ADDED : பிப் 07, 2024 11:40 AM
வெள்ளியணை அருகே
வீட்டில் பணம் திருட்டு
வெள்ளியணை அருகே, வீட்டில் வைக்கப்பட்டிருந்த பணம் திருட்டு போனது.
கரூர் மாவட்டம், வெள்ளியணை ஏமூர் லட்சுமி நகரை சேர்ந்த நாகராஜன், 45; இவர் கடந்த, 3ல் வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதிக்கு சென்று விட்டார்.
பிறகு, நேற்று முன்தினம் வீட்டுக்கு சென்ற போது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டில் வைக்கப்பட்டிருந்த, 17 ஆயிரம் ரூபாயை காணவில்லை. இதுகுறித்து, நாகராஜன் அளித்த புகார்படி, வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு
கரூர் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகையை திருடி சென்ற, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், வாங்கல் அருகே நாவல் நகரை சேர்ந்தவர் சாமிநாதன், 62; இவர் கடந்த, 3 ல் வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் சென்னைக்கு சென்று விட்டார். பிறகு, நேற்று முன்தினம் வீட்டுக்கு சென்ற போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த, ஒன்பதே முக்கால் பவுன் தங்க நகைகளை காணவில்லை.
இதுகுறித்து, சாமிநாதன் அளித்த புகார்படி, வாங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
நாளை முயல் வளர்ப்புஇலவச பயிற்சி முகாம்
முயல் வளர்ப்பு இலவச பயிற்சி முகாம் நாளை நடக்கிறது என, பண்டுதகாரன்புதுாரில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை
கரூர் மாவட்டம், மண்மங்கலம் பண்டுதகாரன்புதுாரில் அமைந்துள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில், முயல் வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.
இதில், கலந்து கொள்ள விரும்புவோர் நேரடியாக நாளை (பிப்.,8) காலை 10:30 மணிக்குள் வந்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 04324 294335 மற்றும் 7339057073 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சட்ட விரோத மதுபாட்டில்விற்பனை: 15 பேர் கைது
கரூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக, 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று முன்தினம் தோகமலை, குளித்தலை, அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையம், கரூர் உள்ளிட்ட பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்ததாக மாதவன், 28; ரங்கநாதன், 22; மணிகண்டன், 42; பழனிவேல், 37; கார்த்தி, 37; உள்பட, 15 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 94 மதுபாட்டில்களை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி., ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம், (ஏ.ஐ.டி.யு.சி.,) கரூர் மாவட்ட கிளை சார்பில், திருமாநிலையூர் போக்குவரத்து பணிமனை முன், பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், 15 வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை தொடங்கி தீர்வு காண வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு, அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களுக்கு, பணியின் போது உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், கவுரவ தலைவர் ராஜேந்திரன், செயலாளர் விஜயகுமார், பொருளாளர் சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.
எள் சாகுபடி
பணி மும்முரம்
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் எள் சாகுபடி செய்யப்படுகிறது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள வல்லம், புனவாசிப்பட்டி, வீரகுமாரன்பட்டி, அந்தரப்பட்டி, மகிளிப்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் விளை நிலங்களில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
தற்போது நெல் அறுவடை பணி செய்யப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்பட்ட நெல் வயல்களில், உழவு பணி செய்யப்பட்டு குறுகிய நாட்களில் பலன் தரக்கூடிய எள் விதைக்கப்பட்டு வருகிறது.
மேலும் விதை தெளிப்பு செய்யப்பட்ட நிலங்களுக்கு, கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. மேலும் எள் செடிகள் பசுமையாக வளர்ந்து வருகிறது.
ஊரக வளர்ச்சி துறை ஓய்வூதியர் சங்க கூட்டம்
கரூரில், மாவட்ட ஊரக வளர்ச்சி துறை ஓய்வூதியர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் சிதம்பரம் தலைமையில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
அதில், கோவிட் சிகிச்சை பெற்றவர்களுக்கு, செலவு தொகையை வரவு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்ட அட்டையை வழங்க வேண்டும். ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவ படியாக மாதம், 1,000 ரூபாய் வழங்க வேண்டும். 70 வயதை நிறைவு செய்த ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீத ஓய்வூதியம் கூடுதலாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநில தலைவர் மணிவண்ணன் சிறப்பாளராக பங்கேற்றார். மாவட்ட அமைப்பு செயலாளர் அரியநாயகம், செயலாளர் சண்முகம், இணை செயலாளர் ராஜவேல், பொருளாளர் சதாசிவம் உள்பட பலர் பங்கேற்றனர்.
