ADDED : பிப் 16, 2024 11:41 AM
பள்ளி ஆண்டு விழா
மாணவர்களுக்கு பரிசு
கருப்பம்பாளையம் அரசு துவக்கப் பள்ளி ஆண்டு விழாவில், போட்டியில் வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.
கரூர் தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கருப்பம்பாளையம் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளித்தலைமை ஆசிரியை மரகதம் தலைமை வகித்தார். கருப்பம்பாளையம் பஞ்., தலைவர் சத்தியமூர்த்தி பங்கேற்று, பள்ளியில் இலக்கியம், நடனம், பேச்சுப்போட்டி மற்றும் விளையாட்டுப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
விழாவில் உதவி ஆசிரியை தவமணி, ஆசிரியர் பயிற்றுநர் விஜயன் உள்பட பலர் பங்கேற்றனர்.
கோர்ட்டில் வக்கீல்
பைக் திருட்டு
குளித்தலை அடுத்த, கீரனுார் பஞ்., சாமிபிள்ளைபுதுார் கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ், 46. இவர் குளித்தலை நீதிமன்றத்தில் வக்கீலாக உள்ளார். கடந்த, 12 மதியம், 2:30 மணியளவில் தனக்கு சொந்தமான ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கை, நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி விட்டு, மாடியில் உள்ள குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்திற்கு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை.
தர்மராஜ் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தி.மு.க., மாவட்ட
செயற்குழு கூட்டம்
கரூரில் உள்ள மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், செயற்குழுக் கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். லோக்சபா தேர்தல் தொடர்பாக, கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் ஆகிய தொகுதிகளுக்கான பிரசார கூட்டம் பிப்.,18- மாலை, 5:00 மணிக்கு திருவள்ளுவர் மைதானத்தில் நடக்கிறது. இதில் கட்சியினர் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் திரளாக பங்கேற்க வேண்டும். லோக்சபா தேர்தலில் கரூர் தொகுதிக்கு, தி.மு.க., சார்பில் யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அவரை அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நெசவாளர் அணி செயலாளர் பரணி மணி, மாவட்ட நிர்வாகிகள் பூவை ரமேஷ்பாபு, நகர நிர்வாகிகள் கனகராஜ், சரவணன், ராஜா, சுப்ரமணியன், ஜோதிபாசு, குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
மாணவி மாயம்போலீசில் புகார்
குளித்தலை அடுத்த, சத்தியமங்கலம் பஞ்., வைரம் பெருமாள்பட்டி கிராமத்தை சேர்ந்தவரின், 16 வயது மகள் தனியார் நர்சிங் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, குளித்தலையில் உள்ள பெரியம்மா வீட்டில் தங்குவதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அங்கு செல்லவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓடும் பஸ்சில்முதியவர் உயிரிழப்பு
மதுரையிலிருந்து, ஈரோட்டிற்கு அரசு பஸ் அரவக்குறிச்சி வழியாக நேற்று சென்று கொண்டிருந்தது. ஆண்டிபட்டி கோட்டை அருகே வந்தபோது, இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த, 70 வயது அடையாளம் தெரியாத முதியவருக்கு, வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் முதியவர் பஸ்சிலேயே உயிரிழந்தார்.
அடையாளம் தெரியாத முதியவர் குறித்து, அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கரூரில் வங்கியாளர்கள் கூட்டம்கரூர் கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை சார்பில் வங்கியாளர் கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் நேரடி கடன் வழங்குதல், தாட்கோ மற்றும் இதர அரசு திட்டங்களின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குதல் போன்ற திட்ட செயல்களில் அதிக அளவு கடன் வழங்கி சாதனை படைத்த இரு வங்கி மற்றும் மூன்று வங்கி கிளைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட வங்கிகள் மற்றும் வங்கி கிளைகளுக்கு மாவட்ட அளவிலான விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
கூட்டத்தில் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை ஸ்ரீ லேகா தமிழ்ச்செல்வன், முதன்மை மண்டல மேலாளர் பானி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வசந்தகுமார், மத்திய ரிசர்வ் வங்கி மேலாளர் விஜய் விக்னேஷ், நபார்டு வங்கி மேலாளர் மோகன் கார்த்திக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாநில அளவில் சிறப்பிடம்
கரூர் கபடி அணிக்கு பாராட்டு
கரூர் புலியூர்கவுண்டம்பாளையம் எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் உயர்நிலை பள்ளியில் மாநில அளவிலான கபடி போட்டியில் வென்ற அணிக்கு பாராட்டு விழா நடந்தது. மாவட்ட அமைச்சூர் கபடி கழக தலைவர் அன்புநாதன் தலைமைவகித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் கடந்த மாதம் மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது. இதில், கரூர் மாவட்ட பெண்கள் கபடி அணி, மாநில அளவில் மூன்றாவது இடம் பிடித்தது. வெற்றி பெற்ற கபடி வீராங்கனைகளை பாராட்டி பரிசு வழங்கினார். தேசிய அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் தமிழக அணியில் தேர்வாகி விளையாடிய, கரூர் மாவட்டத்தைச சேர்ந்த சங்கர் மற்றும் ஷாலினி ஆகியோரை பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினார்.
