/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஈமச்சடங்கு உதவித்தொகை வழங்காததால் மக்கள் சிரமம்
/
ஈமச்சடங்கு உதவித்தொகை வழங்காததால் மக்கள் சிரமம்
ADDED : ஏப் 14, 2025 07:07 AM
குளித்தலை: தமிழகத்தில், பட்டியல் பிரிவை சேர்ந்த பொதுமக்கள் இயற்கை மரணமடைந்தால், அவர்களது குடும்பத்தாருக்கு அரசு மூலம் ஈமச்சடங்கு நிதி உதவித்தொகையாக, 5,000 ரூபாய், தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, குளித்தலை அடுத்த நல்லுார் பஞ்சாயத்து பகுதியில், பட்டியல் பிரிவை சேர்ந்தவர்கள் இயற்கை மரணமடைந்து, எட்டு மாதங்களுக்கு மேலாகியும், பஞ்சாயத்து நிர்வாகம் சம்பந்தப்பட்ட குடும்பத்தாருக்கு ஈமச்சடங்கு நிதி உதவித்தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. பாதிக்கப்பட்ட மக்கள், பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, யூனியன் கமிஷனர் விஜயகுமாரிடம் கேட்டபோது, ''அரசு நிதி ஒதுக்கீடு செய்தால், பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு ஈமச்சடங்கு நிதி உதவி வழங்கப்படும்,'' என்றார்.
மாவட்ட பஞ்., உதவி இயக்குனர் சரவணன் கூறுகையில், ''கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பஞ்., பகுதிகளிலும், பட்டியல் பிரிவை சேர்ந்த மக்கள் இயற்கையாக மரணமடைந்தால், ஈமச்சடங்கு நிதி உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அதற்கான நிதி வராததால், பொதுமக்களுக்கு உதவித்தொகை வழங்க முடியவில்லை. மீண்டும் அரசு வழங்கினால், சம்பந்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும்,'' என்றார்.

