/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தை அமாவாசையையொட்டி காவிரியாற்றில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பொதுமக்கள்
/
தை அமாவாசையையொட்டி காவிரியாற்றில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பொதுமக்கள்
தை அமாவாசையையொட்டி காவிரியாற்றில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பொதுமக்கள்
தை அமாவாசையையொட்டி காவிரியாற்றில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பொதுமக்கள்
ADDED : பிப் 10, 2024 07:31 AM
கரூர் : கரூர் அருகே நெரூர் காவிரியாற்றில், தை அமாவாசையையொட்டி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க, பொதுமக்கள் குவிந்தனர்.
தை அமாவாசையையொட்டி, புனித நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்வது வழக்கம். நேற்று தை அமாவாசை என்பதால், கரூர் மாவட்டத்தில் காவிரியாற்று பகுதிகளான தவிட்டுப்பாளையம், நன்னியூர் புதுார், வாங்கல், நெரூர், கட்டளை, மாயனுார், லாலாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் ஆற்றில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
மேலும் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், மாரியம்மன் கோவில், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில், அண்ணா நகர் கற்பக விநாயகர் கோவில்களில் பொதுமக்கள் சுவாமியை வழிபட்டனர்.
* குளித்தலை, கடம்பன் துறை காவிரி ஆற்றில் பொதுமக்கள் புனித நீராடி வாழை இலையில் தேங்காய், பழம், அரிசி, எள், காய்கறிகள் படையலிட்டனர். மறைந்த தங்கள் முன்னோர்களை மனதில் நினைத்து, எள் பிண்டம் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
பின்னர் அதனை காவிரி ஆற்றில் கரைத்தனர். தொடர்ந்து, அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று பசு மாடுகளுக்கு அகத்தி கீரை வழங்கினர்.
மேலும் கடம்பவனேஸ்வரர் கோவில், மாரியம்மன் கோவில், ரெத்தினகிரீஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர், முருகன், ஐயப்பன் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
* கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் செல்லாண்டியம்மன் கோவிலில், தை மாத அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. மாயனுார், திருக்காம்புலியூர், கரூர் பகுதியில் இருந்து ஏராளமானோர் வந்திருந்து அம்மனை வழிபட்டனர்.
* சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு பல்வேறு வகையான அபிேஷகம் செய்யப்பட்டது. மலர் மாலைகளால் அம்மன் காட்சியளித்தார்