அமைச்சூர் கபடி கழகத்தின் சேர்மன் தண்டபாணி, செயலாளர் சேதுராமன், பொருளாளர் நாகராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.
பயன்பாடு இன்றி கிடக்கும்
சின்டெக்ஸ் தொட்டி
வெங்கடேஷ்வரா நகரில் உள்ள சின்டெக்ஸ் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, 48 வார்டுகளிலும் தண்ணீர் பயன்பாட்டிற்காக போர்வெல் மற்றும் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதியினர் தங்களின் உபரி பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வருகின்றனர். இதன்படி, தான்தோன்றிமலை வெங்கடேஷ்வரா நகர்ப்பகுதியில் சின்டெக்ஸ் தொட்டி உள்ளது, பல ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் கிடக்கிறது. எனவே, தொட்டியை விரைந்து பழுது நீக்கவேண்டும்.
'குட்கா' விற்பனை செய்த
3 கடைக்காரர்கள் கைது
ஈரோடு, சொக்கநாதர் வீதி, துர்கா மளிகை கடையில், அரசால் தடை செய்யப்பட்ட கூல் லீப், ஹான்ஸ், விமல் பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக, ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் கடையில் சோதனை நடத்தியதில், புகையிலை பொருட்கள் சிக்கின. இது தொடர்பாக கடை உரிமையாளர் முகேஷ் குமார், 41, என்பவரை கைது செய்தனர்.
இதேபோல் லக்காபுரத்தில், பரிசல் துறை நால்ரோட்டில், புகையிலை பொருட்கள் விற்ற, காஜா மளிகை உரிமையாளர் ஜோசப் ஆரோக்கியராஜ், 37, என்பவரை மொடக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். ஈரோட்டில் சென்னிமலை சாலையில், ஐ.டி.ஐ., எதிரே பெட்டிக்கடையில் புகையிலை விற்ற கடைக்காரர் மூர்த்தியை, தாலுகா போலீசார் கைது செய்தனர்.
குடிநீர் இல்லாமல் தவிப்பு
தாந்தோன்றி ஒன்றியம் ஜெகதாபி பஞ்சாயத்து பகுதிகளில், சீரான குடிநீர் விநியோகம் இல்லை. இங்குள்ள பல தொட்டிகளில், மின் மோட்டார்கள் பழுதடைந்துள்ளன. குடிநீருக்கு வழியின்றி மக்கள் சிரமப்படுகின்றனர். தினமும், 3 கி.மீ., துாரம் சென்று பக்கத்து கிராமத்தில் குடிநீர் பிடித்து வருகின்றனர். தெருவிளக்குகள் இந்த பகுதியில் எரியாததால் மக்கள் இருட்டில் சிரமப்படுகின்றனர்.
