/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மக்கள் பிரச்னை குறித்து பேச கூடாதா?
/
மக்கள் பிரச்னை குறித்து பேச கூடாதா?
ADDED : பிப் 01, 2024 12:16 PM
கரூர்: கரூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில்,'மக்கள் பிரச்னைகள் குறித்து பேச கூடாதா?' என அ.தி.மு.க., கவுன்சிலர் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் சாதாரண மற்றும் அவசர கூட்டம் மேயர் கவிதா தலைமையில் நடந்தது. விவாதத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
கவுன்சிலர் தினேஷ்(அ.தி.மு.க.,): இன்று (நேற்று) காலைக்கதிர் நாளிதழில், மூடி கிடக்கும் கரூர் மாநகராட்சி இறைச்சி கூடம் பெயரில், ஆடுகள் வெட்டுவதற்கு கட்டணம் மட்டும் வசூல் செய்யப்பட்டு வருகிறது என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. மாநகராட்சி பெயரை பயன்படுத்தி யார் வசூல் செய்கிறார்கள். அப்படி கட்டணம் வசூல் செய்ய டெண்டர் விடப்பட்டு இருந்தால், அது பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும்.
மேயர் கவிதா: செய்திதாள்களில் வெளியாகும் செய்திகள் பற்றி, கூட்டத்தில் கேள்வி கேட்கக் கூடாது. இருந்தபோதும், இறைச்சி கூடம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். யாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது என்ற தகவலை, மாநகராட்சி அலுவலகத்தில், அதற்குரிய அலுவலர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இந்த கூட்டத்தில் கேள்வி எழுப்ப வேண்டும் என்றால், கூட்டம் நடக்கும் மூன்று நாட்கள் முன்னதாக கேள்வியை சமர்ப்பிக்க வேண்டும்.
கவுன்சிலர் சுரேஷ் (அ.தி.மு.க.,): என் வார்டு பிரச்னை குறித்து கேள்வியை எழுதிக் கொடுத்த விட்டேன், அது குறித்து கேட்கலாமா?
மேயர் கவிதா: இந்த கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் குறித்த கேள்விகளை மட்டுமே கேட்க வேண்டும். மற்ற கேள்விகளை கேட்க கூடாது.
கவுன்சிலர் சுரேஷ் (அ.தி.மு.க.,): மக்கள் பிரச்னை குறித்து விவாதம் நடத்த தான் கூட்டம் நடத்தப்படுகிறது. அது குறித்து பேச கூடாது என்றால், எதற்கு கூட்டம் நடத்த வேண்டும்.
தொடர்ந்து சாதாரண மற்றும் அவசர கூட்டத்தில் கொண்டு வந்த அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.