ADDED : பிப் 18, 2024 10:30 AM
நிதி நிறுவன ஊழியர் மாயம்
போலீசில் மனைவி புகார்
கரூரில், நிதி நிறுவன ஊழியரை காணவில்லை என, போலீசில் மனைவி புகார் செய்துள்ளார்.
கரூர் அருகே, எஸ்.வெள்ளாப்பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் பச்சநாச்சி, 48. இவர், கரூரில் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த, 15ல் பச்சநாச்சி வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் இதுவரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மனைவி பரமேஸ்வரி, 39, கொடுத்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிதி நிறுவன ஊழியர்
பச்சநாச்சியை தேடி வருகின்றனர்.
சந்தன காளிபாளையத்தில்
நாட்டு நலப்பணி முகாம்
கரூர் மாவட்டம், மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி பஞ்.,க்குட்பட்ட சந்தனகாளிபாளையத்தில், கரூர் அரசு கலைக்கல்லுாரி மாணவ, மாணவிகளின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடந்தது. மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி பஞ்., தலைவர் சாந்தி தொடங்கி வைத்தார்.
நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, சந்தனகாளிபாளையம் முதல் பஞ்சமாதேவி புதுார் வரை, சாலையின் இருபுறமும் உள்ள முட்புதர்களை அகற்றினர். இதையடுத்து, கோவிலில் உழவாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பிரிவு உபசார விழாகுளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ, கோவை சரகத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு குளித்தலை டி.எஸ்.பி., அலுவலக வளாகத்தில், டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் லாலாபேட்டை ஜோதி, மாயனுார் சாந்தி மற்றும் கோட்ட அளவில் உள்ள போலீஸ் எஸ்.ஐ.,க்கள், போலீசார் பங்கேற்று நினைவு பரிசு வழங்கி
பாராட்டி பேசினர்.
சலவை தொழிலாளர்சங்க நிர்வாகிகள் கூட்டம்
கரூர் மாவட்ட சலவை தொழிலாளர் சங்க, மாதாந்திர ஆலோசனை கூட்டம், மாவட்ட தலைவர் கருணாநிதி தலைமையில், வெண்ணைமலையில் நடந்தது.
அதில், நல வாரியத்தில் அனைத்து உறுப்பினர்களும் பதிவு செய்ய வேண்டும், பதிவு செய்த உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சலவை தொழிலாளர்களுக்கு உள் ஒதுக்கீடு, மூன்று சதவீதம் வழங்க வேண்டும், மாவட்டந்தோறும் நவீன பவர் லாண்டரி தமிழக அரசு சார்பில் அமைத்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன், பொருளாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
கல்லுாரி மாணவி மாயம்போலீசில் தந்தை புகார்
கரூரில், கல்லுாரி மாணவியை காணவில்லை என, போலீசில் தந்தை புகார் செய்துள்ளார். கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியை சேர்ந்த, 18 வயது கல்லுாரி மாணவி, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லுாரியில், சி.ஏ., இரண்டாமாண்டு படித்து வருகிறார். கடந்த, 15ல் வீட்டில் இருந்து, கல்லுாரிக்கு புறப்பட்டு சென்ற நந்தினி, வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை கொடுத்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
கரூரில் நிலக்கடலை
விற்பனை மும்முரம்
வடகிழக்கு பருவ மழை காரணமாக, நிலக்கடலை சாகுபடி கரூர் மாவட்டத்தில் அதிகரித்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் கடவூர், கிருஷ்ணராயபுரம், தான்தோன்றிமலை மற்றும் கரூர் வட்டாரங்களில், மானாவாரி நிலங்களில் ஆண்டுதோறும், வடகிழக்கு பருவ மழையை கணக்கில் கொண்டு, நிலக்கடலை சாகுபடி செய்வது வழக்கம். கடந்தாண்டு, அக்டோபர் மாதம் முதல் மழை பெய்ய துவங்கியதால், மானாவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடி விறுவிறுப்பாக நடந்தது.
தற்போது, அறுவடை துவங்கிய நிலையில் கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நிலக்கடலை விற்பனை ஜோராக நடந்து வருகிறது. ஒரு படி, 30 முதல், 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்தாண்டு மார்ச் மாதம் நிலக்கடலை வரத்து குறைவால், ஒரு படி, 50 ரூபாய் வரை விற்றது. தற்போது, நிலக்கடலை விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
வாகனங்களில் செல்லும் மட்டைகள்
விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
தென்னை மட்டைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், திறந்த நிலையில் செல்வதால் விபத்து அபாயம் காத்திருக்கிறது.
கரூர் மாவட்டத்தை சுற்றியுள்ள திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் தென்னை மட்டையில் இருந்து, நாரை பிரித்து எடுக்கும் ஆலைகள் அதிகளவு உள்ளன. மாயனுார், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, வேலாயுதம்பாளையம், தவிட்டுப்பாளையம் பகுதிகளில் இருந்து, தென்னை மட்டைகள் லாரி, வேன்களில் ஏற்றப்பட்டு ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு செல்லும் வாகனங்களில், தென்னை மட்டைகள் திறந்த நிலையில் கொண்டு செல்வதால் சாலைகளில் பரவி கிடக்கிறது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி விழுகின்றனர்.