பூங்காவை சீரமைக்கணும்கரூர், தான்தோன்றிமலை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் சிறுவர், சிறுமிகள் பயன்படுத்தும் வகையில், சிறுவர் பூங்கா வளாகம் உள்ளது. தற்போது பூங்காவில் உள்ள உபகரணங்கள் அனைத்தும் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதன் காரணமாக பயன்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த பகுதி சிறுவர்களின் நலன் கருதி இந்த பூங்கா வளாகத்தை புதுப்பிக்க வேண்டும் என, நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. எனவே உடனடியாக துறை அதிகாரிகள், குடியிருப்பு வளாகத்தில் பழுதடைந்துள்ள உபகரணங்களை சரி செய்து, பூங்காவை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
கரூரில் அரசு அலுவலர்கள்
சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கரூர், தலைமை தபால் நிலையம் அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தாமோதரன் தலைமை வகித்தார். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைதல், அரசாணை 243ஐ ரத்து செய்தல், சரண்டர் விடுப்பு ஒப்படைத்தல் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 200க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி நின்றனர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் பொன்னம்பலம், மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர், மாவட்ட பொருளாளர் அமல்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
அடையாளம் தெரியாத
வாகனம் மோதி ஒருவர் பலி
குமாரபாளையத்தில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலியானார்.
குமாரபாளையம், கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் வரும் வாகனங்கள் அனைத்தும், இரு புறமும் உள்ள சர்வீஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம், சேலம் பக்கமிருந்து வாகனங்கள் வரும் சர்வீஸ் சாலையை, முதியவர் ஒருவர் மதியம், 2:50 மணியளவில் நடந்து கடந்துள்ளார். அப்போது வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், இடது கால் முழுதும் நசுங்கிய நிலையில், பலத்த அடிபட்டு கீழே விழுந்தார். அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று காலை இறந்தார்.
இவரது சட்டை பையில் உள்ள சீட்டில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை செய்ததற்கான விபரங்கள் மற்றும் பெயர் ராஜூ என்றும் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதில் விலாசம் உள்ளிட்ட எந்த விபரமும் இல்லை. இது குறித்து, குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கோழி இறைச்சி கடையில்
நள்ளிரவில் தீ விபத்து
ஈரோட்டில் சென்னிமலை சாலையில், டீசல் ஷெட் எதிர் ஸ்ரீபரணி பிராய்லர் கோழிக்கடை செயல்படுகிறது. இதன் உரிமையாளர் மொடக்குறிச்சியை சேர்ந்த சதீஷ்குமார், 49; கடையில் நேற்று முன்தினம் நள்ளிரவில், கரும்புகை அதிகம் வெளியேறியது. இதைப்பார்த்த இரவு ரோந்து போலீசார், ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள், 20 நிமிடத்தில் தீயை அணைத்தனர். ஆனாலும், 150 நாட்டுக்கோழி, 100 காடை, கோழித்தீவனம் உள்ளிட்டவை எரிந்து விட்டது.
கோழி கடையில் இருந்து, 500 மீட்டர் தொலைவில், ஈரோடு, மணல்மேட்டை சேர்ந்த மாதேஸ்வரன், 44, வசிக்கிறார். அவர் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த டூவீலரின் டேங்க் கவருக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த இரு சம்பவங்கள் குறித்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
'ஆ.ராசாவுக்கு டிபாசிட் கிடைக்காது'
பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் கணிப்பு
நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ., பிரிவு பிரதிநிதிகள் மாநாடு, புன்செய்புளியம்பட்டியில் நேற்று நடந்தது. ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் கலைவாணி தலைமை வகித்தார். கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா முன்னிலை வகித்தார்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊட்டி, குன்னுார், கூடலுார், மேட்டுப்பாளையம், பவானிசாகர் மற்றும் அவிநாசி சட்டமன்ற தொகுதி பா,ஜ., நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்து ஆலோசித்தனர். மேட்டுப்பாளையம் பகுதி வழக்கறிஞர்கள், தங்களை பா.ஜ.,வில் இணைத்துக் கொண்டனர். மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் சந்திரசேகரன், பல்வேறு பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் பங்கேற்ற நீலகிரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் நந்தகுமார் கூறியதாவது: மத்திய அமைச்சர் முருகன் குறித்து நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு தரக்குறைவாக பேசியதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. தி.மு.க.,வை போல் அல்லாமல் அனைவரையும் சரி சமமாக பார்க்கக்ககூடிய கட்சி பா.ஜ., ஆகும். நீலகிரி தொகுதியில் இரண்டாவது முறை எம்.பி.,யாக இருக்கும் ஆ.ராசா தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இந்த முறை டிபாசிட் கூட வாங்க முடியாமல் தொகுதியை விட்டு வெளியேறப்போகிறார். இவ்வாறு அவர் கூறினார்.