தேங்காய், கொப்பரை ஏலம்
ரூ.34 லட்சத்துக்கு விற்பனை
சாலைப்புதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், பல்வேறு விளை பொருட்கள், 34 லட்சத்து, 85 ஆயிரத்து, 19 ரூபாய்க்கு ஏலம் போனது.
கரூர், க.பரமத்தி பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தேங்காய் சாகுபடி நடக்கிறது. இங்கு தேங்காய்களை உடைத்து, காய வைத்து தங்கள் தேவைக்கு எண்ணெய் எடுத்தது போக, மீதமுள்ள பருப்பு, தேங்காய்களை, நொய்யல் அருகே உள்ள சாலைப்புதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.
கடந்த வாரம், 9,880 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 22.65 ரூபாய், அதிகபட்சமாக, 29.66 ரூபாய், சராசரியாக, 26.91 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 3,023 கிலோ எடையுள்ள தேங்காய்கள், 78 ஆயிரத்து, 786 ரூபாய்க்கு விற்பனையானது. கொப்பரை தேங்காய் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 75.99 ரூபாய், அதிக பட்சமாக, 86.89 ரூபாய், சராசரியாக, 85.99 ரூபாய், இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 60.35 ரூபாய் அதிகபட்சமாக, 82.77 ரூபாய், சராசரியாக, 76.99 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தமாக, 43 ஆயிரத்து, 819 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 34 லட்சத்து, 6,233 ரூபாய்க்கு விற்பனை நடந்தது. தேங்காய், கொப்பரை தேங்காய் சேர்த்து, 34 லட்சத்து, 85 ஆயிரத்து, 19 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.
பா.ஜ., நிர்வாகிகள்
ஆலோசனை கூட்டம்
கரூர் மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம், தலைவர் செந்தில் நாதன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அதில், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில், மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலையின், என் மண், என் மக்கள் யாத்திரை தொடர்பான ஏற்பாடுகள் குறித்தும், எம்.பி., தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர் செல்வம், பொதுச்செயலாளர் சக்திவேல் முருகன், பொருளாளர் குணசேகரன் உள்பட பா.ஜ., நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மொபட்டில் இருந்து கீழேவிழுந்த கொத்தனார் சாவு
குளித்தலை அடுத்த, மாமரத்துப்பட்டி பஞ்., கீழ சக்கரக்கோட்டையை சேர்ந்தவர் செல்வராஜ், 39, கொத்தனாராக வேலை செய்து வந்தார். நேற்று காலை, 9:00 மணியளவில் தனக்கு சொந்தமான ஹோண்டா ஆக்டிவா மொபட்டில், குளித்தலை நோக்கி வந்து கொண்டிருந்தார். குளித்தலை- மைலம்பட்டி நெடுஞ்சாலை நிஜாம் தோட்டம் அருகே வரும் போது, சாலையோரம் உள்ள குழியில் தடுமாறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை
பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே செல்வராஜ் இறந்து விட்டதாக கூறினார்.
சிந்தாமணிப்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி, உடற் கூறாய்வுக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்வராஜ் மனைவி நந்தினி, 29, கொடுத்த புகார் படி சிந்தாமணிப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கரூர் அரசு கல்லுாரியில்ஜியோ ஸ்பார்க் கண்காட்சி
கரூர் அரசு கலைக்கல்லுாரியில், புவி அமைப்பியல் துறை சார்பில், ஜியோ ஸ்பார்க் என்ற தலைப்பில், கண்காட்சி தொடக்க விழா நேற்று நடந்தது. அதில், கண்காட்சியை மாவட்ட தலைமை நீதிபதி சண்முக சுந்தரம் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அதை தொடர்ந்து, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கண்காட்சியை பார்வையிட்டனர். பூமியில் இருந்து எடுக்கப்படும் பல்வேறு கற்கள், கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
விழாவில், கல்லுாரி முதல்வர் அலெக்ஸாண்டர் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
ஆடு திருட்டில் ஈடுபட்டவர் கைதுகுளித்தலை அடுத்த, வடசேரி பஞ்., தென் நகரை சேர்ந்தவர் பாரதி, 45. வெல்டிங் ஒர்க் ஷாப் வைத்துள்ளார். நேற்று முன்தினம் காலை, 5:00 மணியளவில் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தபோது, பட்டியில் கட்டியிருந்த ஆடுகள் சத்தம் போட்டுள்ளது. உடனே, எழுந்து வந்து பார்த்தபோது, மர்ம நபர் ஆட்டை துாக்கி கொண்டு, பல்சர் பைக்கில் தப்பி ஓட முயற்சி செய்தார். அப்போது அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.