எனவே, தென்னை மட்டைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், தார்ப்பாய் போட்டு பாதுகாப்பாக எடுத்துச் செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
குடிநீர் வினியோகம் மந்தம்
பொதுமக்கள் கடும் அவதி
கள்ளப்பள்ளி பஞ்சாயத்து வார்டுகளில், காவிரி குடிநீர் வினியோகம் பணி மந்த நிலையில் இருப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த கள்ளப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மெயின் சாலை, காந்தி சிலை சாலை, பஞ்சாயத்து அலுவலக குடியிருப்பு சாலை, போலீஸ் ஸ்டேஷன் சாலை ஆகிய இடங்களில் வசிக்கும் மக்களுக்கு பஞ்சாயத்து மூலம் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக, காவிரி குடிநீர் வினியோகம் பணி மந்த நிலையில் இருந்து வருகிறது. இதனால் வார்டுகளில் வசிக்கும் மக்கள் குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர் வினியோகத்தை சீரான முறையில் மாற்ற, பஞ்சாயத்து நிர்வாகம் நிர்வாகம் எடுக்க வேண்டும்.
சட்ட விரோத விற்பனை
152 மது பாட்டில் பறிமுதல்
கரூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 152 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஷியா சுரேஷ் உள்ளிட்ட, போலீசார் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 152 மது பாட்டில்களை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், மதுபாட்டில்களை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததாக உதயகுமார், 28; ஆனந்தராஜ், 27; பிரகாஷ், 26; சித்தரவேல், 33; ஜீவா, 38; உள்பட, 26 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில்
கொய்யாப்பழம் விற்பனை ஜோர்
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், கொய்யாப்பழம் விற்பனை ஜோராக நடக்கிறது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சேங்கல், பஞ்சப்பட்டி, திருக்காம்புலியூர், வல்லம், காட்டுப்புத்துார் ஆகிய இடங்களில் விவசாயிகள் பரவலாக கொய்யா சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது மரங்களில் கொய்யா காய்கள் காய்த்துள்ளன. சீசன் ஆரம்பம் காரணமாக விளைச்சல் காண்டுள்ள கொய்யாக்காய், பழங்களை வியாபாரிகள் பறிந்து வந்து லாலாப்பேட்டை, கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம் மற்றும் உள்ளூர் வாரச் சந்தைகளில் விற்று வருகின்றனர். கொய்யாப்பழம் கிலோ, 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கரூர் அணியில் விளையாட
அரவக்குறிச்சி மாணவிகள் தேர்வு
சேலத்தில் நடைபெற உள்ள, சீனியர் பெண்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டியில், மாவட்ட அணியில் விளையாட அரவக்குறிச்சி மாணவிகள் தகுதி பெற்றுள்ளனர்.
மாநில அளவில், சீனியர் பெண்களுக்கான கைப்பந்து போட்டி சேலத்தில் நடைபெற உள்ளது. இதில், 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த வீராங்கனைகள் விளையாட உள்ளனர். கரூர் மாவட்ட கைப்பந்து அணியில் விளையாட, அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவிகள் சரண்யா, கிருத்திகா ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர். இவர்களை கல்லுாரி முதல்வர் வசந்தி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.
இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
குளித்தலை, போக்குவரத்து புதிய இன்ஸ்பெக்டராக வெங்கடேஷ் நேற்று முன்தினம் இரவு பொறுப்பேற்று கொண்டார். இவர், திருச்சி மாவட்டம், ஜீயபுரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பணியில் இருந்து, பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், திருச்சி மாவட்டம், திருவரம்பூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.
அதேபோல், குளித்தலை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, திருவரம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டார். தோகைமலை இன்ஸ்பெக்டராக இருந்த ராஜ்குமார், திருச்சி விமான நிலைய ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.
கிணற்றில் தொங்கிய காரில்
இருந்து 4 பேர் உயிருடன் மீட்பு
கரூர் மாவட்டம், செம்படாபாளையம் பகுதியை சேர்ந்தவர் வினோத், 40; கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று அதிகாலை செம்படாபாளையத்தில் இருந்து, கோவைக்கு தந்தை பொன்னுசாமி, 75, தாய் லட்சுமி, 62, மனைவி சவுந்தர்யா, 31, ஆகியோருடன் காரில் புறப்பட்டார். காரை வினோத் ஓட்டினார். வேலாயுதம்பாளையம் அருகே பூலான்காடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது, கார் திடீரென நிலை தடுமாறி, சாலையோரத்தில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தது.
ஆனால் கிணற்றை சுற்றி இரும்பு தடுப்புகள் இருந்ததால், கார் கிணற்றுகள் விழாமல் தொங்கி கொண்டிருந்தது. தகவல் அறிந்த, வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் சென்று, காரில் இருந்த, நான்கு பேரையும் உயிருடன் மீட்டனர்.
வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
'கட்டளை மேட்டு வாய்க்காலில்
கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும்'
குளித்தலை, பொது பணித்துறை (நீ.வ.ஆ) அலுவலகத்தில் நேற்று குளித்தலை கட்டளை மேட்டு வாய்க்கால் பாசன விவசாயிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
அதில், மாயனுார் கதவணையிலிருந்து பழைய கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம், 1,200 ஏக்கரில் பாசன வசதி பெறும் பணிக்கம்பட்டி, நடுப்பட்டி, கீழஆரியம்பட்டி, தேவஸ்தானம், எல்லைக்கரை, கோட்டையார் தோட்டம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கு தடையின்றி கூடுதலாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். கடந்த ஓராண்டாக நெல், வாழை சாகுபடி செய்யாமல் இருப்பதால், உடனடியாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அலுவலக பணியில் இருந்த தொழில் நுட்ப வல்லுனர் குருசாமியிடம் விவசாயிகள் மனு கொடுத்து முறையிட்டனர். தடையின்றி தண்ணீர் வர, உயர் அதிகாரியிடம் கூறி ஏற்பாடு செய்து தரப்படும் என கூறியதால், அங்கிருந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.
சீனிவாசபுரம் சாலையில் கனரக
வாகனம்; தடுத்து நிறுத்த கோரிக்கை
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சீனிவாசபுரம் பகுதியில், கனரக வாகன போக்குவரத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட லைட்ஹவுஸ் அருகே, சீனிவாசபுரம் சாலையின் இருபுறமும் அதிகளவு வர்த்தக நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும், குடியிருப்புகளும் உள்ளன. கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் இருந்து ஜவஹர் பஜார், மார்க்கெட், காமராஜ் சாலை, மாரியம்மன் கோவில், பழைய அரசு மருத்துவமனைகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் சீனி
வாசபுரம் பகுதி வழியாக செல்கிறது.
குறுகிய சாலையான அதில், அதிகளவு கனரக வாகன போக்குவரத்து காரணமாக மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியவில்லை.
அவ்வப்போது
போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்படட அதிகாரிகள், சீனிவாசபுரம் பகுதியில் கனரக வாகனங்கள் செல்வதை தடுத்து நிறுத்த, தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
தனியார் வேலை வாய்ப்பு
முகாம்;745 பேர் பங்கேற்பு
கரூரில் நடந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில், 745 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
கரூர் மாவட்டம், வெண்ணெய்மலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. முகாமில் தேர்வானவர்களுக்கு டி.ஆர்.ஓ., கண்ணன் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பின், அவர் கூறியதாவது:
வேலைவாய்ப்பு முகாமில் மொத்தம், 59 நிறுவனங்கள் பங்கேற்றன. மேலும் ஒன்பது அரசு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதுதவிர, இரண்டு திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டன. வேலை வாய்ப்பு முகாமில், 745 பேர் கலந்து கொண்டதில், 237 பேருக்கு பல்வேறு நிறுவனங்களில் பணியில் அமர்த்தப்பட்டனர்.
இவ்வாறு கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சாந்தி, உதவி பயிற்சி அலுவலர் இளங்கோவன், உள்பட பலர் பங்கேற்றனர்.
அரவக்குறிச்சியில் புதிய
பஸ் வழித்தடம் துவக்கம்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் கோவிலுார் கிராமத்தில் இருந்து, திண்டுக்கல் மாவட்டத்திற்கு தினமும் சென்று வரும் வகையில், பஸ் வசதி செய்ய வேண்டும் என்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
அதன் அடிப்படையில், மக்கள் கோரிக்கையை ஏற்று கோவிலுாரில் புதிய பஸ் இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். இந்த வழிதடத்தில் பஸ்சை, அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோவிலுாரில் இருந்து இனுாங்கூர், வெங்கடாபுரம், நாகமரத்துப்பட்டி வழியாக திண்டுக்கல் மாவட்டம் இடையாகோட்டைக்கு பஸ் இயக்கப்படுகிறது.
நிகழ்ச்சியில், திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு போக்குவரத்து கழக உதவி பொறியாளர் முருகானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.
குடிநீர் உறிஞ்சும் மின் மோட்டார்
குறித்து நேரில் கள ஆய்வு பணி
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து வார்டுகளில், மின் மோட்டார்கள் வைத்து குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து, 13 வது வார்டு கோவக்குளம் பகுதியில் உள்ள சுக்கமேடு மக்களுக்கு, காவிரி குடிநீர் வினியோகம் நடக்கிறது. மக்கள் வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்பு மூலம், காவிரி நீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக, காவிரி நீர் வினியோகம் பணி நடக்கும் போது, வீடுகளில் வசிக்கும் சில நபர்கள் நீர் உறிஞ்சும் மின்மோட்டார்கள் வைத்து, குடிநீர் எடுத்து வருகின்றனர். இதனால் மற்றவர்களுக்கு குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் யுவராணி தலைமையில் ஊழியர்கள், 13வது வார்டு பகுதிக்கு நேரில் சென்று கள ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது, காவிரி நீர் வினியோகம் செய்யும்போது, வீடுகளில் மின் மோட்டார்கள் வைத்து நீர் உறிஞ்சுவது கண்டறியப்பட்டால், அவை பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.