புறம் சிறப்பு பூஜை மற்றும் லட்சார்ச்சனை மூலம் ஸ்தாபிதம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
சி.ஐ.டி.யு., சார்பில்
தியாகிகள் தின
தெருமுனை கூட்டம்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகில் சித்தலவாய் கடை வீதியில், சி.ஐ.டி.யு., தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தியாகிகள் தின தெருமுனை கூட்டம், கலை நிகழ்ச்சி, உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், செயலாளர் முருகேசன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கண்ணதாசன், ஒன்றியச் செயலாளர் தர்மலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.
சாலைகளில் கால்நடைகள்
விபத்தால் மக்கள் பாதிப்பு
கரூர் மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடைகள் உலா செல்வதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
கரூர் மாவட்டத்தின் வழியாக, மதுரை தேசிய நெடுஞ்சாலை, சேலம் தேசிய நெடுஞ்சாலை, திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் கோவை, ஈரோடு, நாமக்கல் மாவட்டம் மோகனுார் சாலை, வெள்ளியணை வழியாக திண்டுக்கல் சாலைகள் உள்ளன. அந்த சாலைகள் வழியாக நாள்தோறும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில், முக்கிய சாலைகளில் கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் தீவனத்துக்காக, அதிகாலையில் அவிழ்த்து விடுகின்றனர். அந்த கால்நடைகள் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளின் நடுவே தாராளமாக உலா செல்கிறது. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக, டூவீலர்களில் செல்வோர், சாலையின் நடுவே கால்நடைகள் ஓடுவதால், கீழே விழுந்து காயமடைகின்றனர்.
எனவே, சாலைகளில் கால்
நடைகளை அவிழ்த்து விடுவதை தவிர்க்குமாறு, அதன் உரிமையாளர்களுக்கு, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டியது அவசியம்.
கரூரில் மீண்டும் வந்த பள்ளம்
பெரும் பீதியில் பொதுமக்கள்
கரூரில், சாலையில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கரூர் ராஜாஜி சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து, அண்ணா வளைவு, ரத்தினம் சாலை, கோவை சாலை ஆகிய இடங்களில் அடுத்தடுத்து பள்ளங்கள் ஏற்பட்டன. ஐந்து ஆண்டுகளுக்கு முன், வெங்கமேடு ரயில்வே பாலத்துக்கு முன் ஏற்பட்ட பள்ளத்தில், அரசு பஸ் சிக்கி கொண்டது. பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
சாலையில் பள்ளம் வருவதும், அதை மாநகராட்சி சார்பில் சரி செய்து, புதிதாக தார்ச்சாலை அமைப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. பாதாள சாக்கடைக்காக, போடப்பட்ட குழாய்களில் ஏற்படும் அழுத்தம் காரணமாக, சாலையில் பள்ளம் ஏற்படுவதாக, மாநகராட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, கரூர் ஐந்து சாலை பிரிவு கோடீஸ்வரர் கோவில் முன், பள்ளம் ஏற்பட்டது. இதனால், அந்த சாலை வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்காமல், பேரி கார்டுகள் மட்டும் வைக்கப்பட்டுள்ளது. அதை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை. இதனால் கரூர் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
விவசாயி மீது தாக்குதல்
நான்கு பேர் மீது வழக்கு
குளித்தலை அடுத்த, நாச்சியார் பட்டியை சேர்ந்தவர் முனியப்பன், 65, விவசாயி. அதே ஊரை சேர்ந்தவர் பிரபாகரன், 36. இருவருக்கும் இடையே, விவசாய நிலத்திற்கு பொது கிணற்றில் தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு ஏற்பட்டது.
இந்த பகையை மனதில் வைத்துக்கொண்டு, நேற்று முன்தினம் காலை முனியப்பன் தன் வீட்டில் இருந்தபோது, பிரபாகரன் மற்றும் மூன்று நபர்கள் அவரை அருகில் உள்ள இரும்பு மின் கம்பத்தில் கட்டி வைத்து, அடித்து காயப்படுத்தினர். பாதிக்கப்பட்ட முனியப்பன், குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முனியப்பன் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் பிரபாகரன் மற்றும் மூவர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் கவிழ்ந்து ஒருவர் பலி
திருப்பூர் மாவட்டம், கோட்டார்பட்டி புதிரை சேர்ந்தவர் தண்டபாணி, 42. இவர் தனது மகேந்திரா எக்ஸ்யூவி-300 புதிய காரில், கும்பகோணத்தில் இருந்து குடும்பத்துடன் தனது ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். நேற்று முன்தினம் அதிகாலை, 1:15 மணிளவில் காரை தாராபுரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஓட்டி வந்தார். திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் தனது கிராமத்திற்கு செல்லும் போது, ஆர்.புதுக்கோட்டை என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார், தடுமாறி கவிழ்ந்தது. இதில் தண்டபாணியின் தந்தை சுப்ரமணி சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த தண்டபாணி, அவரது மனைவி சூர்யா, மகன்கள் அகில்குமரன், அருள்கார்த்திக் ஆகியோர் கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாயனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் அருகே இருவர் மாயம்
போலீசார் வழக்குப்பதிவு
கரூர் அருகே, கணவரை காணவில்லை என, போலீசில் மனைவி புகார் செய்துள்ளார்.
கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் எஸ்.வெள்ளாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வீராசாமி, 69; சலவை தொழிலாளி. இவர் கடந்த, 12ல் சேலம் செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. இது
குறித்து மனைவி முத்து லட்சுமி, 65, அளித்த புகார்படி, பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
* கரூர் மாவட்டம், வெள்ளியணை விஜயபுரம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவரது மனைவி நாகலட்சுமி, 48; இவர் கட ந்த, 19ல் மருத்துவமனைக்கு செல்வதாக கூறி விட்டு, வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால், வீடு திரும்பவில்லை. இது
குறித்து மகன் அருண்குமார், 30, கொடுத்த புகார்படி, வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கனரக வாகனங்களால்
போக்குவரத்து நெரிசல்
கனரக வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கரூர் வையாபுரி நகர் முதல் கிராஸ் குறுகலான தெருவாக உள்ளது. இங்கு பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. தனியார் கம்பெனிகளுக்கு லோடு ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் தினந்தோறும் வந்து செல்கின்றன. மேலும் லோடு ஏற்றுவதற்காக பல மணி நேரம் அங்கேயே நின்று விடுகிறது. இதனால், எதிர் திசையில் வரும் வாகனங்கள் ஒதுங்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றன.
மேலும் டூவீலர்கள் ஒன்றோடு ஒன்று இடித்துக்கொண்டு சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே போக்கு
வரத்து போலீசார் வையாபுரி நகர் முதல் கிராசில், கனரக வாகனங்களை அனுமதிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
பத்ராவதி பாவநாராயண கோவில் கும்பாபிேஷகம்
லாலாப்பேட்டை, பத்ராவதி பாவநாராயண சுவாமி கோவில் கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது.
கிருஷ்ணராயபுரம் தாலுகா, லாலாப்பேட்டை பழைய நெடுஞ்சாலை அருகில், பத்ராவதி பாவநாராயண சுவாமி கோவில் உள்ளது. சமீபத்தில் கோவில் வளாகம் புதுப்பிக்கப்பட்டது. கும்பாபி ேஷக விழாவை முன்னிட்டு கடந்த, 20ல் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது. நேற்று காலை, 6:30 மணிக்கு ஹோமங்கள் நடந்தன. காலை, 10:00 மணிக்கு கோவில் கோபுர கலசத்திற்கு கும்பாபி ேஷகம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.