/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல் போராட்டம்
/
காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல் போராட்டம்
ADDED : ஆக 05, 2025 12:59 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, புழுதேரி பஞ்., சீதப்பட்டி கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பஞ்., சார்பில் ஆழ்துளை குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இதில் அதிகளவு உப்பு தன்மை இருந்ததால், குடிக்க முடியாமல் பாதிப்புக்கு ஆளாகி வந்தனர்.
காவிரி குடிநீர் வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த மாதம் ஆர்.டி.மலையில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமில், கிராம மக்கள் சார்பில் காவிரி குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
ஆனால் மனு மீது நடவடிக்கை எடுக்காததால், பாதிப்புக்கு ஆளான கிராம மக்கள் நேற்று காலை 10:00 மணியளவில் சீதப்பட்டியில் யூனியன் நிர்வாகத்தை கண்டித்து, மாவட்ட ஐ.ஜே.கே. செயலர் பிரகாஷ் கண்ணா தலைமையில், காலி குடங்களுடன் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தோகைமலை எஸ்.ஐ., பாலசுப்பிரமணியன், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, யூனியன் கமிஷனர் ராஜேந்திரனை தொடர்பு கொண்டு பேசினார். இரண்டு நாட்களில் கிராம மக்களுக்கு காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.