நோ- பார்க்கிங் இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதால் அவதி
நோ- பார்க்கிங் இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதால் அவதி
ADDED : மே 08, 2026 03:07 AM

கரூர்:கரூர் நகரின், நோ பார்க்கிங் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் நெரிசல் ஏற்படுகிறது. கரூர் பஸ் ஸ்டாண்டை சுற்றி, கோவை சாலை, திருச்சி சாலை, தின்னப்பா கார்னர் சாலை, ஜவஹர் பஜார் சாலைகள் உள்ளன.
இந்த பகுதிகளில், ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளதால், காலை, மாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, ஜவஹர் பஜாரில் உள்ள பெரும்பாலான கடைகளுக்கு, பார்க்கிங் வசதி செய்யப்படவில்லை. இதனால், வியாபார நிறுவனங்களுக்கு வரும் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுகின்றன.ஆம்புலன்ஸ் வாகனங்கள் அடிக்கடி நெரிசலில் சிக்குவதால், நோயாளிகள் அவதிப்படுகின்றனர். மேலும், 'நோ-பார்க்கிங்' என, போலீசாரால் அறிவிக்கப்பட்ட பகுதிகளில், கார் உள்ளிட்ட வாகனங்களை பல மணி நேரம் நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதை, போக்குவரத்து போலீசார் கண்டு கொள்ளாமல் உள்ளனர். எனவே, நோ-பார்க்கிங் பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
