வாழையில் மாவுப்பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த அதிகாரி யோசனை
வாழையில் மாவுப்பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த அதிகாரி யோசனை
ADDED : மே 18, 2026 01:44 AM
கரூர்:வாழையில்
மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து,
மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கரூர்
மாவட்டத்தில் குளித்தலை, கிருஷ்ணராயபுரம், தோகைமலை, க.பரமத்தி
ஆகிய வட்டாரங்களில், 6,790 ஏக்கர் வாழை சாகுபடி செய்யப்பட்டு
வருகிறது. வாழையில் தற்போது ஆங்காங்கே பரவலாக காய்களில்
மாவுப்பூச்சி தாக்குதல் காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக
வாழைப்பழங்களின் சந்தை மதிப்பு வெகுவாக குறைவதோடு விவசாயிகளுக்கு
வருமானமும் பாதிக்கப்பட வாய்புள்ளது.
தேசிய வாழை ஆராய்ச்சி மையம்
மூலம் வாழை குலைகளை தாக்கும், ஆறு வகையான மாவுப்பூச்சி இனங்களை
கண்டறியப்பட்டுள்ளது. இதில் சாம்பல் அன்னாசி மாவுப்பூச்சியின்
தாக்குதலே தீவிரமாக உள்ளது. இப்பூச்சி தாக்கப்பட்ட பழங்கள் கருப்பு
அல்லது பழுப்பு நிறமாக மாறிவிடும். இதன் காரணமாக சந்தை மதிப்பு
வெகுவாக குறைந்துவிடும். இம்மாவுப்பூச்சி, கற்பூரவள்ளி, பூவன்,
நெய்பூவன், நேந்திரன், செவ்வாழை போன்ற ரகங்களை அதிகளவில்
தாக்குகிறது.
மாவுப்பூச்சிகளை பாதிக்கப்பட்ட
வாழைதார்களிலிருந்து வெளியேற்றுவதற்கு சக்தி வாய்ந்த தெளிப்பான்
மூலம் நீரை பீய்ச்சி அடிக்க வேண்டும். மீன் எண்ணெய், புங்கம் எண்ணெய்
அல்லது வேம்பு எண்ணெய் போன்ற இயற்கை சார்ந்த மருந்து, ஒரு லிட்டர்
தண்ணீருக்கு, 10 மி.லி., என்ற அளவில் கலந்து தெளிப்பதன் மூலம்
மாவுப்பூச்சிகளை, 2-3 நாட்களுக்குள் கட்டுப்படுத்தலாம். மாதம்
இருமுறை இவ்வாறு தெளிப்பதன் மூலம் மாவுப்பூச்சி தாக்குதல் வராமல்
தடுக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