தோகைமலை போலீசார் விசாரணை நடத்தியதில், நங்கவரம் டவுன் பஞ்., கீழ்நந்தவனகாட்டை சேர்ந்த ரமேஷ், 22, என்பதும், கொத்தனாராக பணிபுரிகிறார் என்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
குளித்தலை அருகே மணல்கடத்திய டாரஸ் லாரி பறிமுதல்
குளித்தலை அடுத்த, மணத்தட்டை காவிரி ஆற்று படுகையில், இரவு நேரங்களில் மணல் கடத்துவதாக குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தவரின்படி, குளித்தலை எஸ்.ஐ., ராஜபூபதி மற்றும் போலீசார், வனத்துறை அலுவலர்கள் பிரகாஷ், கருணாநிதி ஆகியோர் கூட்டாக நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணியளவில் சம்பவ இடத்தில் சோதனை செய்தனர்.
அப்போது, டாரஸ் லாரியில் மணல் கடத்தியது தெரிய வந்தது. வனத்துறை அலுவலர்கள், போலீசாரை பார்த்தவுடன் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பி விட்டனர். இரண்டு யூனிட் மணலுடன், டாரஸ் லாரியை பறிமுதல் செய்து குளித்தலை போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், ஆலம்பட்டிபுதுார் சக்தி நகரை சேர்ந்த தமிழரசன் என்பவர் மீது, குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து, மணல் கடத்தலில் தொடர்புள்ள நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
டிராக்டர் ஏறியதில்
சிறுவன் பரிதாப பலி
குளித்தலை அருகே, டிராக்டர் ஏறி சிறுவன் பரிதாபமாக இறந்தார்.
குளித்தலை அடுத்த, பஞ்சப்பட்டி பஞ்., போதுபாறை கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ், 55. விவசாய கூலி தொழிலாளி. இவரது மகன் சக்திவேல், 16. திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மணத்தட்டை பைபாஸில், தனியார் ஆட்டோ எலக்ட்ரீசியன் பட்டறையில் கடந்த இரண்டு மாதமாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மதியம், 1:00 மணியளவில் பட்டறையில் டிராக்டர் பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது, டிராக்டர் முன்னோக்கி நகர்ந்து சிறுவன் மீது ஏறியது. இதில் பலத்த காயமடைந்த சக்திவேலை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து சிறுவனின் தந்தை காளிதாஸ் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து, பட்டறை உரிமையாளர் வடக்கு மைலாடியை சேர்ந்த செந்தில்குமாரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு
கிருஷ்ணராயபுரம், பிப். 7-
கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப் அருகில், வாக்காளர்களுக்கு லோக்சபா தேர்தல் குறித்த விழிப்புணர்வு நடந்தது. கரூர் மாவட்டம் நிர்வாகம் சார்பில், வரும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், எவ்வாறு ஓட்டுகளை பதிவு செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளும் வகையில், மாதிரி ஓட்டுப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது.
இதன் மூலம், தேர்தல் நடக்கும் போது வாக்காளர்கள் எந்தவிதமான சந்தேகமும் இன்றி, ஓட்டுகளை பதிவு செய்யும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் கள பணியாளர்கள் செய்திருந்தனர்.
இந்திரா நகர் பிரிவில் மேம்பாலம்
அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
அரவக்குறிச்சி, பிப். 7-
கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், இந்திரா நகர் அருகே நெடுஞ்சாலையிலிருந்து மண்மாரி வழியாக பள்ளப்பட்டிக்குள் செல்லும் பிரிவு ரோடு உள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி வழியாக கரூர் செல்லும் பஸ்கள் அனைத்தும், இந்திரா நகர் பிரிவு ரோடு வழியாக செல்ல வேண்டும்.
மேலும் வேலஞ்செட்டியூர், பெத்தாச்சி நகர், ஈசநத்தம், அம்மாபட்டி, ஜமீன் ஆத்துார், கருங்கல்பட்டி, பண்ணப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் இருந்து கூலி வேலை செய்ய தொழிலாளர்கள் பள்ளப்பட்டி செல்ல வேண்டுமானால், இந்திரா நகரில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை குறுக்காக கடந்து செல்ல வேண்டும்.
நெடுஞ்சாலையில் வாகனங்கள் வேகமாக செல்லும் நிலையில், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை இந்திரா நகர் பிரிவில், மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

