ADDED : பிப் 13, 2024 12:12 PM
பெண்ணை தாக்கிய
4 பேர் மீது வழக்கு
குளித்தலை அடுத்த, நாகனுார் பஞ்., வத்தப்பிள்ளையூர் கிராமத்தை சேர்ந்தவர் சித்ரா, 37. அதே ஊரை சேர்ந்தவர் சின்ன பொண்ணு. இரு குடும்பத்தாருக்கு இடையே நிலப் பிரச்னை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. கடந்த, 8 மதியம், 3:30 மணியளவில் தன் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தபோது, சின்ன பொண்ணு, மோகனாம்பாள், சின்னப்பொண்ணு மகன் மணிகண்டன், உறவினர் ஹரிஹரன் ஆகியோர் தகாத வார்த்தைகள் பேசி, சித்ராவை தாக்கினர். பாதிக்கப்பட்ட சித்ரா மணப்பாறை அரசு மருத்துவ மனையில் சிகிச்சையில் உள்ளார்.இதுகுறித்து, தோகைமலை போலீசார் நான்கு பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில்
பூக்கள் விலையில் சரிவு
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, காட்டூர், எழுதியாம்பட்டி, செக்கணம், ஆகிய இடங்களில் விவசாயிகள் பரவலாக பூக்கள் சாகுபடி செய்துள்ளனர். இதில் விரிச்சிப்பூக்கள், சின்னரோஜா, செண்டு மல்லி, கோழிக்கொண்டை ஆகிய பூக்கள் சாகுபடி நடந்து வருகிறது. கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. இதில் பூக்கள் வரத்து காரணமாக விலை சரிந்து வருகிறது.
விரிச்சிப்பூக்கள் கிலோ, 90லிருந்து, 60 ரூபாய், சின்னரோஜா, 120 ரூபாயிலிருந்து, 90 ரூபாய், செண்டுமல்லி, 60லிருந்து, 30 ரூபாய், கோழிக்கொண்டை, 50லிருந்து, 40 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கரூர், திருச்சி, முசிறி ஆகிய இடங்களில் செயல்படும் மார்க்கெட்டுகளுக்கு பூக்கள் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.
அரசு பள்ளியில் முப்பெரும் விழாகுளித்தலை அடுத்த, மத்தகிரி பஞ்., செங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா, விளையாட்டு போட்டி மற்றும் 40வது ஆண்டு விழா என முப்பெரும் விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் கல்பனா தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் வேலுச்சாமி திட்ட அறிக்கை வாசித்தார். மத்தகிரி பஞ்., தலைவர் தங்கராசு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அண்ணாதுரை, பி.டி.ஏ., உறுப்பினர் வக்கீல் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற டி.எஸ்.பி.,க்கள் ராசன், மாணிக்கம் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினர். மேலும் பள்ளிக்கு நிலங்கள் தானமாக வழங்கிய, சமூக ஆர்வலர்களுக்கு பள்ளி சார்பாக பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. தமிழ் ஆசிரியர் கவிஞர் கருப்பண்ணன், ஆசிரியர்கள் செல்வம், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பணம் வைத்து சூதாட்டம்ஆறு பேர் அதிரடி கைது
குளித்தலை அடுத்த, நாகனுார் பஞ்., கம்பத்தான்பாறை தண்ணீர் டேங்க் அருகே, பணம் வைத்து சூதாடுவதாக தோகைமலை போலீசாருக்கு கிடைத்த தகவல்படி, போலீசார் நேற்று முன்தினம் சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது பணம் வைத்து சூதாடிய ஆறுமுகம், 55, கனகராஜ், 26, ரமேஷ், 37, சிங்கக்கண்ணன், 42, நீலமேகம், 45, காமராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
உள்ளாட்சி துறை ஊழியர்
சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், எட்டு மணி நேரம் வேலையை உறுதி செய்ய வேண்டும், மாதாந்திர சம்பளம், 5க்குள் வழங்க வேண்டும், வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் ஈட்டுறுதி திட்டம் அனைத்து ஊழியர்களுக்கும் செயல்படுத்த வேண்டும், சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள், கையுறை, அடையாள அட்டை ஆகியவற்றை வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட சி.ஐ.டி.யு., தலைவர் ஜீவானந்தம், செயலாளர் முருகேசன், கணேசன், சுப்பிரமணியன், சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
வார்டுகளில் கொசு
ஒழிப்பு பணி தீவிரம்
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து வார்டுகளில் கொசு ஒழிப்பு பணி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து வார்டுகளுக்கு உட்பட்ட
மஞ்சமேடு, முதலியார் தெரு ஆகிய பகுதிகளில், இரவு நேரங்களில் கொசுக்கள் அதிகமாக காணப்படுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் பஞ்., சார்பில் தெருக்களில் கொசு ஒழிப்பு பணி நடந்தது. இதில் குடியிருப்பு பகுதியில் பழைய டயர்கள், பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றுதல், சுற்றுபுறத்தூய்மை, கழிவு நீர் தேங்கிய இடங்களில் பிளிச்சீங் பவுடர் தெளிப்பு, நல்ல குடிநீர் மூடி வைத்தல் ஆகிய பணிகள் நடந்தது. டவுன் பஞ்சாயத்து துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
வாகன பெயர் மாற்றத்தில் பழைய
நடைமுறை தொடரக் கோரி மனு
வாகன பெயர் மாற்றம் போது, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பழைய நடைமுறை தொடர வேண்டும் என, தமிழ்நாடு மோட்டர் வாகன ஆலோசகர் நலச்சங்கம் சார்பில், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் டூவிலர், கார், பஸ், லாரி, மினி வேன் போன்ற வாகனங்களை கமிஷன் அடிப்படையில் விற்பனை செய்து வருகிறோம். இதில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர். வாகனத்தை வாங்கி விற்கும் போது, வாடிக்கையாளர்களின் பெயருக்கு மாற்றம் செய்ய ஆவனங்களுக்கு முறையாக பணம் செலுத்தி செய்து வருகிறோம். வட்டார போக்கு வரத்து அலுவலகங்களில் ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது, அந்தந்த வாகன உரிமையாளர் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், பல்வேறு நடைமுறை சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
இதுமட்டுமின்றி வாகனம் வாங்கும் போது, அளித்த மொபைல் எண்ணுக்கு ஓ.டி.டி., அனுப்பப்படுகிறது. ஆனால், வாகனம் வாங்கும் போது வைத்திருந்த மொபைல் எண் இல்லையென்றால், பல்வேறு இன்னல் ஏற்படுகிறது. எங்கள் வாழ்வாரத்தை கருத்தில் கொண்டு பழைய நடைமுறை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
முதியவரை கிணற்றில் தள்ளி
கொலை செய்த வாலிபர் கைது
கரூர் அருகே, கிணற்றில் இறந்து கிடந்த முதியவர் கொலை செய்யப்பட்ட விபரம் வெளியானது. இது தொடர்பாக, வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், வாங்கல் முனியப்பனுார் பகுதியை சேர்ந்தவர் திருஞானம், 65; சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த, 8 ல் வீட்டில் இருந்து, வெளியே சென்றுள்ளார். பிறகு, வீடு திரும்பவில்லை. இந்நிலையில் கடந்த, 9 ல் ஓடையூரில் உள்ள கணேசன் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில், திருஞானத்தின் உடல் மீட்கப்பட்டது.
வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு காரணமாக, திருஞானம் கிணற்றில் தள்ளப்பட்டு, கொலை செய்யப்பட்டார் என, தெரிய வந்தது. இதையடுத்து, திருஞானத்தை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக, மண்மங்கலம் முனியப்பனுாரை சேர்ந்த குமார், 45, என்பவரை வாங்கல் போலீசார் நேற்று கைது செய்தனர்.